Friday, October 17, 2008

தமிழக அரசு பள்ளிக் கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதா?

வாழிடம், உணவு உற்பத்தி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு போன்றவற்றை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் அது உண்மையான அரசாக இருக்கும்.

இவைகள் முழுமையாகவோ அல்லது பகுதிப் பகுதியாகவோ அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலகி தனியாரிடமோ, முதலாளிகளிடமோ, வியாபாரிகளிடமோ சென்றுவிட்டால் அந்த அரசு மக்களுக்கான அரசாக இருக்கமுடியாது. மாறாக அது முதலாளிகளுக்கான அரசாகவோ, தரகு வியாபாரிகளுக்கான அரசாகவோ மாறிவிடும்.

நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் அரசு அதிகாரத்திற்கு வந்தவர்கள் வியாபாரிகளாக மாறிப்போனதாலும், அரசு அதிகாரத்திற்கு வியாபாரிகள் வந்ததாலும் மேற்குறிப்பிட்ட அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலகிவருகிறது.

குறிப்பாக; ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நல்ல குடிமக்களையும் நல்ல எதிர்காலத்தையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறையாகும்.

அதில் உயர்கல்வித்துறை என்பது இன்று பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

பள்ளிக் கல்வியும் இன்று நிலவணிகத்திற்கு அடுத்தபடியாக நல்ல இலாபம் தரும் தொழிலாக மாறிவருகிறது.

இதனால் கல்வியைப் பற்றி எந்தப் புரிதலுமே இல்லதவர்கள் இலாபத்தை மட்டுமே இலக்காக்கொண்டவர்கள் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இப்படி வர்த்தகத்திற்காக தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகளில் வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து தற்குறி தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்பள்ளிகளை நோக்கி ஓடுவதற்கு முக்கிய காரணம் பள்ளிகளின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை, இடவசதி போன்றவையே.

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைஎளிய மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் 70 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். இப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து அரசு உண்மையாக சிந்தித்து செயல்படுகிறதா? என்பதே இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி.

நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைதான் என்ன என்பதை இன்றுவரை எந்த அரசும் தெளிவுபடுத்தாது,

சமச்சீர் கல்வி முறையை இதுவரை செயல்படுத்தாது,

தமிழ்நாட்டில் கல்வி மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதை இன்றுவரை தீர்மானிக்காதது,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புதியதாக எந்த ஒரு அரசுப் பள்ளியையும் தொடங்காமல், ஏற்கனவே இருக்கின்ற பல அரசுப்பள்ளிகளை தொடர்ந்து இழுத்து மூடுவது போன்ற செயல்கள் போன்றவை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் அனைத்தையும் முழுமையாக இழுத்து மூடும் திட்டம் அரசுக்கு உள்ளதா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்; இன்று (17.10.2008) தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.அப்துல்மசீத்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கும்போது பள்ளிக் கல்வித்துறை எதற்காக உள்ளது யாருக்காக செயல்படுகிறது? என்றம் ஐயம் எழுத்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்,

“தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் பொதுத் தேர்வுகளில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு, தொடக்கக் கல்வியில் தமிழக அரசு கவனம் செலுத்தத் தவறியதே காரணம்.

கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டக் கல்விப் பணிகள் குறித்து, கடலூரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தொடக்கக் கல்வியில் பின்தங்கிய நிலையைச் சுட்டிக் காட்டி, அதுவே 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி சதம் குறைந்ததற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். இதை நாங்கள் முன்பே கூறி வருகிறோம்.

கடந்த ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 623 திறன்களை அடைய வேண்டிய மாணவர்கள், 17 திறன்களை மட்டுமே அடைந்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பின்னடைவுக்குக் காரணம்,

அரசு ஆரம்பப் பள்ளிகளில், 5 ஆயிரம் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் ஆக்கப்பட்டுவிட்டன.

மாணவர்கள் இருந்தும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

95 தொடக்கப் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

1005 நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

108 பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லாமல், பக்கத்துப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

தொடக்கக் கல்விக்கு மாநில அரசு ரூ.4800 கோடியும், மத்திய அரசு ரூ.4800 கோடியும் செலவிடுவதாகக் கூறுகின்றன. ஆனால் முறையாகச் செலவிடப்படுகிறதா?

தொடக்கப் பள்ளிகளுக்கு குறைந்தது 3 ஆசிரியர்களாவது நியமிக்க வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:30 ஆகக் குறைக்க வேண்டும்.

6-ம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச, எழுதத் திறன் வரும் வகையில், கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் திறமை வாய்ந்தவர்களால் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரி, ஓராண்டில் 13 போராட்டங்களை நடத்திவிட்டோம். பயன் இல்லை.

எனவே நவம்பர் மாதம் மீண்டும் போராட்டம் தொடங்குகிறோம். நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை, தமிழக முதல்வருக்கு 10 ஆயிரம் தந்திகள் அனுப்புவோம்.

15 முதல் 19-ம் தேதி வரை கிராமங்களில் நடைப்பயணம் மேற்கொள்வோம்.

20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம்.”

என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்கட்சியினரோ, மாற்றுக் கருத்து கொண்டவர்களோ ஏதாவது அறிக்கை விடுத்தாலோ கோரிக்கை வைத்தாலோ அவர்களுக்கு உடனே பதில்சொல்லும் தமிழக அரசு. இது போன்ற அறிக்கைகளுக்கு பதில்சொல்வதே கிடையாது. இதுபோன்ற நாட்டுக்குத் தேவையான மிக முக்கியமான அறிக்கைகளை மக்களும் படிக்கமாட்டார்கள். அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதே இதற்குக் காரணம்.

இந்தச் சிக்கல் ஏதோ ஒரு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை என்று யாருமே கண்டுகொள்ளாமல் விட்டால் இழப்பு ஆசிரியர்களுக்கு அல்ல; இந்த நாட்டிற்குத்தான்.

மக்களே! நாட்டின் நலன் கருதி “கல்வி வியாபாரமாக மாறுவதை தடுப்போம்! அனைத்துக் கல்வியையும் அரசுடமையாக்குவோம்.”

0 comments: