Monday, September 29, 2008

தமிழ்நாட்டில் நடுநிலை நாளேடு என்று எதுவுமில்லை

இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் அனைத்து நாளேடுகளும் தன்னை நடுநிலை நாளேடு என்று அறிவிக்கின்றன. உண்மையில் அப்படித்தான் அந்த நாளேடுகள் செயல்படுகிறதா என்றால்; ஓராயிரம் கேள்விக்குறிகள்தான் மிஞ்சும்.


அந்த வகையில் நாளேடுகள் பற்றி ஒரு கணிப்பு:

தினத் தந்தி் - தமிழ், தமிழர் நலனுக்காக சி.பா.ஆதித்தனார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நாளேடு. இன்று எந்தவொரு கொள்கையும் இன்றி எழுத்துப்பிழையோ, சொற்பிழையோ, கருத்துப்பிழையோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சி செய்தியை அதிகமாக வெளியிட்டு யாரையுமே எப்போதுமே எதிர்க்காமல் தன்னுடைய கல்லாவை கட்டும் சிறந்த நாடார் கடையாக தற்போது மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தமிழ் அல்லாத பல சொற்களை தமிழாக்கிய பெருமை இந்நாளேட்டுக்கு உண்டு.


தின மலர் - நாட்டில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படும் நாளேடு. பகுத்தறிவாளர்களையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் எப்போதுமே எல்லாநிலைகளிலும் எதிர்ப்பது, தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக்கொள்ள அனைத்து மதப்பண்டிகைகளுக்கும் சிறப்பு மலர் வெளியிடுவது, தமிழ்-தமிழர் நலன் பற்றி உண்மையாக சிந்தித்து செயல்படுபவர்களை நையாண்டி செய்வது அல்லது அவர்களுக்கு தேச துரோகிகள் பட்டம் கொடுப்பது, தமிழீழ போராளிகளை எப்போதுமே ஒரு பேட்டை ரௌடிபோல் சித்தரிப்பது போன்றவை இந்த நாளேட்டின் அன்றாடப்பணிகள்.


தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தீபாவளி அன்று நல்லெண்ணை, சீயக்காய் பொட்டலம் வழங்கும் ஒரே நாளேடு. மாடுகூட மேயாத தர்ப்பைப்பில்லை நம் கையில் திணித்து காசு பார்த்த பார்ப்பனக்கூட்டம் “தினமலர்” என்ற பெயரிலே தமிழன் காசிலேயே தமிழனுக்கு நஞ்சு வைக்கிறது.


தினகரன் - கே.பி.கே. குடும்பத்தினரால் நடத்தப்பட்ட தமிழனுக்கு துரோகம் செய்யாத நாளேடு. இன்று மாறன் குடும்பத்திற்கு கைமாறியதும் தன் குலத்தொழிலான தமிழின துரோகத்தை மிகச்சிறப்பாக செய்கிறது. தங்கள் சிக்கலே தமிழர்களின் சிக்கலாக தங்கள் வாழ்வே தமிழர்கள் வாழ்வாக தமுக்கடித்து நடிகர்-நடிகைகளை வைத்து காசு பார்த்து அவர்களை மட்டும் வாழவைக்கும் நாளேடு. நாள் தவறாமல் நடிகைகளின் சதைப்பிண்டங்களை தமிழர்களுக்கு இலவசமாக காட்டும் பணியை மிகச்சிறப்பாக செய்கிறது.


தொடரும்...

Sunday, September 28, 2008

இலங்கைப் பிரச்னை பற்றி பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்-மருத்துவர் இராமதாசு

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியை சிங்கள இனவெறி போர்ப்படை மேற்கொண்டுள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாமல் உள்ளன.

இப்பிரச்னையில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்। இதற்காக அனைத்துக் கட்சித் தலைமைக்கும் முதல்வர் கடிதம் எழுதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்। இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thursday, September 25, 2008

எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை-அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்


நோய்டாவில் தொழிலாளர்களால் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை நிருவாகி அடித்துக் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்காக ஆஸ்கர் பெர்னாண்டசு அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளார்।

இந்த கொலை பற்றி “தொழிலாளர்களின் மனக்குறைதான் அந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், தொழிலாளர்களைக் கடுமையான நிலைக்குத் தள்ளும் நிருவாங்களுக்கு இது ஓர் எச்சரிக்கை” என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் “நிலையான தொழிலாளர்களின் ஊதியத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் இடையே பெரிய பாகுபாடு நிலவுவதாகவும்“ அவர் குறிப்பிட்டிருந்தார்.

“ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு குறைந்த அளவு கூலியைக்கூட ஒப்பந்ததாரர்கள் தருவதில்லை“ என்றும் ஆஸ்கர் பெர்னாண்டசு கூறியிருந்தார்.

இக்கருத்துகளுக்கு இந்தியத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இன்போசிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இச்சிக்கலில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காத நிலையில் “ஏழைத் தொழிலாளர்களுக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை. நான் வருந்துகிறேன்“ என்று கூறியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பல்லக்கு தூக்கவும் அவர்களிடம் தரகுக்கூலி பெறவும் பழக்கப்பட்ட நமது நடுவண் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு இடையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு நடுவண் அமைச்சர் குரல் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்த செயலாகும்.

