Wednesday, February 25, 2009

மருத்துவமனையில் கருணாநிதி மனவேதனையில் இருக்கிறார்!

எல்லோரும் நம்புங்கள்!

கருணாநிதி மனவேதனையில் இருக்கிறார்



நன்றி தினகரன்

Thursday, February 19, 2009

ப.சிதம்பரத்தின் ‘இராஜபக்சே’ குரல்! - விடுதலை க.இராசேந்திரன்

“இலங்கைத் தமிழர்கள் நம்மவர்கள்; அவர்கள் உணர்வும் நம் உணர்வும் ஒன்று தான்; அவர்கள் உரிமை மறுக்கப்பட்டால் நம் உரிமை மறுக்கப் படுவதுபோல் துடிக்கிறோம்” என்ற பீடிகையுடன் ப.சிதம்பரம் உரையாற்றுகிறார். இப்படி துடித்துப் போய் நிற்கும், ப.சிதம்பரத்தின் முழு உரையிலும் ராஜபக்சே இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை. ப. சிதம்பரத்தின் துடிப்பில் உள்ள நேர்மைக்கு இது மட்டுமே போதும்.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மயிலாப்பூரில் பெரும் பொருட் செலவில் ஒரு பொதுக்கூட்டத்தில் தனது வழக்கறிஞர் தொழில் திறமையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் உறுதியான ஈழத் தமிழர் ஆதரவு சிந்தனை யோட்டத்தை குலைக்கலாமா என்று முயற்சித் திருக்கிறார். நேர்மையற்ற, உண்மையற்ற வாதங்கள் வெற்றி பெற்றுவிட முடியாது. மாறாக இவர்களின் இனத் துரோகம் தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“பிரபாகரன் ஆயுதத்தைக் கீழே போடவேண்டும் எந்த இராணுவமும் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது” - என்கிறார் ப. சிதம்பரம். சிங்கள ராணுவம் ஏதோ, நாட்டு மக்களைப் பாதுகாக்கும் ராணுவத்தைப் போல ப. சிதம்பரம் பேசுகிறார். அற வழியில் ஜனநாயக முறையில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழர்களை ஆயுத முனையில் ஒடுக்கிய காரணத்தால்தான் போராளிகள் இயக்கமும் ராணுவத்தை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தும் நிலை உருவானது என்பது ப.சிதம்பரத்துக்கு தெரியாதா? தெரியும். ஆனாலும் தனது வழக்கை நிலை நாட்ட இப்படி எல்லாம் பொய்யான வாதங்களை முன் வைக்கிறார். சொந்த நாட்டு மக்களின் மீதே விமானக் குண்டுவீச்சு நடத்திடும் சிங்கள ராணுவம் ஏதோ, தமிழ் மக்களுக்கான ராணுவத்தைப் போல ப.சிதம்பரம் பேசும் வாதத்தின் நியாயத்தை மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

“எப்படி இந்தியா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தாதோ, அவ்வாறே இன்னொரு நாட்டைப் பார்த்து போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்து என்று கூறு முடியாது” என்று பச்சையாக பொய் கூறுகிறார், ப. சிதம்பரம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி தனிநாடு கோரும் இயக்கங்களோடு இதே இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதே; அவர்களோடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய் துள்ளதாக நாடாளுமன்றத்திலே அறிவித்தார்களே! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த (2006-2007 ஆம் ஆண்டு) உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை இதை அறிவித்ததே.

ஆயுதங்களைக் கீழே போடாத இந்த போராளி இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் உள்துறை செயலாளர் பத்மநாபய்யா என்ற அதிகாரிக்கு அதிகாரங்களை வழங்கியிருக்கிறார்களே!

1985 ஆம் ஆண்டில் பூடான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததே அப்போதைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தானே! இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் தம்பி, எச். டபிள்யூ ஜெய வர்த்தனே தலைமையில் இலங்கை அரசுவின் தூதுக் குழு போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதே. இதை எல்லாம் மக்கள் மறந்திருப் பார்கள் என்று கருதி, ப.சிதம்பரம் கதைவிடுகிறாரா?

அப்போது பேச்சு வார்த்தையில் பங்கேற்க வந்த எந்த போராளிக்குழுவிடமும், ‘ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு வா’ என்று எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லையே. மாறாக பேராளிகள் குழுக்கள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க நான்கு நிபந்தனைகளை முன் வைத்தார்கள்.

அவை என்ன? 1) ஈழத் தமிழர்கள் - ஒரு தேசிய இனம் 2) ஈழத் தமிழர்கள் தாயகத்தைக் கூறுபோடக் கூடாது 3) ஈழத் தமிழர்கள் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் 4) மலையகத் தோட்டத் தமிழர்களுக்கு முழுமையான குடி உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த நான்கு நிபந்தனைகளையும் இந்தியாவும், இலங்கை அரசும் அங்கீகரித்த பிறகு தானே அன்று போராளிகள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர்?

பேச்சு வார்த்தையில் பங்கேற்ற பல்வேறு போராளி குழுக்களும் முன் வைத்த அடிப் படையான நிபந்தனைக்கு எதிராக அரைகுறை அதிகாரங்களை மட்டும் இலங்கை வழங்க முன் வர, அந்த சொற்ப அதிகாரங்களையும் வழங்கக் கூடாது என்று சிங்கள புத்த பிட்சுகளும் எதிர்கட்சியான சுதந்திரக் கட்சியும் கலவரம் தொடங்கியதால் திம்பு பேச்சு வார்த்தையே முறிந்தது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி, தாம் ஏற்பாடு செய்த பேச்சு வார்த்தையையும் அதற்காக ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனையையும் மீறி செயல்பட்ட சிங்கள அரசை கண்டிக்க முன் வந்திருக்க வேண்டாமா? அதை ராஜீவ் செய்தாரா?

இல்லை மாறாக, போராளிகள் அமைப்புகளை முற்றாக ஓரம் கட்டி விட்டு ஜெயவர்த்தனாவோடு ராஜீவ் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஒப்பந்தத்தையும் இவர்களே தயாரித்துக் கொண்டு, அதை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று தனது அதிகாரவர்க்கத்தைக் கொண்டு மிரட்டினார். யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரனை ராணுவ விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு கொண்டு வந்து அசோகா ஓட்டலில் சிறைப் பிடித்து வைத்து மிரட்டினார்கள்.

“இன்னொரு நாட்டைப் பார்த்து போராளி களுடன் பேச்சு வார்த்தை நடத்து என்று சொல்ல முடியாது” (‘தினத்தந்தி’ பிப்.16) - என்று மயிலாப்பூர் மேடையில் முழங்கும் ப.சிதம்பரத்தைக் கேட்கிறோம்.

திம்பு பேச்சுவார்த்தைக்கு போராளிகளை அழைத்தது உங்கள் ராஜீவ் காந்தி தானே? இன்னொரு நாட்டின் பிரச்சினைக்காக அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதை அந்நாட்டு மக்கள் மீது திணிக்க முயன்றது நீங்கள் தானே! இதற்கெல்லாம் உங்களிடம் பதில் உண்டா?

இறையாண்மையில் தலையிடக் கூடாது என்று கூறும் ப. சிதம்பரம், பாகி°தான் இறையாண்மை யில் இந்திரா தலையிட்டு, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியதற்கு என்ன பதில் கூறுகிறாராம்?

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கப்பல் படையினர் சுட்டு கொல்வதற்குப் பெயர் என்ன? இது இறையாண்மையில் தலையீடு ஆகாதா? தமிழ்நாட்டில் இந்த மீனவர் படுகொலையை எதிர்த்து காங்கிரசார் எந்த ஒரு கண்டனத்தையாவது தெரிவித்தது உண்டா? விடுதலைப்புலிகளை எதிர்ப் பதற்காகவே கூட்டம் போட்டு பேசுகிறவர்கள், சொந்த நாட்டு மீனவனுக்காக பேசினார்களா?

மாறாக, தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப் படுவது எல்லாம் சிங்களர் கடல் பகுதியில் தானே, என்று, எதிர் கேள்வி கேட்டவர் தானே, பிரதமர் மன்மோகன் சிங்!

சரி; அந்த ராஜீவ் ஒப்பந்தத்தின் கதி என்னவாயிற்று? அந்த ஒப்பந்தத்தை முறித்தது யார்? ப.சிதம்பரம் கூறுகிறார்:

“அந்த உடன்பாட்டை பிரபாகரனும் அரை மனதாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்று, ஜெயவர்த்தனே வுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். அன்றே தனது மரண சாசனத்தில் ராஜீவ் கையெழுத்து போட்டார் என்பது அதன் பிறகே எங்களுக்கு தெரிய வந்தது” (தினத்தந்தி, பிப்.16) என்கிறார் ப.சிதம்பரம்.

உடன்பாட்டுக்கு கையெழுத்திடச் சென்ற ராஜீவ் காந்திக்கு இலங்கை அரசு தந்த ராணுவ அணிவகுப்பின்போது சிங்கள சிப்பாய், துப்பாக்கிக் கட்டையால் அடித்து, ராஜீவைக் கொலை செய்ய முயன்றானே; அதை மறந்தும்கூட ப.சிதம்பரம் குறிப்பிடாதது ஏன்? உண்மையில், அப்போதே ஒப்பந்தத்தை மரண சாசனமாக்க முயன்றது - சிங்கள வெறி அல்லவா? அதைக் குறிப்பிடாமல் தனது தலைவன் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியது சிங்களன் என்பதற்காக மூடி மறைப்பது தான் இவர், ராஜீவ் மீது காட்டும் உண்மையான பற்றுப் பாசமா?

உண்மையில், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகளுக்கு நம்பிக்கையே இல்லை. விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க அந்த ஒப் பந்தம் வற்புறுத்தியது. ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப் புலிகள் மறுத்தபோது ராஜீவ் காந்தியே பிரபாகரனை நேரில் அழைத்துப் பேசினார். அது பற்றி யாழ்ப்பாணத்தில் சுதுமலை எனுமிடத்தில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, மக்களிடம் பிரபாகரன் விளக்கி னார். (அந்த சுதுமலைக் கூட்டத்துக்கு இந்திய ராணுவமே தமிழகத்திலிருந்து பத்திரிகை யாளர்களை அழைத்துச் சென்றது. அந்தக் குழுவில் விடுதலை இராசேந்திரன் உடன் சென்றார்)

பிரபாகரன் தனது உரையில் இதுபற்றி குறிப்பிட்டது என்ன?

“எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்.

நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்தி லிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.

இப்படி, இந்தியாவை நம்பி ராஜீவ் காந்தியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தப் பிறகு, இந்தியா எப்படி நடந்து கொண்டது? ஒப்பந்தங்களை முறியடிக்கும் முயற்சிகளில் ஜெயவர்த்தனே இறங்கியபோது அதை ராஜீவ் கண்டித்தாரா? பிரபாகரனிடம் தனிப்பட்ட முறையில் சில வாக்குறுதிகளைத் தந்ததுபோல், ஜெயவர்த்தனா விடமும் பல ரகசிய வாக்குறுதிகளை வழங்கி, இரட்டை வேடம் போட்டார் ராஜீவ்.

ஜெயவர்த்தனாவுக்கு வழங்கிய ரகசிய உறுதி மொழிகளை அமுல்படுத்தவே ராஜீவ் முயன்றார்.

இன்று ப. சிதம்பரம் கூறும் அதே அறிவுரை யைத்தான் அன்று ராஜீவ் காந்தி செயல்படுத்த முயன்றார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் “அமைதிப்படை” தனது ஆதரவுக் குழுவான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியது, ஏதோ சாதாரண மனிதர் அல்ல; இந்திய ‘அமைதிப் படை’க்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த தளபதி ஹர்சிரத்சிங்கே - இந்த உண்மைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். அவர் எழுதுகிறார்:

போர் நிறுத்தத்தை சீர்குலைத்தது இந்தியாவே!

“Vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Later on, all ran into trouble. Because they did not stop arming the E.P.R.L.F. (Ealam peoples Revolutionary Liberation Front). ‘RAW’ was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they could’t stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual stand still. And the whole thing took an ugly turn. They started anti - I.P.K.F. demonstrations.”

“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள்.

காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆக°ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று எழுதுகிறார் ஹர்சிரத் சிங்! மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள் ளோம் என்று கூறினோம்.

அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987.

On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’

நியாயவான்களைப்போல் புனித வேடம் போடும் ப. சிதம்பரம் அவர்களே!

இந்தியாவின் நேர்மையான அதிகாரி அமைதிப்படைத் தளபதியின் இந்த கருத்துக்கு, நீங்கள் தரும் பதில் என்ன? இந்தியாவை நம்பி, இராஜீவ் உறுதியை நம்பி, ஆயுதங்களை ஒப் படைத்து, வெள்ளைக் கொடியின் கீழ் சமாதானம் பேச வந்த ஒரு தலைவனை சுடச் சொன்ன ராஜீவின் யோக்கியதைக்கு என்ன பதில் கூறுவீர்கள்?

விடுதலைப்புலிகளிடம் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, மற்றொரு குழுவிடம் ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசின் துரோகத்திற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? அதே துரோகக் குரலை இப்போது மயிலாப்பூர் பொதுக் கூட்ட மேடையில் நின்று கொண்டு புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்குமாறு கூற, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

புலிகள் ஆயுதம் ஒன்று தானே தமிழர்களின் பாதுகாப்பு! ஆயுதம் ஏந்தி ராணுவத்தின் ஆக்கிர மிப்பையும் இனப் படுகொலையையும் எதிர்த்தினால் தானே சிங்களம் சமாதானம் பேசவே முன் வந்தது! போராளிகள் ஆயுதம் ஏந்தாத காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து இலங்கையில் ஒற்றையாட்சி முறையை சட்ட மாக்கியவர்கள் தானே சிங்களர்கள்?

1957 இல் தந்தை செல்வா பண்டார நாயகாவுடன் செய்த ஒப்பந்தம் என்னவானது?

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தில் தமிழர்கள் தமிழைப் பயன்படுத்தலாம் என்றும், தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் கொண்டு வரப்பட்ட சட்டம், கிடப்பில் போடப் பட்டதே! இப்படி செல்வாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காகவே 1959 இல் அதிபர் பண்டார நாயகாவை சிங்கள புத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றானே! ஆயுதம் ஏற்காத காலத்தில் நடந்த இந்த அடக்குமுறை வரலாறுகள் ப. சிதம்பரங்களுக்குத் தெரியாதவையா?

ஒப்பந்தத்துக்குப் பிறகு இவ்வளவு துரோகங் களையும் செய்துவிட்டு, பிரபாகரனையே தீர்த்துக் கட்ட திட்டமிட்ட அதே காங்கிரஸ்கட்சியின் சிதம்பரம்தான் - இப்போது, “பிரபாகரன் சம்மதத் தோடு போடப்பட்ட ஒப்பந்தம் அது. அது நிறை வேறியிருந்தால் கடந்த 22 ஆண்டுகாலமாக தமிழ் மாநிலம் உருவாகியிருக்கும். தமிழன் ஒருவர் முதல்வராகியிருப்பார்” என்று காதில் பூ சுற்றுகிறார்.

வடக்கு- கிழக்கு மாநிலத்தில் ஒரு மாகாண சபையை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் உருவாக்கி, அதற்கு வரதராஜப் பெருமாள் என்ற தமிழனையும் பொம்மை முதல்வராக இந்திய ராணுவம் உடகார வைத்ததே; அந்த வரதராஜப் பெருமாள் என்ன ஆனார்? இந்திய ராணுவம் இந்தியாவுக்கு திரும்பி வரும் போதே தனது ராணுவ விமானத்தில் அந்த வரதராஜப் பெருமாளையும், அவரது குழுவினரையும் இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது. இன்று வரை அவர் இந்தியாவின் பாதுகாப்போடு பதுங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன காரணம்? ஈழத் தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக ராஜீவ் ஆட்சி, துப்பாக்கி முனையில் எதையும் சாதிக்க முடியும் என்று ஆணவத்தோடு செயல்பட்டது தானே!

பிரபாகரனை அப்போதே தீர்த்துக்கட்ட உத்தரவு போட்ட காங்கிரஸ்தான், ராஜீவ் மரணத்தையே மீண்டும் மீண்டும் பேசுகிறது. இந்திய ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை பிணமாக்கி, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, தமிழ் ஈழத்தையே பிணக்காடாக்கிய ராஜீவ் காந்தியின் செயல்கள் நியாயமானவை தானா?

ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்தி முடித்த பிரிட்டிஷ் அதற்குக் காரணமான ராணுவத் தளபதி டயரை அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனுக்குப் போய் சுட்டுக் கொன்று பழி தீர்த்த உணர்வுள்ள சீக்கியனை உக்கம்சிங்கை தியாகியாக போற்றுகிறவர்கள் - அதே தண்டனை ராஜீவ் காந்திக்கு கிடைக்கும் போது மட்டும் பதறுவது ஏன்? ராஜீவ் காந்தி மரணத்துக்காக ஈழத் தமிழினத்தையே பழி வாங்கத் துடிப்பதுதான் மனிதப் பண்பாடா?

