Tuesday, September 16, 2008

“தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது” - பழ. நெடுமாறன்-5

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
... ... ... ...
எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அதன் இனம் கொதித்து எழவேண்டும். கொதிப்பு இல்லாமல் இருந்தால் என்ன பயன்?

இன்றைக்கு இந்த மாநாட்டிலே எனக்கு முன்னாலே பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராசாவும் சிவாஜிலிங்கமும் என்ன சொன்னார்கள்? அவர்கள் பேச்சு நம் நெஞ்சத்தை உலுக்க வில்லையா?
இவ்வளவு கொடுமை நடக்கிற பொழுது நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? என அவர்கள் கேட்டபோது நெஞ்சத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அல்லவா இருக்கிறது? அவர்கள் வேறுயாரிடம் போய் முறையிட முடியும்? நம்மிடம்தான் முறையிட முடியும். நம் பதில் என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டில் எழுச்சி மேலும் அதிகமாக வேண்டும். மேலும் மேலும் அதிகமாக வேண்டும். அச்சத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை மிரட்டி வருகிறார்கள். அச்சமே இல்லை என்பதை நாம் காட்டினால் இந்த ஆட்சி என்பது எங்கே போகும் என்றே தெரியாது. மிரட்டுகிறவர்கள் எங்கே போவார்கள் என்று தெரியாது.

தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது. யாரையும் எதுவும் செய்துவிட முடியாது. நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு என்று வந்து பார்த்த போது நகரம்-கிராமம் இல்லாமல் மக்கள் எல்லோரும் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்றுதான் கருத்துக் கணிப்பு நிரூபித்தது.

மக்கள் எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடிய அந்த உணர்வு என்பது நீறுபூத்த நெருப்பு போல இருக்கும். ஊதினால் பற்றிக் கொள்ளும். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனந்த விகடனைப் பாராட்டுகிறேன். மக்களை ரொம்ப நாட்கள் யாரும் ஏமாற்ற முடியாது.

புலிகள் புலிகள் என்று கூறிக்கொண்டு திடீர் வேட்டை நடக்கிறது. பொய்யான தகவல்களைத் தருகிறார்கள். தில்லியில் உள்ள எசமானர்கள் இவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். மக்கள் துணிந்து எழுந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

தொடரும்...