உலகமயம், தாராளமயம் இவற்றின் தாக்கத்தால் இந்தியாவில் முதலில் பலியானது வேலை வாய்ப்பு உறுதி, நிரந்தர பணி, நிலைத்த வருமானம், குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவைதான். இவற்றிற்காகப் போராடிய பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது இதுபற்றி சிந்திப்பதில்லை.

அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு பதிலாக; முதலாளிகளிடம் “ஒப்பந்தத் தொழிலாளர் சேவை“ வழங்குவதற்காக தற்போது கையேந்தி நிற்கின்றனர்.


இச்சூழலில் நடுவண் அரசு தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டியது தொழிலாளர்களின் கடமையாகும்.

Monday, September 22, 2008

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் கருணாநிதிதான்

தன்னைப்பற்றிய விமர்சனங்களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான்.

முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை.

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்றும் திட்டுவது முதல்வருக்கு அழகல்ல. இந்தப் பட்டங்களை திருப்பி முதல்வர் மீது வீச எத்தனை வினாடி எடுக்கும்?

வைகோவை 18 ஆண்டுகளாக மேலவை உறுப்பினராக்கினேன். அது நான் அவருக்கு போட்ட பிச்சை என்று அன்றொருநாள் முதல்வர் சொன்னார். அப்படி என்றால் தி.மு.க. என்பது ஆண்டிகள் மடமா? முதல்வர் என்ன மூத்த தம்பிரானா? அறிவுடையோர் கேட்கமாட்டார்களா?"

வைகோ புலிகளோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லச் சதி செய்தார் என்று முதல்வர் உளறினாரே? அது நெஞ்சாரச் சொன்ன பொய்தானே? முதல்வர் ஒரு பொய்யன் என்பதுதானே அதன் பொருள்?

நெடுமாறன் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மனம், மொழி இரண்டினாலும் நேசிப்பவர், அவரைப் பார்த்து "வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக்கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!" என்பது கொஞ்சமும் பொருந்தாது. வேண்டு மென்றால் அது முதல்வருக்குத்தான் பொருந்தும்.

முதல்வர்தான் இலாபம் இருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இழப்பென்றால் காததூரம் விலகி ஓடுவது என்ற கொள்கையை வைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நெடுமாறனுக்கு இருக்கும் ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட முதல்வருக்கு இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்!

இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்தீர்கள். கற்களை எறிந்து இந்திரா காந்தியைக் கொல்ல நினைத்தீர்கள். அப்போது இந்திரா காந்தியைக் காப்பாற்றியவர் இன்று நீங்கள் எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சிக்கும் பழ. நெடுமாறன்தானே.

இல்லையா? பின்னர் மானம், வெட்கம், இரண்டையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக" என தட்டை மாற்றி லாலி பாடினீர்களே? இதனை வைத்து முதல்வர் கருணாநிதியை ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றால் அது பிழையாமோ?

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு, "அரசியலில் தீண்டாமை இல்லை" என்று சொல்லிக் கொண்டு அவர்களோடு கை கோர்த்த குத்துக்கரண வீரர் கருணாநிதியா? நெடுமாறனா?

நள்ளிரவில் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை அன்றைய கருணாநிதியைக் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனபோது "அய்யோ என்னைக் கொல்றான்களே" என்று கூக்குரல் விட்டு அழுதீர்களே? அது கோழைத்தனம் இல்லையா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போகாமல் கையெழுத்தைமட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை ஒழுங்காக எடுத்த முதல்வர் வீரத்தைப் பற்றிப் பேசலாமா?

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் முதல்வர்தான்.நெடுமாறன் அல்ல. வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. 23 கோடி செலவில் தீட்டப்பட்ட வீராணம் திட்டத்தில் நடைபெற்றது ஊழலா இல்லையா என்பதற்கு சான்றாக இன்றும் கூட வீராணத்திலிருந்து சென்னை வரை அன்றைக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோராமாகப் பரிதாப மாகக் கிடக்கின்றன. இந்த ஊழலை விசாரித்த சர்க்காரியா ஊழலை விஞ்ஞான முறையில் செய்திருக்கிறார் என முதல் வரை எள்ளி நகையாடினார். தமிழர்கள் கூனிக் குறுகிப் போனார்கள்.

"தமிழகம் நோக்கி தஞ்சம் புகும் ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்" என்று சட்டசபையில் கொட்டி முழக்கினீர்கள். இப்போது யார் யார் வீடுவாங்கி இருக் கிறார்கள். யார் யார் வண்டிவாகனம் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களைக் கைது செய்து வழக்குப் போடுமாறு முதல்வர் தனது காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறாரே? இது இரண்டகம் (துரோகம்) இல்லையா. இதுதான் "மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா?

சிங்களப் படையெடுப்பால் வீடு வாசல் இழந்த தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் ஊர் ஊராகச் சென்று உணவும் உடையும் திரட்டினாரே? தமிழக முதல்வர் என்ன செய்தார்? இன்று கூட தமிழீழம் எதிரி படையெடுப்பால் நெருப்பில் வேகிறது. ஒன்றரை இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து குடிக்கத் தண்ணீர் இன்றி ஒரு நேரக் கஞ்சிக்கு வழியின்றி மரநிழல்களில் வாழ்கிறார்கள்.

உரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னர் போல் கோட்டையில் இருந்துகொண்டு குழல் வாசிக்கின்றாரே? இது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

புறநானூற்று வீரம் என்றால் ஆகா என்று மேடையில் பேசுவது எழுதுவது. அதே வீரத்தை புலிகள் போர்க்களத்தில் செய்து காட்டும் போது "எனக்கு வன்முறை பிடிக்காது" என்று சொல்லும் உங்களை உங்கள் நடையில் கோழை என்று சித்திரிப்பதில் தவறு ஏதாவது இருக்கிறதா?"

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!" - "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ நாளும் மறப்பாரடீ!" என்ற பாரதியின் கவிதை வரிகள் முதல்வருக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறதா இல்லையா?

"உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பாளர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது" என உருசிய ஆட்சித் தலைவர் டிமித்திரி மித்விடெவ் தோள் தட்டினாரே? அவரிடம் இருக்கும் இனப்பற்றில் முதல்வருக்கு நூற்றில் ஒரு விழுக்காடுதானும் உண்டா? நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா?

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் மற்றவர்கள் மீது கல் லெறியக் கூடாது. ஏன் ஆடையையும் களையக்கூடாது! கல்லெறிந்தால் அது தனக்குத்தான் இழப்பு. ஆடை களைந்தால் அது அவருக்குத்தான் வெட்கக்கேடு.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்கு எல்லை இருக்காது. கீழ்க்கண்ட அவ்வையார் பாடலை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்து இப்போது விடை பெறுகிறேன்.

ஆலைப் பலா ஆக்கலாமோ அருஞ்சுணங்கன்வாலை நிமிர்க்க வசமோ - நீலநிறக்காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலாமூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

- நக்கீரன், கனடா.
நன்றி: தென்செய்தி

Wednesday, September 17, 2008

“மிரட்டுகிற வேலை வேண்டாம்” - பழ. நெடுமாறன்-6

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

... ... ... ... ...

என்ன பெரிய வலிமையான அரசாங்கம் இந்த அரசாங்கம்? பதினான்காம் லூயி, ஜார் மன்னர்கள் என்ன ஆனார்கள்? மிரட்டுகிற வேலை வேண்டாம். ஏனென்றால் மிரட்டுவதற்குக் கூட துணிவு கிடையாது. எங்களுக்குத் தெரியும்.

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டான் என்றால் தமிழக மக்கள் இரங்கல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்புவதற்கு கவிதை எழுதுகிறார்கள்.
பிரச்சினையைத் திசைதிருப்புவதை ரொம்ப நாளைக்குச் செய்ய முடியாது. திசை திருப்புவதால் தடம் புரண்டு விடுவார்கள். அவர்களுக்கு நெஞ்சில் உரம் இல்லை.

மக்களை ஒன்று திரட்டவும் மகத்தான மாற்றம் கொண்டு வரவும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் உலகத் தமிழர்களால் முடியும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

முற்றும்

Tuesday, September 16, 2008

“தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது” - பழ. நெடுமாறன்-5

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
... ... ... ...
எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அதன் இனம் கொதித்து எழவேண்டும். கொதிப்பு இல்லாமல் இருந்தால் என்ன பயன்?

இன்றைக்கு இந்த மாநாட்டிலே எனக்கு முன்னாலே பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராசாவும் சிவாஜிலிங்கமும் என்ன சொன்னார்கள்? அவர்கள் பேச்சு நம் நெஞ்சத்தை உலுக்க வில்லையா?
இவ்வளவு கொடுமை நடக்கிற பொழுது நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? என அவர்கள் கேட்டபோது நெஞ்சத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அல்லவா இருக்கிறது? அவர்கள் வேறுயாரிடம் போய் முறையிட முடியும்? நம்மிடம்தான் முறையிட முடியும். நம் பதில் என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டில் எழுச்சி மேலும் அதிகமாக வேண்டும். மேலும் மேலும் அதிகமாக வேண்டும். அச்சத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை மிரட்டி வருகிறார்கள். அச்சமே இல்லை என்பதை நாம் காட்டினால் இந்த ஆட்சி என்பது எங்கே போகும் என்றே தெரியாது. மிரட்டுகிறவர்கள் எங்கே போவார்கள் என்று தெரியாது.

தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது. யாரையும் எதுவும் செய்துவிட முடியாது. நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு என்று வந்து பார்த்த போது நகரம்-கிராமம் இல்லாமல் மக்கள் எல்லோரும் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்றுதான் கருத்துக் கணிப்பு நிரூபித்தது.

மக்கள் எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடிய அந்த உணர்வு என்பது நீறுபூத்த நெருப்பு போல இருக்கும். ஊதினால் பற்றிக் கொள்ளும். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனந்த விகடனைப் பாராட்டுகிறேன். மக்களை ரொம்ப நாட்கள் யாரும் ஏமாற்ற முடியாது.

புலிகள் புலிகள் என்று கூறிக்கொண்டு திடீர் வேட்டை நடக்கிறது. பொய்யான தகவல்களைத் தருகிறார்கள். தில்லியில் உள்ள எசமானர்கள் இவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். மக்கள் துணிந்து எழுந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

தொடரும்...

Thursday, September 11, 2008

“வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும்” - பழ. நெடுமாறன்-4

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

... ... ...

1949-ஆம் ஆண்டு செஞ்சீனம் பிறந்தது. பர்மா முதல் - பிலிப்பைன்சு வரை உள்ள தென்கிழக்காசிய நாடுகளில் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள். மலேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும், சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும் சீனர்கள் இருக்கிறார்கள். அப்போது மாசேதுங் சொன்னார்கள். ஆசிய நாடுகளில் வாழக்கூடிய சீனர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இல்லையேல் செஞ்சீனா சும்மா இருக்காது என்றார். எனவே தான் இன்றளவும் சீனர்கள் என்றால் பயப்படுகிறார்கள். தமிழன் என்றால் அப்படிப்பட்ட நிலை இல்லை. வலிமையான செஞ்சீனம் தான் வெளிநாடுகளில் வாழும் சீனர்களைக் காக்கிறது.

வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும். அதுதான் அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு. மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் தமிழர்கள் வலிமையோடு மாறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் நடக்காது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் - நடுவர் குழு தீர்ப்புகள் வந்தால் உடனடியாக கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எப்படி சரியாக இருக்க முடியும்? நம்முடைய வலிமையை நாமே உணரவில்லை.
நாம் எத்தகைய மக்கள்? நம் வலிமை என்ன? நம்மை நாமே உணர வேண்டும். உணர்ந்தாலொழிய வேறு வழியில்லை. மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்க முடியும். யாராவது திசைதிருப்ப நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு சகல பிரச்சினைகளைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டுமென்று சொன்னால் தானாகவே திருந்தி விடுவார்கள்.. எவனும் வாலாட்டத் துணியமாட்டான்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேரை சிங்களப் படை கொல்லும் என்றால் - ஒரு இனம் வாழ்ந்து என்ன? போய் என்ன? நம்முடைய மீனவர்களை நம் கடல் பகுதியிலே வந்து அடிக்கிற துணிவு எப்படி வருகிறது? இந்திய அரசு தலையிடாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. அப்படியானால் தில்லியைப் பணியவைக்க வேண்டுமென்றால் - இப்படியெல்லாம் நடந்தால் தில்லியுடன் மோதுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்காது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்றைக்கு உலக அரங்கில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஓரளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றன என்பதை என்னால் உணரமுடிகிறது. அதை விரைவுபடுத்த நம் கிளர்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும். போராட வேண்டும். எல்லாம் செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து இருபது கல் தொலைவில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் சிறுபான்மை அல்ல. ஆறு கோடி தமிழர்களும் கிளர்ந்து எழுந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க போக்குகளில் முழுமையான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது மாறும். மாறுவதற்கு அதை விரைவு படுத்த வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகளை மேலும் மேலும் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கினால் தான் அந்த மாற்றங்களை விரைவில் கொண்டுவர முடியும்.

தொடரும்...

எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது - பழ. நெடுமாறன்-3

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
... ...
எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது. அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து பாடுபடுகிறது.

இது ஒன்றும் வேடிக்கைக்கான மாநாடு அல்ல. இவ்வளவு பேரை நாம் திரட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான மாநாடு அல்ல. லாரிகளிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சேர்க்கப்பட்ட கூட்டமல்ல இது. இயற்கையான உணர்வு படைத்தவர்கள் அவரவர்களாகச் சொந்தச் செலவிலே ஏதாவது ஒன்றை அடகு வைத்து வந்து இருப்பார்கள் - எனக்குத் தெரியும். இந்த உணர்வு என்பது அவ்வளவு எளிதிலே வந்து விடாது. அதைக் கண்டு அச்சமாக இருக்கிறது. எப்படி கூட்டம் கூட்டுகிறார்கள். நாம் ஒரு மாநாடு போட வேண்டுமானால் பல இலட்சம் செலவழித்து மக்களைக் கூட்ட வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறார்கள். உணர்வின் அடிப் படையில் நாம் திரட்டுகிறோம். மக்களைத் திரட்டினால்தான் மாற்றம். அதை நாம் செய்ய வேண்டும். உலக மொழியாக நம் மொழி உயர்ந்து இருக்கிற இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள குறிப்பான இனமாகவும் தமிழன் மாற வேண்டும்.

நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும். உலகத்தின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு நம்மால் உதவ முடியும். நாம் வலிவு இல்லாமல் போனால் நம்மையும் காத்துக் கொள்ள முடியாது நம்மைச் சார்ந்து இருக்கிற மற்ற தமிழர்களையும் நாம் காப்பாற்ற முடியாது.

தொடரும்...

Wednesday, September 10, 2008

ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது-பழ.நெடுமாறன்-2

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
...
இந்த போக்குக்குத் தாய்த் தமிழகத்தின் புறக்கணிப்பு மட்டும் காரணமா? அது ஒரு காரணம். மற்றொன்று முக்கியமானது. இந்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது. இந்திய அரசு நம்முடைய வெளி நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இந்தியாவில் வேறு எந்த தேசிய இனமும் வெளிநாடுகளில் இந்த அளவுக்குப் பெருந்தொகையாக வாழவில்லை.

இலங்கை, மலேசியா, சிங் கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றபோது மலேசியாவுக்கான இந்தியத் தூதுவராக டாக்டர் சுப்பராயன் முதன் முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இன்றுவரை எந்த தமிழனுக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. மேற்கண்ட நாடுகளில் நாம் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வாழ்கிறோம் - பெரும்பான்மையாக இருந்த போதிலும்கூட அவர்களுக்கு என்ன குறை? என்ன தேவை என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்கு மொழி அறியாத இந்தியத் தூதுவர்களால் முடியவில்லை. நேர்மாறான காரியங்களைத்தான் செய்கிறார்கள். இந்திய அரசு அதிலே மட்டும் அலட்சியப் போக்குக் காட்டவில்லை.

கச்சத் தீவைத் தூக்கி இலங்கைக்குத் தாரை வார்த்தார்கள். அதனால் தமிழக மீனவர்கள் அங்கு செல்ல முடியாமல் அல்லற்படுகிறார்கள். ஏறத்தாழ 400 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஒரு போதும் இப்படிப்பட்ட செயலைச் சகித்துக்கொள்ளாது. பதிலடி கொடுக்கும் - எச்சரிக்கை தரும் - இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு வாங்கும். தமிழக மீனவர்கள் சிங்கள வல்லரசால் சுடப்பட்டாலும் ஒரு தம்பிடி கூட நட்டஈடு வாங்கப்படவில்லை. இந்திய அரசு வாங்கவில்லை.

அதுமட்டுமல்ல - இலங்கையிலிருந்து ஈழத்தை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் எந்த ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு - முழுமையாக மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது.

இராசீவ் காந்தி காலத்தில் இந்தியப் படை அனுப்பப்பட்டது. இப்போது படைக்கலன்களை அனுப்புகிறார்கள். நம் தமிழர்களைக் கொல்வதற்குத் தான் ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து அந்த தவறைச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கர்நாடகமும் கேரளமும் வஞ்சிக்கின்றன. தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லும் துணிவு வருகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் இங்கே வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை. துணிவும் இல்லை. எங்கே போய் முடியுமோ இது?

தொடரும்...

Tuesday, September 9, 2008

“யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை”பழ. நெடுமாறன்-1

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது.

உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர்கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத்திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப்பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர்களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் பெருமைப்பட இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாலே பேசிய நண்பர்கள் வெவ்வேறு தலைப்பிலே உங்களுக்குப் பல விஷயங்களை மிக அழுத்தமாகப் பதியவைத்தார்கள். நாம் ஒன்றுபட வேண்டும் - தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எல்லோர் பேச்சிலும் ஒலித்தது. இன்றைக்கு தமிழினம் முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஒருகாலத்தில் பாராண்ட இனமாகவும் - ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளை அடக்கியாண்ட இனமாகவும் - மேற்கே உரோமாபுரி கிழக்கே சீனா வரையிலும் பல நாடுகளுடன் வணிகம் நடத்தி செழுமை அடைந்த இனமாகவும் - நம்முடைய இனம் இருந்தது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் இப்படிப் பல இலக்கியச் செல்வத்தை நிறையப் பெற்ற ஓர் இனமாக நம் இனம் விளங்கி வந்திருக்கிறது. எல்லாம் பழம் பெருமை. ஆனால் இன்றைக்கு நம் தமிழ் உலக அரங்கில் இடம் பெறத்தக்க நிலையை அடைந்திருக்கிறது.

தமிழர்கள் - உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த இனங்களில் ஒன்றாக ஆகி இருக்கிறார்கள். உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழ் வளர்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் ஆங்கிலத்தைத் தமிழ் விஞ்சும் என்னும் நிலை வரும்.

தமிழின் மதிப்பு கூடக்கூட அதற்கேற்றபடி தமிழர்களும் உயர வேண்டும். தமிழர்களின் நிலையும் உயரவேண்டும். தமிழும் தமிழர்களும் இணைந்து உயர்ந்தால் தான் நமக்கு வாழ்வு. ஒன்று உயர்ந்து ஒன்று உயரவில்லை என்றால் நமக்கு வாழ்வில்லை.

உலகம் முழுவதிலும் தமிழர் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதற்கு முன் பேசிய நண்பர்கள் உலகின் பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றியும் ஈழத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றியும் - சொந்த மண்ணில் வாழ முடியாத அகதிகளாக வாழ்கிற புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் பேசினார்கள்.

இப்படி ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் - நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைகளாக உழைப்புச் சுரண்டப்பட்டு அதனால் ஆங்கிலேய வர்க்கம் கொழித்தது - அந்த வர்க்கத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் ரொம்ப முக்கியமானது என்று சொன்னால் 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், அதே போல மொரீசியசு, ரீயூனியன், மற்றும் தென்ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இப்படி பலவற்றிலும் நம் தமிழர்கள் கப்பல் கப்பலாகக் கொண்டு போகப்பட்டார்கள்.

அதிலும் யார் குறிப்பாக வெள்ளையர் விரித்த வலையில் சிக்கியவர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த வலையில் சிக்கினார்கள். அக்கறைச் சீமைக்குப் போனால் நாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி அவர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதி ஒடுக்குமுறைத் தொல்லையிலிருந்து தப்பினால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வெளியேறத் துணிந்தனர்.

மேற்கண்ட நாடுகளில் எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பரவினார்கள். தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை வளம் கொழிக்கச் செய்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா? என்றால் இல்லை. இன்றைக்கும் அந்த நாடுகளில் அவர்கள் வாழ்விற்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் 5-6 தலைமுறைகளாக அன்னிய மண்ணில் வாழ நேர்ந்த காரணத்தினால் அந்த மக்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

தென்ஆப்பிக்காவில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சில ஆயிரம் பேருக்குத் தான் தமிழ் தெரியும். ஆங்கிலம் தாய் மொழி ஆகிவிட்டது. மோரிசியஸ் வாழ் தமிழர்கள் பிரஞ்சு, கிரியோலி போன்றவற்றையும் பேசுகிறார்கள். தாய்த் தமிழகத்தின் அரவணைப்பு இல்லாமல் அவர்கள் எல்லாம் அங்கே மொழியையும், பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் மொழியை இழந்து இன்னும் தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க வேண்டிய அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் தங்கள் மொழியை-பண்பாட்டை- கலை-இசை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். அக்கறையாக இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தாலும் கடின உழைப்பின் காரணமாக ஓரளவிற்கு நல்ல வாழ்க்கையைப் பெற்ற பிறகு திருப்தி அடையவில்லை. மாறாக தங்கள் மொழி - தங்கள் பண்பாடு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் - குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். இன்று அந்த நாடுகளிலே தமிழர்களும் தமிழ்க் குழந்தைகளும் மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் வாழ்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அதே காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் கதி என்ன? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியைக் காக்கவும் பாதுகாத்துத் தீர வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளில் போராடுகிறார்கள். ஆனால் நம்முடைய தாய்த் தமிழகத்திலிருந்து எந்த அரவணைப்பும் இல்லாததனால் மொழியை இழந்து பண்பாட்டை இழந்து எப்படியோ ஆகிவிட்டார்கள். இந்தப் போக்குகளை நாம் எவ்வளவு விரைவில் களைகிறோமோ அந்த அளவுக்கு உலக அரங்கில் தமிழர்கள் உயர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதை நாம் செய்தாக வேண்டும்.

தொடரும்...

Monday, September 8, 2008

“ஈழத்தமிழர்களின் முழு விடுதலையே நம் கோரிக்கை" சி.மகேந்திரன் திட்டவட்ட அறிவிப்பு

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சி.மகேந்திரன் ஆற்றிய உரை.

ஓர் மாற்றத்திற்கான போர்க்குணத்தை நாம் எங்கிருந்து பெறுவது என்ற உணர்வோடு இருக்கிறோம். தமிழர்களாய் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் ஒரு தொன்மையான பண்பாட்டைக் கொண்டவர்கள்; ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்றவர்கள் - இலங்கையில் அந்த காலம் முதல் ஆதி குடிகளாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் - பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐயா நெடுமாறன் அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால தமிழக வரலாற்றிலே, அரசியலை நேர்மையோடு செலுத்த வேண்டும் என்பதற்காக காயம்பட்டவர். தாக்குதலைச் சந்தித்தவர் அவருடைய ஒவ்வொரு முயற்சியும் தமிழர்கள் உலகத்தில் எங்கு தாக்கப்பட்டாலும் அவர்கள் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்ற வகையில் மிகத் தெளிவான போராட்டங்களை அன்று முதல் இன்று வரை நடத்தி வருகிறார். அனைவருக்கும் தலைமை தாங்கி நிற்கிற உண்மையான மாவீரனாக அவர் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மக்கள் மீது அடிமைத்தனம் திட்டமிட்டு சுமத்தப்பட்டுள்ளது. முதலில் அப்படி சுமத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். பின்னரும் புதிதாக அரசியல் இயக்கங்கள் கண்டவர்களும் சுதந்திரம் பெற்ற பின் வந்தவர்களும் தமிழர்கள் மீது அடிமைத் தனத்தைச் சுமத்தி உள்ளார்கள். அவற்றில் இருந்து எல்லாம் எப்படி விடுதலை பெறு வது என்பது தான் மிகப் பெரிய கேள்வி யாக இருக்கிறது அப்படிப்பட்ட கேள்விக் கான விடையை இப்படிப்பட்ட கூட்டங் களின் மூலம் தான் நாம் காண முடியும் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவின் சுதந்திரதின விழா தில்லியில் கொண்டாடப்பட்ட போது உரை யாற்றிய பிரதமர் ஆப்கனில் தூதரகம் தாக்கப்பட்டு இருப்பதாகவும் தூதரகத்தில் இருந்த மூன்று பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் சொன்னார். ஆனால் அதே நேரத்திலே தமிழகக் கடல் பகுதியிலே இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்களைப் பற்றி சொல்வதற்குத் தயாராக இல்லை. ஏன்? இந்தக் கேள்வியைத் தான் நாம் தமிழகத்தில் எழுப்பக் கடமைப்பட்டவர்கள். மீனவர்கள் உட்பட தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதற் குள் இருக்கும் அரசியல் தான் முக்கிய மானது. அந்த அரசியலை எதிர்த்து நாம் போராட வேண்டிய வர்களாக இருக்கிறோம்.

அதே போல உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழ் மக்களைப் பற்றி தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை - மலேயா நாட்டில் சியான் என்ற இடத்திலே பயணம் செய்வதற்கான இரயில் பாதை அமைப்பதற்கு கூலிகளாய் சென்ற 90,000 தமிழர்கள் செத்து மடிந்திருக்கிறார் கள் -தென்னாப்பிக்கா மற்றும் இலங்கையில் தோட்டத் தொழிலுக்காகச் சென்று அல்லற் பட்ட தமிழர்கள் பற்றியும் - யாழ்ப்பாணத் தில் நடக்கிற விடயங்களைப் பற்றியும் தமிழ கத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. அப்படி அக்கறை இருக்கிறவர்களைக் கூட கழுத்தைப் பிடித்து நெறிக்கக் கூடிய அரசாங்கங்களும் சட்டங்களும் நம் நாட்டிலே இருக்கிறது.

