Monday, January 5, 2009

தமிழீழம் மலர்ந்தே தீரும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. விடுதலைக்காக போராடும் இயக்கம் என்றும், நிச்சயம் தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழம் தான் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசிடம் வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் நாங்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக எம்பிக்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்தித்து பேசினோம். எத்தனையோ முறை போரை நிறுத்தத் சொல்லி வற்புறுத்தியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இது 7 கோடி தமிழர்களின் தலைகுனிவு. இதனால் சுயமரியாதை, தன்மானத்தை இழந்து நிற்கிறோம். அடுத்த 15 நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு செல்வதாக தெரியவில்லை என்றார்.

இலங்கை பிரச்சினையில் செவிசாய்க்காத மத்திய அரசிடம் கூட்டணி வைத்துள்ளீர்கள். அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுப்போம். அதில் பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகப்படியான எந்த முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படி நடப்போம் என்றார்.

மேலும் இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு அதிகாரிகளும், மத்திய அமைச்சர்களும் அலட்சியம் செய்கிறார்கள். கிளிநொச்சியை பிடித்துவிட்டோம் என்று கூறும் இலங்கை இராணுவம், கிளிநொச்சியில் எத்தனை விடுதலைப்புலிகள் சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களையும், இந்தியாவின் தொழில் நுட்பத்தையும் வைத்து இலங்கை இராணுவம் போரிட்டு வருகிறது.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் என்று காங்கிரஸ் கூறுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. விடுதலைக்காக போராடும் இயக்கம் என்றார். மேலும் இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ததில்லை. பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளை வளர்த்துள்ளனர் என்றும், நிச்சயம் தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழம் தான் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத்தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?.

தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்வரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றார் ராமதாஸ்.

நன்றி: தமிழ்வின்.காம்

2 comments:

said...

டாக்டர் முதலில் டில்லியில் புலிகளை போராளிகள் என்றார் அப்புறம் பயந்து போய் சென்னைக்கு வந்து புலிகளை யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்றார். மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் ஒப்புக்கு அறிக்கை விடுவதும் சவடால் விடுவதும் தான் ராமதாஸ் ’’கருணா”நிதி ஆகியோரின் ஈழத்தமிழர் அரசியல் பதவியை விட்டு விலகமருத்து அட்டைகளைப் போல ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த முதுகெலும்பற்றவர்களால்தான் கிளிநொச்சி வீழ்ந்தது.

Anonymous said...

சும்மா கெடந்து நெட்டுல கூப்பாடு போடறதுக்க்கு ஹிண்டு ராம் ஆபிஸ் முன்னாடி ஸ்ரீலங்கா கவர்மெண்டுக்கு மாமாவேலை செய்யாதன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. ஆர்கனைசு செஞ்சு பா. ராகவன் வீட்டு முன்னாடி ரிப்போட்டர்ல பொய்யி எழுதாதன்னு சாலைமறிப்பு பண்ணுங்க. அத விட்டுட்டு நெட்டுல அய்யோ குய்யோன்னு கத்தி என்னங்க பிரயோஜனம்?