“போரை நிறுத்துங்கள் என்று இலங்கை அரசிடம் கூறுகிறோம்; புலிகளிடம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்கிறோம்” என்று ஏதோ நடுநிலையாளர் போல் நாடகமாடுகிறார் சிதம்பரம். தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே சோனியா காந்தி தான். பிரணாப் முகர்ஜி, கொழும்புக்கு போய் திரும்பிய பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விடுத்த அறிக்கை போர் நிறுத்தத்தைப் பற்றி எதையும் குறிப்பிட வில்லையே.

மாறாக இலங்கையின் ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்று, 23 ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்தது” என்று இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையைக் கொண்டாடி மகிழ்ந்தது இந்திய அரசின் அறிக்கை. ப.சிதம்பரத்தால் இதை மறுக்க முடியுமா?

“தனிமனிதன் கையில் அதிகாரம் கொடுப்பதா தீர்வு?” என்று கேட்கிறார், ப.சிதம்பரம். பிரபாகரன் தனி மனிதன் அல்ல. அவர் தமிழ் ஈழத்தின் பிரதிநிதி. இந்த உண்மை சிறீலங்கா ஆட்சிக்கே தெரியும். நார்வே நாடு சமரச முயற்சியில் ஈடுபட்டபோது, அதன் காரணமாகத்தான் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளோடு போர் நிறுத்த உடன்பாடு செய்து பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தது. போர் நிறுத்த உடன்பாடு உருவாகி, விடுதலைப்புலிகள் மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டதைப் பொறுக்க முடியாத இந்தியப் பார்ப்பன ஆட்சி, தனது நயவஞ்சகத்தால் போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சிகளிலும் இறங்கியது. கருணா குழுவை உருவாக்கியதில் ரணில் ஆட்சிக்கு உதவியதே இந்திய உளவுத் துறை தானே!

போர் நிறுத்த ஒப்பந்தம் உருவான பிறகு, அரசியல் தீர்வுக்காக தன்னாட்சி சபைத் திட்டத்தை சர்வதேச சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசி உருவாக்கி, விடுதலைப்புலிகள் முன் வைத்த போது அதை குலைப்பதற்கு பின்புலமாக செயல்பட்டது இந்திய உளவு நிறுவனம்தானே!

அப்போது அதிபராக இருந்த சந்திரிகா, தீர்வுத் திட்டத்தை எதிர்த்து ரணில் ஆட்சியைக் கவிழ்க்கும் நிலையை உருவாக்கியபோது - தீர்வு திட்டத்தை ஏன் குலைக்க வேண்டும் என்று இந்தியா தட்டிக் கேட்டதா? அடுத்து பதவிக்கு வந்த ராஜபக்சே, சமரச உடன்பாட்டை தூக்கி எறிந்து புலிகளை ராணுவத்தால் சந்திப்பேன் என்று சிங்களர்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து தானே பதவிக்கு வந்தார் என்பதை ப. சிதம்பரம் மறுக்க முடியுமா?

விடுதலை புலிகளை பழிவாங்குவதையும் சமரச முயற்சிகளைக் குலைப்பதையும் சிங்கள அரசுக்கு முண்டு கொடுப்பதையும் வஞ்சகமாக ராணுவ உதவிகளை வழங்குவதையும் ராஜீவ் காலத்திலிருந்து தொடங்கி, செயல்படுத்தி வரும் துரோக சக்திகள், இப்போது நீலிக் கண்ணீர் வடித்து, ‘நியாயவான்’ வேடம் தரிப்பதை தமிழர்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.

‘ராஜபக்சே எதைப் பேசுகிறாரோ, அதையே தான் நாங்களும் பேசுவோம்’ என்று ப.சிதம்பரங்கள் நாட்டுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இந்த தமிழ்நாட்டு ‘ராஜபக்சேக்கள்’ வாக்கு கேட்க வரும் காலம் நெருங்கி வருகிறது.

துப்பாக்கித் தோட்டாக்களைவிட வலிமை யான வாக்கு வேட்டுகளால் இவர்களை தமிழக மண்ணிலிருந்து தூக்கி துரத்தி அடிக்க, தமிழக வாக்காளர்களே தயாராவீர்! தயாராவீர்!

நன்றி: தமிழ்வின்.காம்

Thursday, February 12, 2009

உலக நாடுகளே! நாங்களும் மனிதர்கள்தான்!

உலக நாடுகளே!
நாங்களும் மனிதர்கள்தான்,
உங்களைப்போன்று...

நாங்கள் முற்றிலுமாக
அழிந்து போக நீங்கள்
விரும்புகிறீர்களா?

உங்கள் விருப்பம் அதுவாக இருக்காது
என நாங்கள் நம்புகிறோம்...
ஆம். நிச்சயமாக நம்புகிறோம்...

எங்களுக்காக
நீங்கள் செய்ய வேண்டியது
இதுதான்...,

எங்களையும் மனிதர்களாக
ஏற்றுக்கொள்ளுங்கள்...

நாங்கள் நிம்மதியாக வாழ
நாங்கள் கட்டமைத்த
தமிழீழ அரசை ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழீழத்தின் மீது
சிங்கள இனவெறி அரசு நடத்தும்
ஆக்கிரமிப்பு போரை உடனே தடுத்து நிறுத்துங்கள்...

தமிழீழத்தை
விடுதலை பெற்ற சுதந்திர
நாடாக ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான
தடையை நீக்குங்கள்...

தமிழின அழிப்புப் போரை
தொடர்ந்து நடத்தும்
சிங்கள இனவெறி அரசை
தடுத்து நிறுத்துங்கள்...

தமிழின அழிப்புப் போருக்கு
துணைநிற்கும் இந்திய அரசை
கண்டியுங்கள்...

இப்புவியில்
சுதந்திர காற்றை சுவாசிக்க
எங்களையும் அனுமதியுங்கள்...

Monday, February 9, 2009

தமிழீழ விடுதலை - ஆதரவு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைமையிடம் திட்டம் தயார்!

இலங்கைத் தீவில் உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிங்கள இனவெறி அரசு தமிழின அழிப்பு போரை கடந்த 60 ஆண்டுகளாக நடத்திவருகிறது என்பதும்,

இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் தமிழர்கள் அனைவரும், தங்களின் எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாக உயிர்வாழ தமிழர்களுக்காக “தமிழீழம்” என்ற தனி நாடு அமைய போராடி வருகிறார்கள் என்பதும்,

இலங்கைத் தீவில் தமிழீழ தனிநாடு வேண்டி அரை நூற்றாண்டாக சனநாயக முறையிலான போராட்டங்கள் நடந்தது என்பதும், அத்தகையப் போராட்டங்களுக்கு சிங்கள இனவெறி அரசுகள் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமே பதில் சொன்னது என்பதும்,

சிங்களர்களுக்கு தெரிந்த வழியிலேயே தமிழ் இளைஞர்கள் போராளிக்குழுக்களாக மாறி அவர்களுக்கு பதில் சொன்னதும்,

போராளிக்குழுக்கள் அனைத்தும் இன்று ஒற்றைத் தலைமையில் ஓரணியில் திரண்டு சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக தங்கள் விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பதும்,

சிங்களர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்று ஈழத் தமிழர்களால் கட்டமைக்கப்பட்ட “தமிழீழ அரசின்” ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட “தமிழீழ நாட்டின்” மீது சிங்கள இனவெறி அரசு தற்போது ஆக்கிரமிப்புப் போரை நடத்தி வருகிறது என்பதும்,

...

“தனக்கு அருகில் மொழியாலும், அறிவாலும், வீரத்தாலும், மரபாலும் சிறந்து விளங்கும் “தமிழினம்” தனக்காக சுயாட்சி கொண்ட ஒரு ஆட்சிப்பரப்பை அடைந்து விடக்கூடாது“ என்று இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதும்,

தன்னலம் கருதாது, சுயசிந்தனையுடைய, மனிதநேயம் உள்ள, இனமானம் கொண்ட “மானிடன்“ ஒவ்வொருவனும் அறிந்த உண்மையாகும்.

...


இந்த உண்மை அனைத்தையும் மறைத்துவிட்டு,

“தன் நலனே தமிழினத்தின் நலனாகவும், தனது துன்பமே தமிழினத்தின் துன்பமாகவும், தன் குடும்ப சிக்கலே தமிழினத்தின் சிக்கலாகவும், தன் குடும்பத்தின் மகிழ்ச்சியே தமிழினத்தின் மகிழ்ச்சியாகவும் ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் தமிழர்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ என்று தனது ஊடக பலத்தின் மூலம் தி.மு.க. தலைமை பரப்புரை செய்து செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தன்னெழுச்சியாக கொழுந்து விட்டு எரியும் தமிழின உணர்வை தி.மு.க. தலைமையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “தமிழினத் தலைவர்” என்ற பட்டம் தன்னிடமிருந்து பறிபோய்விடுமோ என்ற அச்சம் தி.மு.க. தலைமைக்கு வந்துவிட்டதே இதற்குக்காரணம்.