தமிழகத்திற்கு ஒரு பொது வேலைத் திட்டம் வேண்டும். அந்த வேலைத் திட்டம்தான் சந்தர்ப்பங்ளுக்காகக் கூட்டு வைத்துக் கொள்ளும் அரசியல் கூட்டணிகளை ஒழிக்கும் மக்கள் கூட்டணியாக இருக்கும். தமிழ் உணர்வாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பகுத்தறிவாளர்கள், உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று- பண்பாடு என்ற முறையிலே நம்முடைய கலாச்சாரம் என்ற வகையிலே, ஒரு மொழி உணர்வு என்ற முறையிலே, நமக்குள் இருக்கக்கூடிய ஒற்றுமையை, நமக்குள் இருக்கக்கூடிய தொப்புள்கொடி உறவினை, அந்தப் பொது செயல் திட்டத்தின் மூலம் காக்க வேண்டும். தமிழராய் பிறந்தவர்களிடம் இருந்து தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு இருக்கிறது. தாய்த் தமிழகம் இதைத் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை அதைப் பற்றிய அக்கறை கூட கிடையாது. பெரிய திரைகளிலும் சின்னத் திரைகளிலும் நாம் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.

இவற்றை எல்லாம் மாற்றுவதற்குரிய ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது. அது மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும். போராட்டங்களில் எல்லாம் வலிமை படைத்ததாக - தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழுகின்ற நமது தமிழ் மக்களின் முழு விடுதலையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம். பல பிரச்சினைகளோடு அது மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்திய நாடாளு மன்றத் தேர்தலுக்கு யார் எவரோடு கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகளோடு தேர்தல் வர இருக்கிறது. யார் யாரோடு வேண்டுமானா லும் கூட்டணி அமைக்கட்டும். அதைப் பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிர்ப்பந்தம் இருக்கும். ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியோடு வாழக்கூடிய அரசியல் திட்டத்தை தங்கள் கோரிக்கையாக வைக்கவேண்டும் தமிழ் மக்கள். இதைப்பற்றி நாம் அலட்சியப்படுத்துகிறோம். அண்மையில் கூட பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. தில்லி மாநகரத்தில் எங்கள் தேசியக்குழுக் கூட்டம் நடந்த போது மக்களுடைய பாதிப்பை - எத்தனை மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் - உலகத்தில் எங்காவது, தமிழ் மக்கள் எங்களுக்கு நாடு வேண்டும். வாழ்வதற்கு உரிமை வேண்டும் என்று கேட்டதற்காக - உலகத்தில் எங்காவது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக செய்தி உண்டா? இந்த அநியாயம் எங்காவது நடைபெற்று உள்ளதா? இந்த கேள்வியை நாம் கேட்டோம். தமிழகத்தின் கம்யூனிஸ்டுகளான நீங்கள் இலங்கைப் பிரச்சினையில் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது நாங்கள் கேட்டோம். பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ் - பங்களாதேஷில் ஒரு பாதிப்பு வரும்போது கம்யூனிஸ்டுகளாக இருக்கும் நாம் - மேற்கு வங்கத்தில் இருக்கக் கூடிய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு துடிப்பு ஏற்படுகிறது. அதில் உள்ள நியாயத்தைக் கேட்க வேண்டும் என்று உணருகிறார்கள். போராடுகிறார்கள். மொழிக் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படுகிற போது அவன் போராடத்தான் செய்வான். மொழி நம்மை இணைத்து வைத்திருக்கிறது. இலங்கையில் ஏற்படக் கூடிய அந்த மாற்றங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்படக் கூடிய விடுதலையின் மேன்மை - எவ்வளவு அழகான நாடு - எவ்வளவு மேன்மையான நாடு - ஒரு அழகிய தேசம் ஏன் இப்படி சிதைக்கப்படுகிறது?

இலங்கை மட்டுமல்ல - இலங்கையும் இந்துமாகடலும் இந்தியாவும் அமெரிக்காவின் காலனியாக மாறிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக நாம் போராட வேண்டும். கடந்த 20 ஆண்டு காலமாக இந்த கடல் - நமது மீனவர்களுக்குச் சொந்தமான கடல் - நம்முடைய மக்களுக்குச் சொந்தமானவை - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்து வருவதாகவும் நம் சுதந்திரம் பறி போவதாகவும்... எனவே தான் இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடக் கூடிய மாபெரும் போராட்டம் தேவை. போராட்டம் தேவை.

தமிழ் மக்களிடம் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக தமிழர்களோடு இணைந்து போராடக் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்றென்றும் உங்களோடு நின்று போராடும் போராடும்.

Thursday, September 4, 2008

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழா

6-ஆம் ஆண்டு நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2039

2008 ஆகஸ்டு 16 சனி
மதுரை

உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக இன்று (ஆகஸ்ட் 16 2008) அன்று மதுரையில் நடைபெற்றது.


மதுரை மாநகரில் உள்ள அரசரடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.



உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்கள் தி.க. சிவசங்கரன், கி.இராஜநாராயணன், எஸ்.பொன்னுதுரை (எஸ்.பொ), ஜே.வி கண்ணன், வே. தங்கவேலு (நக்கீரன்)ஆகியோருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.


இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சி. மகேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், கவிஞர்கள் காசி. ஆனந்தன், இன்குலாப், மணியரசன், தியாகு, முனைவர் க. நெடுஞ்செழியன், பேரா. ஜெயராமன், முனைவர் தமிழண்ணல், பேரா. பர்வீன் சுல்தானா, எழுத்தாளர்கள் சூரியதீபன், அழகிய பெரியவன், மரு. இந்திரக்குமார் (இலண்டன்), கலைச் செல்வன் (மியான்மர்), திருமாவளவன் (மலேசியா), ஜான் மோசஸ், பொன்னீலன், நாடோடித் தமிழன்(மராட்டியம்), புகழேந்தி (கர்நாடகம்), பேரா. இராமமூர்த்தி (கர்நாடகம்), அரணமுறுவல், முனைவர் இராம சுந்தரம், மு. பாலசுப்பிரமணியம், சா. சந்திரேசன், இராசேந்திரசோழன், மெல்கியோர், பசுபதிபாண்டியன் உட்பட பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த எழுத்தாளர்களும் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் எழுச்சியூட்டும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழின உணர்வாரள்கள் பெருந்திரளில் கூடியிருந்தனர்.

Monday, September 1, 2008

யாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை?

சென்னை, ஆக. 31: தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வரன்முறைப்படுத்தி கிரையம் பெற்றவர்களுக்கே அளிப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளும்கட்சியினர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நில உரிமை காரணமாக சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை போக்கவும், நிலச் சுவான்தார்களிடம் முடங்கிக்கிடக்கும் ஏராளமான நிலங்களை விவசாயிகள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு பிரித்தளிக்கவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டம் (உச்சவரம்பு நிர்ணயத்துக்காக) கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், 1960-களின் பிற்பகுதியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சட்டத்தில் 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உச்சவரம்புக்குட்பட்டு அனுமதிக்கப்படும் நிலத்தின் அளவு குறைக்கப்பட்டது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு நிலச்சுவான்தார்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில், மத்திய அரசின் 1976-ம் ஆண்டு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தை பின்பற்றி 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முன்தேதியிட்டு 1976-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் 2,381 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 109 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

அரசின் கொள்கை விளக்க குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 343 ஹெக்டேர் நிலம் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 55 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் உள்ளன.

538 ஹெக்டேர் நிலம் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1,336 ஹெக்டேர் நிலம் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக வைக்கப்பட்டன.

1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில், 1978-ம் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 1266.68 ஹெக்டேர் நிலம் அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்கப்பட்டன.

அமைச்சரவை முடிவு: சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்டு மேல் மிகை வெற்று நிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலங்களை கிரையம் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வரன்முறை செய்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாருக்காக? உச்சவரம்பு சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கிரையம் செய்யப்பட்டுள்ளது என அரசு கூறியுள்ளது. இவ்வாறு கிரையம் பெறுவது செல்லாது என்றும் அப்படி கிரையம் பெற்றவர் அதில் உரிமை கோர முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் 2000-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள கிரையங்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் தற்போதைய முடிவு உள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக யார், யார் அரசு நிலத்தை கிரையம் செய்தார்கள் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை உரியவர்களுக்கு ஒதுக்க வேண்டிய அரசு கிரையத்தை அங்கீகரிப்பது ஏன்?

இந்த நிலங்களை தெரியாமல் வாங்கி அதில் வீடு கட்டி குடியிருக்கும் நடுத்தர மக்களின் நலன் கருதி முடிவெடுப்பதாக கூறுவதென்றால், ஒன்றரை கிரவுண்டு வரையிலான நிலங்களை மட்டும் மதிப்புத் தொகை கூட வாங்காமல் வரன்முறை செய்து தரலாம்.

நிலத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நகர்ப்புறத்தில் நடுத்தர மக்கள் அரை கிரவுண்டு நிலத்தை கூட வாங்க முடியாத நிலையில் ஒன்றரை கிரவுண்டு நிலம் வைத்திருப்பவர்களை நடுத்தர பிரிவு மக்களாக அரசு கருதுவது வியப்பாக உள்ளது.

ஒன்றரை கிரவுண்டுக்கு மேல் மூன்று கிரவுண்டு வரையும் அதற்கு மேலும் பரப்பளவு கொண்ட (அரசு கையகப்படுத்தி வைத்துள்ள) நிலங்களை பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களே கிரையம் செய்து வைத்திருக்கின்றனர்.

இதனால், நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிராக நடப்பவர்களை, அங்கீகரித்து அந்த நிலங்களை அவர்களுக்கே வரன்முறைப்படுத்தி அளிக்க வேண்டிய அவசர அவசியம் என்ன என்பதே அனைத்து தரப்பினரிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.

அரசியல் பின்னணி கொண்ட பலர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை, தொழிற்சாலை உள்ளிட்டவை பெயரில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்களுக்கே அளிப்பதற்காகவே அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்களை ஏழைகளின் நலனுக்காக என்று கூறி வரன்முறைபடுத்திய விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அடுத்த வரன்முறை தேவையா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

நன்றி: தினமணி 01.09.2008