Thursday, September 11, 2008

“வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும்” - பழ. நெடுமாறன்-4

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

... ... ...

1949-ஆம் ஆண்டு செஞ்சீனம் பிறந்தது. பர்மா முதல் - பிலிப்பைன்சு வரை உள்ள தென்கிழக்காசிய நாடுகளில் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள். மலேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும், சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும் சீனர்கள் இருக்கிறார்கள். அப்போது மாசேதுங் சொன்னார்கள். ஆசிய நாடுகளில் வாழக்கூடிய சீனர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இல்லையேல் செஞ்சீனா சும்மா இருக்காது என்றார். எனவே தான் இன்றளவும் சீனர்கள் என்றால் பயப்படுகிறார்கள். தமிழன் என்றால் அப்படிப்பட்ட நிலை இல்லை. வலிமையான செஞ்சீனம் தான் வெளிநாடுகளில் வாழும் சீனர்களைக் காக்கிறது.

வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும். அதுதான் அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு. மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் தமிழர்கள் வலிமையோடு மாறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் நடக்காது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் - நடுவர் குழு தீர்ப்புகள் வந்தால் உடனடியாக கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எப்படி சரியாக இருக்க முடியும்? நம்முடைய வலிமையை நாமே உணரவில்லை.
நாம் எத்தகைய மக்கள்? நம் வலிமை என்ன? நம்மை நாமே உணர வேண்டும். உணர்ந்தாலொழிய வேறு வழியில்லை. மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்க முடியும். யாராவது திசைதிருப்ப நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு சகல பிரச்சினைகளைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டுமென்று சொன்னால் தானாகவே திருந்தி விடுவார்கள்.. எவனும் வாலாட்டத் துணியமாட்டான்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேரை சிங்களப் படை கொல்லும் என்றால் - ஒரு இனம் வாழ்ந்து என்ன? போய் என்ன? நம்முடைய மீனவர்களை நம் கடல் பகுதியிலே வந்து அடிக்கிற துணிவு எப்படி வருகிறது? இந்திய அரசு தலையிடாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. அப்படியானால் தில்லியைப் பணியவைக்க வேண்டுமென்றால் - இப்படியெல்லாம் நடந்தால் தில்லியுடன் மோதுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்காது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்றைக்கு உலக அரங்கில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஓரளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றன என்பதை என்னால் உணரமுடிகிறது. அதை விரைவுபடுத்த நம் கிளர்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும். போராட வேண்டும். எல்லாம் செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து இருபது கல் தொலைவில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் சிறுபான்மை அல்ல. ஆறு கோடி தமிழர்களும் கிளர்ந்து எழுந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க போக்குகளில் முழுமையான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது மாறும். மாறுவதற்கு அதை விரைவு படுத்த வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகளை மேலும் மேலும் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கினால் தான் அந்த மாற்றங்களை விரைவில் கொண்டுவர முடியும்.

தொடரும்...

0 comments: