Sunday, November 23, 2008

கருணாநிதியை தோற்கடித்த மகிந்த: கொழும்பு வார ஏடுகள் புகழாரம்

தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அந்த வார ஏடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்த ராஜபக்ச கடந்த 17 ஆம் நாள் தனது 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் அவருக்கு இரண்டு மகிழ்ச்சியான தகவல்களை கொண்டிருந்தன. ஒன்று பூநகரி பிரதேசத்தை படையினர் கைப்பற்றியது. இரண்டாவது தமிழ்நாட்டின் அழுத்தத்தை முறியடித்தது. போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறும், வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் தமிழக மக்களும் முதல்வர் கருணாநிதியும் மேற்கொண்ட அழுத்தங்களை மகிந்த வெற்றிகரமாக தோற்கடித்து போரை தொடர்ந்து மேற்கொண்டு வருவது தென்பகுதி ஊடகங்களில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெற்று வரும் போருக்கு இந்திய மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதால் உற்சாகம் அடைந்த மகிந்த விடுதலைப் புலிகளை சரணடையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார் என அந்த ஏடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஆட்சி புரியும் இந்திய மத்திய அரசின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தமிழகம் ஏறத்தாழ 39 உறுப்பினர்களை கொண்டுள்ள போதும் அதன் வலிமையை புறந்தள்ளி சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது பெரும் ஆச்சரியமானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: புதினம்.காம்

Friday, November 21, 2008

மறந்தது ஏன்? மன்னித்தது ஏன்?

தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

மானமுள்ள தமிழர்களுக்கு உள்ள ஐயம் என்னவென்றால்; இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

Tuesday, November 18, 2008

சிங்களப் பேரினவாத நாடான சிறிலங்கா எப்போதுமே இந்தியாவின் நேச நாடாக இருந்ததில்லை-மருத்துவர் இராமதாசு

விடுதலைச் சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை சென்னை மன்றோ சிலை அருகில் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தொடக்கி வைத்தார்.
அண்ணாசாலை வழியாக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற இப்போராட்டத்தை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முடித்து வைத்தார்.
பேரணியின் முடிவில் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.


இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முதன் முதலில் போராட்டம் நடத்தியது பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான் என்பதை நினைவுகூர்ந்த மருத்துவர் இராமதாஸ், அதன்பிறகே இச்சிக்கல் தீவிரமடைந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் போரை நிறுத்த ராஜபக்ச அரசு மறுத்து விட்டதை மருத்துவர் இராமதாஸ் கடுமையாகக் கண்டித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணியைச் சந்தித்து “போரை நிறுத்த சிறிலங்கா அரசு தயாராக இல்லை” என்று சிறிலங்கா அரச தலைவர் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.112 கோடி மக்களின் பேராளரான மன்மோகன்சிங் சொல்லியும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதனை சிறிலங்கா அரசு மதிக்கவில்லை.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய மாற்று வழி என்ன என்பது குறித்து சில செய்திகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அதனை நாளை மறுநாள் முதல்வர் பார்வைக்கு அனுப்புவோம். இதில் அவர் நல்ல முடிவெடுத்து செயற்பட வேண்டும் என்று இராமதாஸ் கூறினார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லா பிரச்சினையிலும் திருமாவளவனும், நானும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று உறுதியளித்த மருத்துவர் இராமதாஸ், இச்சிக்கலில் மற்ற கட்சிகளும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அடுத்து என்ன என்பது குறித்து முதல்வர் கலைஞர் தலைமையில்தான் யோசிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அவரின் கருத்துரையைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்.
நானும், திருமாவளவனும் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டலாம். அக்கூட்டத்தில் வெடிகுண்டுகளோடு புறப்படலாம் என்றெல்லாம் பேசலாம். பேசுவது சுலபம். ஆனால் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும்.


இலங்கை பிரச்சினையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையை 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் பாராட்டினோம். இப்போது அக்கட்சி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம் முதலமைச்சருக்கு கருத்துரை கூறும் கூட்டமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் தன்னிச்சியாகப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்பதால், இந்தியக் கம்யூனிஸ்ட் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தா.பாண்டியன் கைவிட வேண்டும். வேண்டுமானால் இன்னொரு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தலாம் எனவும் இராமதாஸ் கூறினார்.

சிங்களப் பேரினவாத நாடான சிறிலங்கா எப்போதுமே இந்தியாவின் நேச நாடாக இருந்ததில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும்தான் நேச நாடாக சிறிலங்கா கருதுகிறது. நம்மை எதிரியாகத்தான் நினைக்கிறது. அதேநேரத்தில் நம்முடைய தென் பகுதியில் தமிழீழம் உருவானால் அது எந்தக் காலத்திலும் நமக்கு நேச நாடாக இருக்கும்.

எனவே வங்க தேசத்தை உருவாக்க அப்போதைய மேற்கு வங்காள முதல்வர் சித்தார்த்த சங்கரே எப்படி பாடுபட்டாரோ அதுபோன்று நாமும் தமிழ் மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்திவிட்டோம் என்று ராஜபக்ச அரசு கூறுவதெல்லாம் பொய்தான். இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யத் தேவையில்லை. தமிழீழம் உருவானால் அதனை ஏற்பளிப்புச் செய்ய வேண்டும். இதைத்தான் நானும், திருமாவளவனும் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினையில் சில ஊடகங்கள் தங்களைத் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. கருணா போன்ற காட்டிக்கொடுக்கும் இரண்டகர்ளுக்குத் துணை போகக்கூடாது. தமிழக மக்களைப் போல ஊடகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழீழத்தை ஏற்பளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

நன்றி: புதினம்.காம்

Sunday, November 16, 2008

மன்மோகன் சிங்கின் அக்கறையின்மையே மகிந்தவின் பேச்சுக்கு காரணம்: தொல்.திருமாவளவன்

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'தாய்மண்' அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'தமிழ் உயிர்' எனும் தலைப்பில் ஓவிய முகாம் நடைபெற்றது.

இதில் ஈழத் தமிழர்களின் சோகம், சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகள் ஆகிய கருப்பொருட்களில் தமிழகத்தின் முன்னணி ஓவியர்களான தட்சணாமூர்த்தி, மருது, புகழேந்தி, வீரசந்தானம், மனோகரன், சந்துரு, பாரதி கல்யாணி போன்ற ஓவியர்கள் கலந்து கொண்டு படங்களை வரைந்தனர்.

இந்த ஓவியங்கள் அடுத்த வாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

ஓவிய முகாமை தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்து உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகும் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. அங்கு போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சவை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசுதான் இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியும்.

தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித்தலைவர்களும் பிரதமரிடம் இதனை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் அவசியம் ஏற்பட்டால் இந்திய இராணுவம் சிறிலங்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Friday, November 14, 2008

இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம்

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்ற டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

“விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்” என்பதே.

ஆனால், அவர் 1948-இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார்.

அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்டுநாயக்காவில் பிரித்தானிய விமானப்படைத்தளமும் அமைக்கப்பட்டன.

இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் எதிர்நாடுகளுடன் கூட்டுச்சேரும் போக்கு சிங்களத் தலைவர்களிடம் எப்போதும் உண்டு.

பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக 1970-ஆம் ஆண்டு இந்தோ-பாக்கிஸ்தானிய யுத்தம் வெடித்தபோது அப்போதைய இலங்கைப் பிரதமராயிருந்த திருமதி.சறீமாவோ பண்டாரநாயக்கா பாக்கிஸ்தானிற்கு அனுசரணையாக நடந்து கொண்டார்.

அதாவது, பாக்கிஸ்தானிய இராணுவம் சிவில் உடையில் இலங்கைக்கூடாக விமானப் பயணங்களை மேற்கொள்ள பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா வகை செய்து கொடுத்திருந்தார்.

இந்நிலையில் யுத்தம் முடியும் வரை இலங்கையை இராணுவ ரீதியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பீல்டு மார்ஷல் மனோக்ஷா அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியபோது இந்தியப் பிரதமர் இராஜதந்திர வழிமுறையின் மூலம் இலங்கைப் பிரதமரை அணுகி கொழும்பிற்கூடான பாக்கிஸ்தானிய இராணுவத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினார்.

டி.எஸ்.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். சிறீமாவோ பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்படி இரண்டில் ஒருகட்சிதான் இலங்கையில் மாறி மாறிப் பதவிக்கு வருவதுண்டு.

மேற்படி இரு கட்சிகளும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டினைத்தான் உலகரங்கில் மேற்கொள்கின்றன என்பது ஒரு வரலாற்றுப் போக்காய் உள்ளது.

மேற்படி இரு கட்சிகளுக்கும் அடுத்த பெரும் கட்சியாக இருப்பது ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி.யினர்.

இந்த மூன்றாவது கட்சியாகிய ஜே.வி.பி. மேற்படி இரு பெரும் கட்சிகளையும் விட அதிதீவிர இந்திய எதிர்ப்புவாதம் கொண்ட கட்சியாகும்.

இந்த வகையில் இலங்கைத்தீவில் உள்ள மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் தெளிவாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் அதன்வழி ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதத்தையும் தமது அடிப்படைக் கொள்கைகளாய் பின்பற்றி வருகின்றன.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள ஆட்சியாளரை அணைத்து நடத்த வேண்டும் என்ற கொள்கையை எப்போதும் கொண்டுள்ளனர்.

சிங்கள ஆட்சியாளரை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழரின் நலன்களை பலியிடுவதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு எப்போதும் கவலை இல்லை.

பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கொள்கை வகுப்புக் குழுத் தலைவராக இருந்த ஜி.பார்த்தசாரதி சிங்கள ஆட்சியாளர்களின் கபடத்தனங்களை அதிகம் விளங்கி வைத்திருந்தவர் ஆவார்.

அவரைப் போலவே ஏ.பி.வெங்கடேஸ்வரனும் திறமை மிகக் இராஜதந்திரி ஆவார்.

இதில் முதலாவது சிறந்த இராஜதந்திரியாயிருந்த ஜி.பார்த்தசாரதியை அரங்கிலிருந்து அகற்றுவதில் முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றார்.ஜி.பார்த்தசாரதி ஒரு தமிழன் என்றும், அவர் தமிழருக்கு சாதகமாகவே பேச்சுவார்த்தையில் நடந்துகொள்வாரென்றும் எனவே அவரை நீக்கினால்தான் தாம் பயனுள்ள முறையில் பேசமுடியும் என்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்திய அரசை வற்புறுத்தியதன் பெயரில் ஜீ.பார்த்தசாரதி 1985-ஆம் ஆண்டு அரங்கைவிட்டு அகற்றப்பட்டார்.

அத்துடன் ஏ.பி.வெங்கடேஸ்வரனும் கொள்கை வகுப்பில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனது வெளியுறவுச் செயலர் பதவியை 1987-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராஜினமா செய்தார்.

மேற்படி இரு பெரும் இராஜதந்திரிகளும் அரங்கத்தில் இல்லாதபோது சிங்கள ஆட்சியாளர்களால் ஏனைய இந்திய இராஜதந்திரிகளை இலகுவில் ஏமாற்றுவது சாத்தியப்பட்டது.

ஈழத்தமிழருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவின் நலனுக்கேற்படும் பாதிப்பாய் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய இராஜதந்திர வட்டாரங்களுக்குள் காணப்படும் உள்முரண்பாட்டை சரிவரக் கையாள்வதில் சிங்கள இராஜதந்திரிகள் கைவந்தவர்கள்.

தொடர்ச்சியறாது 2,300 ஆண்டுகால நிறுவனமான பௌத்த மகாசங்கம் சிங்கள மக்களிடம் உண்டு.

எழுத்தும், அறிவும் கொண்ட பன்மொழிப் புலமைமிக்க, முற்றிலும் அரசியல் மயப்பட்ட ஒரு நிறுவனமாய் பௌத்த மகாசங்கம் உள்ளது.

பழைய வரலாற்று சித்தாந்தத்தினால் வற்றி இறுகிப்போயிருக்கும் இந்த பௌத்த நிறுவனம் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் தமிழின எதிர்ப்பு வாதத்தையும் காவ்விப்பேணி வருகின்றது.

இத்தகைய தொடர்ச்சி குன்றாத நிறுவனத்தினால் அரசமைப்புடன் கூடிய இராஜதந்திர பாரம்பரியம் 2300 ஆண்டுகளுக்கு மேலாய் பேணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் அரசும் பௌத்த மகாசங்கமும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளவை.

இப்பின்னணியில் நோக்குகையில் சிங்கள அரசியல்வாதிகளின் இராஜதந்திரம் மிகவும் மெருகானதாய் இருக்க முடியும்.

பல கட்டங்களில் சிங்கள இராஜதந்திரம் இந்திய இராஜதந்திரத்தை மிகவும் இலகுவாகவே தோற்கடித்துள்ளது.

சிங்கள இராஜதந்திரமானது பலக்கோட்பாடில் நம்பிக்கை கொண்டதல்ல. அது தந்திரோபாயத்திலேயே நம்பிக்கை கொண்டது.

பெரிய இந்தியாவை அது பலத்தால் வெல்லமுடியும் என்று நம்பவில்லை.

தன்னை ஒரு மிகச் சிறிய அரசாக விளங்கிகொண்ட இலங்கை அரசு எப்போதும் தந்திரோபாயத்தின் மீதே தன்னை தக்கவைத்துக்கொண்டது.

இந்திய உபகண்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கதைத்தீவு 69 மடங்கு சிறியதாகும்.

இத்தகைய பிரமாண்டமான இந்தியாவுக்கு கீழ் தென்பகுதியில் உள்ள சிறிய இலங்கைத் தீவானது தன்னை 2,300 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்தியாவின் பிடியிலிருந்து தற்காக்க முடிந்துள்ளது என்பது ஓர் அபூர்வமான உண்மையாகும்.

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் நேரடியாய்ச் சிக்காது ஒரு சிறிய தீவால் 2,300 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடிக்க முடிந்தமை சிங்கள இராஜதந்திரத்தின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சில தற்காலிகமான பின்னடைவுகளுக்கு அநுராதபுர அரசு உட்பட்டிருந்த போதிலும் இறுதியில் சிங்களப பௌத்த அரசு இந்தியாவிற்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்துவதில் இறுதிவெற்றியை இதுவரை ஈட்டியுள்ளது.

இப்படி ஒரு கூட்டுமொத்தக் கணக்கை பார்க்க இந்திய இராஜதந்திரிகள் தவறக்கூடாது. ஈழத்தமிழரைத் தோற்கடித்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்களமாக்கிவிட்டால் இறுதியில் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அந்நிய சக்திகளுடனும் இலகுவாக கூட்டுச்சேரலாம் என்பதே சிங்கள இராஜதந்திரத்தின் நோக்கு நிலையாகும்.

இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சியில் கிழக்கு மாகாணம் வரை பாரிய வெற்றியை இதுவரை சிங்கள அரசு எட்டியுள்ளது.

தன்வாயால் கொள்ளக்கூடிய அளவு சொற்றை உண்பது போல் சிங்கள அரசு நாளும் பொழுதும் படிப்படியாக ஈழத்தமிழரை விழுங்கி வருகின்றது.

கடந்த 60 ஆண்டுகளாக இது விடயத்தில் உறுதியாக கொள்கை நிலைப்பாட்டுடன் சிங்கள அரசு, ஈழத்தமிழரை ஏப்பமிட்டு வருகின்றது.

இப்போக்கை இந்திய அரசு தொடர்ந்தும் அசட்டை செய்யுமேயானால் இறுதியில் இதற்கு முதற்பலியாகப் போவது தமிழகமும் தென்னிந்திய மாநிலங்களுமே.

