Monday, March 2, 2009

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த வள்ளிப்பட்டு சீனிவாசன் மரணம்

இலங்கையில் தமிழ் மக்கள் இரக்க மில்லாமல் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதை கண்டித்து 26ஆம் தேதி நள்ளிரவு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேமுதிக கிளைச்செயலாளர் தீக்குளித்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன். இவருக்கு வயது 36. இவர் சிறுவயது முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து, வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளராக இருந்து வந்தார்.

இவர் 26ஆம் தேதி மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்துநிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரினால் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இரவு வீட்டுக்கு வந்தவர், டி.வி.யை பார்த்துள்ளார். டி.வி.யிலும் ஈழப்பிரச்சனை குறித்த படம் ஓடியது. இதைப்பார்த்த சீனிவாசன், இலங்கையில் இப்படி கொடுமை நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு 10.50 மணிக்கு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேணை தீடிரென எடுத்துக்கொண்டு, தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு போனார். தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீக்குளித்த சீனிவாசன் காவல்துறையினரிடம் கூறுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள். இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.

தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக் கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை கேப்டனிடம் (விஜயகாந்த்) சொல்லுங்கள் என்றார் சீனிவாசன்.

வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சீனிவாசன் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார்.

இவரின் உடல் அடக்கம் அவரின் சொந்த கிராமத்தில் நாளை மதியம் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் அனைத்து தேமுதிக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இறந்து போன சீனுவாசனுக்கு அம்மு என்ற மனைவியும், 9 வயதில் 4வது படிக்கும் சிவா என்ற மகனும் உள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

1 comments:

said...

என்னை பொறுத்த வரை இது போன்று இறப்பவர்கள் கோழைகள். தமிழர் பிரச்சைனைக்காக எதிர்த்து போராடுபவர்களே உண்மையான போராளிகள்.அதை விட்டுட்டு சாகும் போது கேப்டனே தமிழனை காப்பாத்துங்கன்னா., இது என்ன கேப்டன் பிரபாகரன் படமா, குதிரையில போயி ராஜபக்சேவ தூக்கிட்டு வர, அப்போ நீ யாரு? தமிழன் தானே, 4 வயது குழந்தை, மனைவியே பற்றி கொஞ்சம் கூட போசிக்காம் போயிருக்கான், நீ செத்தா இலங்கை தமிழர் பிரச்சைனை தீறுமா.? இதை வேனும்னா தினத்தந்தி பேப்பர்ல கட்டம் கட்டி ஓரு நாள் போடலாம்.