இதற்காக மருத்துவமனையில் “ரூம்போட்டு” சிந்தித்தது தி.மு.க. தலைமை. திட்டம் தயார்!

...

திட்டம் – 1: அடக்குமுறை சட்டங்களுக்கு அஞ்சாமல் உண்மையாக தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக செயல்படும் தலைவர்களையும், இயக்கங்களையும், தமிழின உணர்வாளர்களையும் ஓர் அணியாக திரளச் செய்வது,

அந்த அணியைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தன்னால் உருவாக்கப்பட்ட அணியின் மூலம் தொடர்ந்து இழிவுபடுத்துவது,

அவர்களுக்குள் முரண்பாடுகளை செயற்கையாக உருவாக்கி அதை ஊதி பெரிதாக்கி அவர்களுக்குள் பிளவை உண்டாக்குவது,

தேர்தலுக்குள் அந்த இயக்கத்தை நீர்த்துப்போகச் செய்வது,


திட்டம் – 2: தமிழகத் தமிழர்களின் எழுச்சியை இரண்டாவது முறையாக தனதாக்கிக் கொள்வது,

அதற்காக பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மனித சங்கிலிகள் தொலைக்காட்சிகள் நடத்துவது, அந்த நிகழ்வுகளில் உண்மையான தமிழின உணர்வாளர்களை இழிவுபடுத்துவது,

எதிர்வரும் தேர்தலில் வாக்குகளைச் சேகரிக்க தமிழீழ சிக்கலை பயன்படுத்திக்கொள்வது,


திட்டம் – 3: இந்திய பேரரசின் உதவியோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைக்காக களத்தில் போராடும் போராளிகளையும் அழிப்பது,

போராளிகளை அழித்து விட்டு இந்தியாவில் உள்ள தலைவர்களைப் போல் சொகுசு வாழ்க்கையில் நன்கு பழக்கப்பட்ட தலைவர்களை தமிழீழ மக்களின் தலைவர்களாக அடையாளம் காட்டுவது, அந்தத் தலைவர்கள் தி.மு.க. தலைமையை தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருக்க அவர்களை சென்னையில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து “ஏற்பாடுகளையும்” செய்வது,

பிறகு ஒரு வேளை சோற்றுக்காக சிங்களனிடம் ஈழத்தமிழர்களை கையேந்த வைத்து விட்டு, குப்பை அள்ளுவதற்கும்; சாலைகள் போட்டு தரகுக்சகூலி வாங்குவதற்கும் அதிகாரம் கொண்ட ஒரு அரசு அமைத்து, தமிழீழ மண்ணில் மலிவு விலை மதுக்கடை, குடும்ப குழுமத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, குடும்ப குழுமம் தயாரிக்கும் திரைப்படங்கள் வெளியிடுவது, போன்ற விடுதலையை தமிழீழ மக்களுக்கு பெற்றுத் தருவது,

இவையை தி.மு.க. தலைமையின் செயல்திட்டம்...

வாழ்க! “தமிழினத் தலைவர்“ மு.க.

Tuesday, February 3, 2009

தமிழீழ விடுதலை-ஆதரவு போராட்டத்தை இழிவுபடுத்த தி.மு.க. தயாராகிவிட்டது!

இலங்கைத் தீவில் தமிழர்களே மண்ணின் மைந்தர்கள். அந்தத் தீவில் கால்வைத்த நாள் முதல் இன்றுவரை வந்தேறி இனமான சிங்கள இனவெறி அரசுகள் அனைத்தும் தமிழனத்தை பூண்டோடு அழித்தொழிக்கும் பணியை செய்து வருகிறது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழகத் தமிழர்கள் அவர்களை பாதுகாத்து எதிரிகளை விரட்டியடிக்க துணைநின்றுள்ளனர். இந்நிகழ்வும் வரலாற்று காலந்தொட்டு இன்றுவரை நடந்துவருகிறது.

