Monday, October 13, 2008

தமிழ் திரைப்பட கலைஞர்கள் இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலம் நடத்துகிறார்கள்

சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது நடத்தும் இனவெறி தாக்குதலை கண்டித்து அக். 19 அன்று தமிழ் திரைப்பட கலைஞர்கள் சங்கம் இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலம் நடத்துகிறது. இதில் திரைப்படத்துறையைச் சோ்ந்த அனைத்து கலைஞர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இதுபற்றிய ஆலோசனை கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் கருத்தரங்கு மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் திரைப்பட தயாரிப்பாளர்கள்ம், இயக்குநர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகசுதர்கள் ஆகிய அனைத்து அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த கூட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன் தலைமை தாங்கினார். `திரைப்பட வர்த்தகத் தலைவர் கே.ஆர்.ஜி. முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராசா கூறுகைளில்,

சிங்கள இராணுவத்தினர் நடத்தி வரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

இந்த பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகமும் குரல் கொடுத்து வருகிறது. திரையுலகை சேர்ந்தவர்கம் சிங்கள இராணுவத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், நேற்று முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்து வருகிறார்கள்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழ் திரையுலகம் சார்பில், வருகிற 19-ந் தேதி இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் நடிகர்-நடிகைகள் உட்பட திரையுலகைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்துகொம்கிறார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* "தமிழ் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், சிங்கள இராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒரு சேர நின்று குரல் கொடுத்து வருகின்றன. அவர்களுடன் கலையுலகமும் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், சிங்கள இராணுவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சிங்கள ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில், திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகசுதர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் எங்களின் கண்டனத்தை தெரிவிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

* முதல்கட்டமாக, தமிழர் பகுதியில் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அறிவித்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.

* உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை, பாதிக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும்.

* ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

* தமிழக மீனவர்கம் கடல் எல்லை பகுதியில் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

* இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

* முறையாக ஒரு தூதுக்குழு அமைத்து, இலங்கையில் நடக்கும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

* இலங்கை அரசுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வருகிற 18, 19, 20 ஆகிய நாட்களில், தமிழ் திரையுலகில் எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். படப்பிடிப்பு உட்பட திரைப்பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து தனி ரெயிலிலும், பஸ்களிலும் புறப்பட்டு ராமேசுவரம் செல்கிறோம். 19-ந் தேதி, இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெறும்.

இராமேசுவரம் கடலோரத்தில் நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில், திரையுலகம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கும். அந்த குரல், இலங்கைக்கு எட்ட வேண்டும். மத்திய அரசுக்கும் எட்ட வேண்டும்.''

0 comments: