Tuesday, October 21, 2008

விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல! - மருத்துவர் இராமதாசு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தில்லி சென்று இருக்கிறார். அங்கு அவர் ஊடகவியலாரிடம் கூறியதாவது:

இந்தியா தலையிட வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் நடுவண் அரசு தலையிட வேண்டும்.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி நடுவண் அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிசுதான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ளவேண்டும்.

திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலைலாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது.

தீவிரவாத இயக்கம் அல்ல

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். இலங்கைக்கு நடுவண் அரசு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகல்

அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் இலங்கை பிரச்சினையை இந்தியா தீர்க்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் செய்வது என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை ஏற்கிறேன். எங்கள் முதல்-அமைச்சர் இலங்கை பிரச்சினையை ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்து செயல்படுகிறார்.

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதை பின்பற்றுவோம்.

மீனவர் பிரச்சினை

இலங்கை அரசு அரசியல் தீர்வு காண்பதில் விருப்பம் தெரிவிக்க வில்லை. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக இலங்கை அரசு செயல்படுகிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

கச்சத்தீவையும் இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் இராமதாசு கூறினார்.

நன்றி: தினத்தந்தி

7 comments:

Anonymous said...

ராஜீவ் காந்தியை எதற்காக கொன்றார்கள்?

அவர்கள் சண்டை, வேறு நாட்டுக்கு எதற்கு கொண்டு வர வேண்டும்?

- பா.ம.க. அனுதாபி

Anonymous said...

//விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல.//
இப்படி கூறியதினால் மற்ற கருத்துக்கள் யாவும் அடிபட்டு போகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இவ்வளவு அழிவு நேர்ந்திருக்காது.

Anonymous said...

இந்திய அமைத்திப்படை ஈழத்தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு?

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா வேண்டுமானால் அண்டை நாடாக இருக்கலாம். தமிழகத் தமிழர்களுக்கு அப்படியில்லை. தமிழகத்தமிழர்களின் உடன்பிறப்புக்கள் ஈழத்தமிழர்கள். “தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்” என்பார்கள். தன் சகோதரனின் துயரத்திற்காக தமிழகத் தமிழனுக்கு அழக்கூட உரிமையில்லையா?

Anonymous said...

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் தமிழர்களுக்கு எதிரானப் போக்கை சிங்களர்கள் மேற்கொள்ளவில்லையா? சிங்களர்கள் தமிழர்களை தாக்கவில்லையா? சிங்களர்கள் தமிழர்களை படுகொலை செய்யவில்லையா? சிங்களர்கள் தமிழர்களை இரண்டாம்தர மக்களாக நடத்தவில்லையா?

Anonymous said...

அன்பின் கரிகாலன்,
விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் தமிழர்களுக்கு எதிரானப் போக்கை சிங்களர்கள் மேற்கொண்டார்கள். (இப்போது நிலைமையில் பெரிய மாற்றம் உள்ளது.) ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால் இவ்வளவு மிக கொடுமையான அழிவு ஒரு போதும் இலங்கைதமிழர்களுக்கு நேர்ந்திருக்காது. இந்திய அமைத்திப்படையும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கொடுமை இழைத்தது. புலிகளும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கொடுமை இழைத்தது.

said...

பெயர் சொல்லாமல் பின்னூட்டமிடும் தோழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவுசெய்து பெயரை குறிப்பிட்டு பின்னூட்டமிடுங்கள்.

இப்போது நிலைமையில் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது? அன்று சிங்களன் தன்னிடமிருந்த ஆயுதங்களைக்கொண்டு தமிழனைக் கொன்றான். இன்று இந்தியா, பாகிசுதான், சீனா போன்ற நாடுகளின் உதவியோடு தமிழனை கொன்றுகொண்டிருக்கிறான்.

விடுதலைப் புலிகள் மீது குறைகூற தாங்கள் ஆயிரம் காரணத்தை வைத்திருக்கலாம்.

“தமிழீழத் தனிநாடு” விடுதலைப்புலிகளால் மட்டுமே கைக்கூடும் என்பது ஈழ வரலாறு நமக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.

தாங்கள் தமிழீழச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு வைத்துள்ளீர்கள்.

Anonymous said...

http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html