Tuesday, December 16, 2008

இதென்ன கோயில் பிரசாதமா?

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

0 comments: