Tuesday, March 10, 2009

மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்

மகாத்மா காந்தியை நினைக்க வேண்டியவர்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள் காந்தியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால், இதை இந்திய அரசியலின் நகைமுரண் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது!

காந்தியின் உடைமைகள்- ஒரு மூக்குக் கண்ணாடி, இரண்டு பாத்திரங்கள், காலணி -ஆகியவற்றை ரூ.9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார் மதுபான உற்பத்தி உள்பட பல்வேறு பெருந்தொழில்களை நடத்தி வரும் விஜய் மல்லையா. ஏலம் முடிந்த பிறகுதான், இந்தப் பொருள்களை வாங்கியவர் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா என்பதே தெரியவந்தது.

விஜய் மல்லையா இந்திய மக்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்குரியவர். காந்தியின் கொள்கைக்கு மாறுபட்ட தொழில் செய்பவர் என்றாலும், காந்தியின் கொள்கையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்க்கு இல்லாத ஆர்வமும், இந்திய உணர்வும் அவருக்கு இருந்தது என்பதால் அவர் இந்த பாராட்டுக்கு முழுத் தகுதியுடையவர்.

"இந்திய அரசு சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை. இது முழுக்க முழுக்க எனது சொந்த முடிவு' என்று குறிப்பிட்டுள்ள விஜய் மல்லையா, இரண்டாவது முறையாக இந்திய மானம் ஏலம் போவதைத் தடுத்துள்ளார்.

முன்பு, 2005-ம் ஆண்டில் திப்பு சுல்தானின் வீரவாள் உள்பட 30 பொருள்களை சோத்பே ஏல நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்தபோது ரூ.8 கோடிக்கு அந்தப் பொருள்களை வாங்கி, பெங்களூர் கொண்டுவந்து சேர்த்த பெருமை விஜய் மல்லையாவுக்கு உண்டு. திப்பு சுல்தானின் வீரவாளை பெங்களூருக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்காக அவருக்கு பெங்களூரில் மிகப்பெரிய விழாவும் எடுக்கப்பட்டது. அதேபோன்று, காந்தி நினைவுப் பொருள்களை ஏலத்தில் எடுத்து இந்திய மானத்தைக் காப்பாற்றியதற்காக இன்னொரு விழா நடத்தப்படலாம்.

காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்ட இந்தச் சம்பவத்தில் இந்திய அரசும், காந்தியின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சியும் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது. காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுப்போம் என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வீரவசனம் பேசினாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலமாக ஓடிஸýடன் பேச்சு வார்த்தை நடத்தினார்களே தவிர, அதையும் முறைப்படி செய்து, பொருள்களை மீட்பதில் தீவிரம் காட்டவில்லை.

"ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் ஒரு பகுதியை ஏழைகளின் உடல் நலத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓடிஸ் கோரிக்கை வைத்ததாகவும் அதை அரசு நிராகரித்துவிட்டதாகவும், செய்திகள் வந்ததே தவிர, அரசுத் தரப்பில் என்னப் பேசப்பட்டது என்ற விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை.

இந்தப் பொருள்கள் எப்படி ஓடீஸ் கைக்கு சென்றது, அல்லது இந்த உடைமைகள் நவஜீவன் அறக்கட்டளைக்குத்தான் சொந்தம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமான விவகாரங்கள். இது மிகக் குறுகிய காலத்தில் தீராத பிரச்னை. ஏலத்தை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசே அப்பொருள்களை மீட்க ஏலத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஒருவேளை, இந்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏலத்தொகை உயரக் காரணமாகும் என்று கருதியிருந்தால், வேறு ஆட்கள் மூலம் ஏலம் எடுத்து, பின்னர் உலகம் அறிய தெரிவித்திருக்கலாம். ஆனால் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசுதான் இப்படியென்றால், காந்தியின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் எந்த விதமான முயற்சியையும் செய்யவில்லை. ஒருவேளை, நேருவின் நினைவுப் பொருள்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டால் அதற்காக வேண்டுமானால்- அதுவும் சோனியா காந்தியின் கவனத்தைப் பெற்று ஆதாயம் பெறுவதற்காக- ஏலத்தில் இறங்கி, காங்கிரஸ் கோஷ்டியினரே விலையை உயர்த்தி, பொருளை வாங்கி வந்து சேர்த்திருப்பார்களோ என்னமோ! அல்லது காந்தியின் கண்ணாடிக்கு குஜராத்தில் ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்றாலோ அல்லது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்றாலோகூட, ஏலத்தில் இறங்கியிருக்கக்கூடும்.

ரஷிய நாவலாசிரியர் லியோ தால்ஸ்தஸ்தோய் எழுதிய "போரும் வாழ்வும்' நாவலில் இடம்பெறும் முக்கிய நாயகர்களில் ஒருவர் இளவரசர் ரஸ்தோவ். தந்தையின் மரணத்திற்குப் பின் பெரும்கடன் சுமையால் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அவரது சுற்றத்தார் அறிவுரை சொல்கிறார்கள்: "என் தந்தைக்கு மகன் என்ற உறவை நான் முறித்துக்கொள்கிறேன் என்ற ஒரு அறிவிப்பு போதும், தந்தையின் கடன்கள் உங்களைக் கட்டுப்படுத்தாது' என்று. ஆனால், "உயிரோடு இருக்கும்வரை செய்யமாட்டேன்' என்று சொல்லி அந்தக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் இளவரசர் ரஸ்தோவ். மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்.

தேசத்தை மதிக்கத் தெரிந்தவர்கள்தானே தேசத் தந்தையையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்!

நன்றி: தினமணி - 10.03.2009 - ஆசிரியர் தலையங்கம்

1 comments:

said...

But, TN Congress fools wants:
1)Rahul brand soap
2)Priyanka brand soup
Sonia brand shampoo