வரலாற்று காலந்துதொட்டு இன்றுவரை தமிழர்களுக்குள் பகையை தூண்டிவிட்டு, அவர்களுக்குள் சண்டையிட்டு, போரிட்டு தமிழன் குருதி வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கைப் பார்த்து, கைகொட்டி சிரித்து, தமிழனின் குருதியை குடிக்கும் குள்ளநரிக் கூட்டங்களுக்கும், தமிழினத் துரோகிகளுக்கும் தமிழின வரலாற்றில் பஞ்சமில்லை...

...

இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மிகப்பெரிய அவலமாக தமிழீழ மண் சிவந்துகொண்டிருக்கிறது. தமிழினம் கொத்துக் கொத்தாக பூவோடும் பிஞ்சோடும் சிங்கள இனவெறி அரசால் கொன்று அழிக்கப்படுகிறது.

சிங்கள அரசின் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்துநிறுத்தக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது. அது கடந்த ஆறு மாதமாக தீவிர போராட்டமாக மாறி இன்று வீரமரணம் வரை சென்று கொண்டிருக்கிறது.

தமிழீழ ஆதரவு போராட்டம் இந்த அளவிற்கு தீவிரமடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? யார்? என்பது தமிழனுக்குப் பிறந்த ஒவ்வொருவனுக்கும், தமிழின உணர்வாளனுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.

...

இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து முடிவெடுக்க தமிழ் நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க. இன்று செயற்குழுவை கூட்டி தமிழினத்தின் விடியலுக்காக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

தி.மு.க.-வின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவரான முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்னையானாலும், தமிழ் தொடர்பான எந்த பிரச்னையானாலும் அதற்கு குரல் கொடுத்து போராட திமுக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட திமுக, இன்று ஒரு முக்கியமான காலக் கட்டத்தில் உள்ளது.

இப்போது தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக சில புதிய குரல்கள் ஒலிக்கிறது.

தமிழர் விடுதலை இயக்கங்கள் ஒரே இயக்கமாக விளங்கவில்லை.
அவர்களிடம் ஒற்றுமை இல்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.

இந்த கொடுமைகளை எல்லாம் மறந்து தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்கிறோம்.

திமுக இதையே வலியுறுத்தி வருகிறது.

நாங்கள் குரல் கொடுப்பது இலங்கை தமிழர்களுக்காக மட்டுமே.

தமிழகத்தில் உள்ள தலைவர்கள் காப்பாற்றுவார்கள் என்று இலங்கை தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள். எனவே நாமும் ஆயுதம், ராணுவம், போர் என்பதை ஆதரிக்காமல் தமிழர்களின் சக்தி ஜனநாயகம் மூலம் கூட்டப்பட வேண்டும் என்று இங்கு தீர்மானம் கொண்டு வரவுள்ளோம்.

தமிழ்நாட்டில் சிலர் திடீரென இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று பாவனை காட்டுகிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் 'எல்லாம் முதல்வர் தான் சொல்ல வேண்டும்' என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறார்.

ஈழம் பற்றி பேச, வெளி நாட்டு தமிழர்கள் பற்றி பேச, திராவிட இயக்கங்கள் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது.

தமிழர்களுக்காக போராடுவது போல சிலர் நாடகம் ஆடுகிறார்கள்.

ஆட்சியை விட்டு வெளியே போகிறோம் என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது.

இவ்வாண்டுக்குள் திமுக முடிந்து, எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார்.

இலங்கை பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது.

நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள்.

திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மேலும்,

இலங்கை பிரச்னைக்காக பட்டி தொட்டியெங்கும் கூட்டம், பேரணி, மாநாடு நடத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளது.

...

தி.மு.க. பட்டி தொட்டியெங்கும் நடத்தப் போகும் பேரணி, கூட்டம், மாநாடு போன்றவை எதை நொக்கி இருக்க வேண்டும். எப்படி பேசவேண்டும் என்று மு.கருணாநிதி தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்...

தி.மு.க.-வின் மேடைகளில் தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெறும் தமிழீழ ஆதரவு போரட்டமும் கொச்சைப்படுத்தப்படும். அப்போரட்டத்தில் ஈடுபடுபவர்களும், அதன் தலைவர்களும் கொச்சைப்படுத்தப்படுவார்கள்...

மொத்தத்தில் தமிழீழ விடுதலை-ஆதரவு போராட்டத்தை இழிவுபடுத்த தி.மு.க. தயாராகிவிட்டது!

...

தமிழர்களே!
நாம் என்ன செய்யப் போகிறோம்???????????????????????