பதவிக்கு வரும் சிங்கள கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, இந்தியாவுக்கு எதிரான மேற்குலக அரசுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

மற்றைய கட்சியான சுதந்திரக்கட்சி இந்தியாவுக்கு எதிரான ஆசிய நாடுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைக் கொண்டது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அரசாங்கம் இதில் இரண்டாவது வகையாகும்.

குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான இந்தியாவின் அயல்நாடுகளுடன் கூட்டுச்சேர்வதே மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கையாகும். இது மகா ஆபத்தானது.

இலங்கையில் நிகழ்ந்துவரும் இன ஒடுக்குமுறையை வைத்துக்கொண்டு கொழும்பு அரசாங்கத்தை தம் கைக்குள் கொண்டுவர இந்தியாவின் எதிர் அரசுகள் முயன்று வருகின்றன.

இத்தகைய வாய்ப்பான நிலையைப் பயன்படுத்தி சிங்கள இராஜதந்திரிகள் ஒருபுறம் இந்தியாவிடம் தமது பேரம் பேசும் சக்தியை வளர்த்தும் மறுபுறம் இந்தியாவுக்கு அடிப்படைப் பலமான ஈழத்தமிழரை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் நசுக்கியும் வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தில் காணப்படும் அத்தனை வாய்ப்புகளையும் சிங்கள இராஜதந்திரிகள் தமது சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

உதாரணமாகப் பார்க்கையில் “தமிழ்ப் பயங்கரவாதத்தை” வெற்றிகொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளைச் செய்ய மறுக்குமிடத்து தாம் இந்தியாவுக்கு விருப்பமில்லாத நாடுகளிடம் ஆயுதம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு என்று சிங்கள ஆட்சியாளர் கூறி, இந்திய அரசிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்குள்ள கேள்வி என்னவெனில், யாரிடம் இலங்கை இரசு ஆயுதங்களைப் பெற்றால் என்ன அது தமிழரை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்பதேதான். இது விடயத்தில் தனது இறுதி இலக்கை சிங்கள அரசு ஈட்டிக்கொள்கிறது.

மேலும், இலங்கையில் தமிழரை தோற்கடிப்பதன் மூலம் இறுதியிலும் இறுதியாக இந்தியாவை தோற்கடிப்பது என்ற இலக்கை நோக்கி சிங்கள அரசு முன்னேறுகின்றது என்பதே பொருள்.

-மு.திருநாவுக்கரசு

நன்றி: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
ஆர்.36, எம்.எம்.டி.எ. குடியிருப்பு, அரும்பாக்கம், சென்னை-600 105.

Thursday, November 13, 2008

போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இராசபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் இராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை உலகம் உணர வேண்டும்.

இந்தியப் பிரதமரின் வேண்டுகோளையும், தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் மதிக்க அவர் தயாராக இல்லை. அவருக்குப் பின்னணியில் உள்ள இந்தியாவின் எதிரி நாடுகளே அவரது துணிவிற்குக் காரணம்.

இனி இந்தியா என்ன செய்யப் போகிறது? ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? அல்லது உறுதியான நடவடிக்கை எடுத்துப் போரை நிறுத்தப் போகிறதா? என்பதை அறிய தமிழக மக்கள் துடிக்கிறார்கள். விரைந்து செயற்பட இந்திய அரசு தவறினால் தமிழகம் எரிமைலையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்

Saturday, November 8, 2008

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கும் பொதுவுடமை அரசு

நேபாளத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி அளிப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளும் படிப்படியாக அரசுப் பள்ளிகளாக மாற்றப்படும் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கினால் கல்வியின் நடைபெறும் பகல் கொள்ளையை தடுக்கலாம். இந்தியாவில் கல்வித்துறைக்கு ஒதுக்கும் பணத்தை முறையாக பயன்படுத்தினால் இங்கேயும் அனைவருக்கும் நல்ல தரமான இலவச கல்வி வழங்கலாம். கல்வி வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்தியாவில் பொதுவுடமை கட்சியினர் ஆளும் மாநில அரசுகளாவது இதுபற்றி சிந்திக்குமா?