Tuesday, September 9, 2008

“யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை”பழ. நெடுமாறன்-1

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது.

உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர்கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத்திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப்பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர்களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் பெருமைப்பட இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாலே பேசிய நண்பர்கள் வெவ்வேறு தலைப்பிலே உங்களுக்குப் பல விஷயங்களை மிக அழுத்தமாகப் பதியவைத்தார்கள். நாம் ஒன்றுபட வேண்டும் - தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எல்லோர் பேச்சிலும் ஒலித்தது. இன்றைக்கு தமிழினம் முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஒருகாலத்தில் பாராண்ட இனமாகவும் - ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளை அடக்கியாண்ட இனமாகவும் - மேற்கே உரோமாபுரி கிழக்கே சீனா வரையிலும் பல நாடுகளுடன் வணிகம் நடத்தி செழுமை அடைந்த இனமாகவும் - நம்முடைய இனம் இருந்தது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் இப்படிப் பல இலக்கியச் செல்வத்தை நிறையப் பெற்ற ஓர் இனமாக நம் இனம் விளங்கி வந்திருக்கிறது. எல்லாம் பழம் பெருமை. ஆனால் இன்றைக்கு நம் தமிழ் உலக அரங்கில் இடம் பெறத்தக்க நிலையை அடைந்திருக்கிறது.

தமிழர்கள் - உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த இனங்களில் ஒன்றாக ஆகி இருக்கிறார்கள். உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழ் வளர்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் ஆங்கிலத்தைத் தமிழ் விஞ்சும் என்னும் நிலை வரும்.

தமிழின் மதிப்பு கூடக்கூட அதற்கேற்றபடி தமிழர்களும் உயர வேண்டும். தமிழர்களின் நிலையும் உயரவேண்டும். தமிழும் தமிழர்களும் இணைந்து உயர்ந்தால் தான் நமக்கு வாழ்வு. ஒன்று உயர்ந்து ஒன்று உயரவில்லை என்றால் நமக்கு வாழ்வில்லை.

உலகம் முழுவதிலும் தமிழர் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதற்கு முன் பேசிய நண்பர்கள் உலகின் பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றியும் ஈழத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றியும் - சொந்த மண்ணில் வாழ முடியாத அகதிகளாக வாழ்கிற புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் பேசினார்கள்.

இப்படி ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் - நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைகளாக உழைப்புச் சுரண்டப்பட்டு அதனால் ஆங்கிலேய வர்க்கம் கொழித்தது - அந்த வர்க்கத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் ரொம்ப முக்கியமானது என்று சொன்னால் 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், அதே போல மொரீசியசு, ரீயூனியன், மற்றும் தென்ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இப்படி பலவற்றிலும் நம் தமிழர்கள் கப்பல் கப்பலாகக் கொண்டு போகப்பட்டார்கள்.

அதிலும் யார் குறிப்பாக வெள்ளையர் விரித்த வலையில் சிக்கியவர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த வலையில் சிக்கினார்கள். அக்கறைச் சீமைக்குப் போனால் நாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி அவர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதி ஒடுக்குமுறைத் தொல்லையிலிருந்து தப்பினால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வெளியேறத் துணிந்தனர்.

மேற்கண்ட நாடுகளில் எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பரவினார்கள். தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை வளம் கொழிக்கச் செய்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா? என்றால் இல்லை. இன்றைக்கும் அந்த நாடுகளில் அவர்கள் வாழ்விற்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் 5-6 தலைமுறைகளாக அன்னிய மண்ணில் வாழ நேர்ந்த காரணத்தினால் அந்த மக்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

தென்ஆப்பிக்காவில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சில ஆயிரம் பேருக்குத் தான் தமிழ் தெரியும். ஆங்கிலம் தாய் மொழி ஆகிவிட்டது. மோரிசியஸ் வாழ் தமிழர்கள் பிரஞ்சு, கிரியோலி போன்றவற்றையும் பேசுகிறார்கள். தாய்த் தமிழகத்தின் அரவணைப்பு இல்லாமல் அவர்கள் எல்லாம் அங்கே மொழியையும், பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் மொழியை இழந்து இன்னும் தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க வேண்டிய அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் தங்கள் மொழியை-பண்பாட்டை- கலை-இசை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். அக்கறையாக இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தாலும் கடின உழைப்பின் காரணமாக ஓரளவிற்கு நல்ல வாழ்க்கையைப் பெற்ற பிறகு திருப்தி அடையவில்லை. மாறாக தங்கள் மொழி - தங்கள் பண்பாடு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் - குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். இன்று அந்த நாடுகளிலே தமிழர்களும் தமிழ்க் குழந்தைகளும் மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் வாழ்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அதே காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் கதி என்ன? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியைக் காக்கவும் பாதுகாத்துத் தீர வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளில் போராடுகிறார்கள். ஆனால் நம்முடைய தாய்த் தமிழகத்திலிருந்து எந்த அரவணைப்பும் இல்லாததனால் மொழியை இழந்து பண்பாட்டை இழந்து எப்படியோ ஆகிவிட்டார்கள். இந்தப் போக்குகளை நாம் எவ்வளவு விரைவில் களைகிறோமோ அந்த அளவுக்கு உலக அரங்கில் தமிழர்கள் உயர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதை நாம் செய்தாக வேண்டும்.

தொடரும்...

0 comments: