Monday, June 30, 2008

செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் அலுவலகத்தை 2008, சூன் 30 திங்கட்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர் அவர்கள்: 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி ஆக வேண்டும் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். சூர்யநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.

அவர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில் தமிழைச் செம்மொழி என்று கூறுவதே பொருத்தமாகும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை அள்ளி வீசியிருக்கிறார். அவரது கனவு இன்று நனவாகியுள்ளது.

அதனால்தான் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் வழங்கினோம். மதுரை அருகே உள்ள பரிதிமாற் கலைஞரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கினோம்.

அவரது வீட்டைப் பார்க்க நான் சென்றிருந்தபோது என் வாழ்நாளில் முதன்முறையாக அக்ரகாரத்தில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மைசூரில் இயங்கி வந்தது. இதனை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று நடுவண் அமைச்சர் அர்சூன் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த நிறுவனத்தின் அலுவலகம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் விருது: தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட "தொல்காப்பியர் விருது' வழங்கப்படும்.

குறள் பீட விருதுகள்: வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இரண்டு குறள் பீட விருதுகள் வழங்கப்படும்.

இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்ட விருதுகள் வழங்கப்படும்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

இந்த விருதுகள் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் இந்தப் பணிகளைச் செய்யாமல் இருந்து விட்டதால் இப்போது விரைவுபடுத்தியிருக்கிறோம்.

இந்த விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் வா.செ. குழந்தைசாமி, எழுத்தாளர் செயகாந்தன், மா. நன்னன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் பணி திங்கள்கிழமை மாலையே தொடங்கும்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றை அமைக்க எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி வழங்குகிறேன். இந்த ரூ.1 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் வரலாற்று பயன்மிக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படுகிற விருதுகளைத் தவிர இந்த விருதுகள் தனியாக வழங்கப்படும்.

தமிழ் செம்மொழியாகி விட்டால் விலைவாசி குறையுமா? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? பசி பட்டினி நீங்கி விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் அதையும் செய்துவிட்டு, தமிழைச் செம்மொழியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் என்றார் கருணாநிதி.

விழாவில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஐம்பெருங்குழு, எண்பேராயம் குழு உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

விவசாயத்தில் ஊதாரித்தனம் நிறைய இருக்கிறது-வேளாண் அறிஞர் நம்மாழ்வார்

விவசாயத்தில் ஊதாரித்தனம் நிறைய இருக்கிறது. அதாவது நாற்றை நடும்போது ஐந்தாறு நாற்றாக சேர்த்து சேற்றில் நட்டு வருவது நமது நடைமுறையாக இருக்கிறது.

இதை மாற்றி ஒற்றை ஒற்றை நாற்றாக நடவேண்டும். இதனால் ஏக்கருக்கு 30 கிலோ விதை செலவாவதற்கு பதில் வெறும் 2 கிலோ மட்டுமே செலவாகும். இந்த முறையால் விளைச்சலும் இருமடங்கு ஆகும்.

இதேபோல் நீர் வரத்து குறைவான இடங்களில் நெல்லுக்குப் பதில் தானியப் பயிர்களைப் போட்டு நிறைய இலாபம் பார்க்கலாம்.

நம் தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகம். இதற்கு கேழ்வரகுதான் சரியான மருந்துணவு இதை வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

அதற்குப் பதில் இங்கேயே அதைப் பயிரிட்டு ஊராட்சிகள் அளவில் குடோன்களை வைத்து சேமித்து விற்கலாம். இந்த மாற்றங்களையெல்லாம் நாம் உடனடியாக செய்யவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை நாம் விரைவிலேயே சந்திக்க வேண்டிவரும் இது வீண் பயமுறுத்தல் இல்லை...

நன்றி: நக்கீரன்

இரசாயண உரங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கவேண்டும்-வேளாண் அறிஞர் நம்மாழ்வார்

இரசாயண உரங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடைவிதிக்கவேண்டும்.

முதற்காரணம், இதற்காக பல நூறு கோடிகளை மானியமாக நடுவண் அரசு வீணாய் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

இரசாயண உரத்தினால் மண் நச்சுத்தன்மை அடைகிறது. இதன் மூலம் விளைபொருளும் நச்சுத்தன்மையடைந்து நமது உடல் நலத்தையும் பாதிப்படைய வைக்கிறது.

ஆடுமாடுகளை வளர்த்து வந்தாலே அவற்றின் கழிவுகளே சிறந்த இயற்கை உரமாக நமக்குக் கிடைக்கும். ஆனால் இப்படிப்பட்ட மாடுகளை அடிமாடாக அனுப்பிவிடுகிறார்கள். எனவே மாவட்ட எல்லைகளைத்தாண்டி மாடுகளைக் கொண்டுபோகக்கூடாது என அரசு ஒரு சட்டத்தைப் போடவேண்டும். இதனால் இயற்கை உரத்தையும் தரமான ஆரோக்கியமான விளைபொருட்களையும் நாமே உற்பத்தி செய்துகொள்ளலாம்.

நன்றி: நக்கீரன்

Wednesday, June 25, 2008

அடுக்குமொழிப் பேச்சால் வழங்கப்படுவதல்ல நீதி... - காட்டுமோட்டான்

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200-வது ஆண்டு விழா நேற்று காலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கரிகாற்சோழன் அரங்கில் நடந்தது இவ்விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் பேசும் போது...


“நீதிக்கு புறம்பாக நாங்கள் நடைபோட மாட்டோம்। நீதிக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதற்கு ஆறுதல் கூறுகின்ற வகையில் நீதியை காப்பாற்றுகின்ற வகையில், நீதியைப் பாதுகாக்கின்ற வகையில் நீதிபதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு எப்படி நாங்கள் துணையிருக்க வேண்டுமோ அப்படி துணையிருப்போம் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.”


இச்செய்தியை படித்த என்னைப்போன்ற காட்டுமோட்டான்கள் பூரித்துப்போனார்கள்... நீதியை காப்பாற்ற கருணாநிதி தயாராகிவிட்டார்! என்று...


கருணாநிதி அவர்கள் காப்பாற்றிய நீதியை பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது... பாமரர்களுக்கு, படித்தவர்களுக்கு, சாமானியனுக்கு, ஏழைக்கு, பாழைக்கு, விவசாயிகளுக்கு, திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நீங்கள் இதுவரை வழங்கிய நீதி ஒருபக்கம் இருக்கட்டும்...


உங்கள் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புக்கள் எத்தனையோ பேர் நீங்கள் முதல்வராக இருந்தபோது இருக்கின்றபோது நீதி கிடைக்காமல் தத்தளித்திருக்கிறார்கள்... அவர்களுக்காக நீங்கள் இதுவரை செய்தது என்ன...

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரிலிருந்து தொடங்கி தி.மு.க.-வின் வளச்சிக்காக பாடுபட்ட த.கிருட்டிணன் வரை இவர்களுடன் மதுரையில் உயிரோடு எரிக்கப்பட்ட தினகரன் ஊழியர்களுக்காக தாங்கள் வழங்கிய நீதி என்ன?

நீதிக்கு காயம் ஏற்பட்டாலே பொருத்துக்கொள்ள மாட்டீர்களே!
அதை குத்தி கிழித்தெரிந்து சின்னாபின்னமாக்கியவர்களை நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள்...

அடுக்குமொழிப் பேச்சால் வழங்கப்படுவதல்ல நீதி...

காட்டுமோட்டான்

Tuesday, June 24, 2008

"அழகாக ஏய்க்கத் தெரிந்தவனே, அருமையான பிரதிநிதி'' -கவியரசு கண்ணதாசன்


புனிதமான பிரதிநிதிகள் என்ற தத்துவம்,
சாகசம் நிறைந்த பிரதிநிதிகள் கைக்குப் போயிற்று.

"அழகாக ஏய்க்கத் தெரிந்தவனே, அருமையான பிரதிநிதி''
என்று ஒரு பகுதி ஆயிற்று.

ஜனங்கள் தம் நாயகர்களைத் தேர்ந்தெடுப்பதில்
வழி தவறத் தொடங்கினார்கள்.

நாணயம் ஊமையாகிக் கிடந்தது.

ஏய்ப்பவர்களின் வாய், ஏழெட்டு மொழி பேசிற்று.
மொழி இனிமை, முழு நியாயத்தையும் சாப்பிடத் தொடங்கிற்று.

தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றதாக நம்பிக்கொண்டு, அவர்கள் ஆயுள் தண்டனைக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டார்கள்.

ஒரே ஒரு அயோக்கியனைச் சுமந்து கொண்டிருந்த மக்கள்,
ஒரு கூட்டமான அயோக்கியர்களைச் சுமக்கத் தலைப்பட்டனர்.

....கண்ணதாசன்

Monday, June 23, 2008

பதவி என்பது வேட்டி, துண்டு என்றெல்லாம் எங்களுக்கு வசனம் பேச தெரியாது-மருத்துவர் இராமதாசு

சென்னையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு பேசியதாவது:

ஆறு மாதத்திற்கு முன்பு பேசிய பேச்சை அன்றுதான் சிடி (குறுவட்டு) கிடைத்து தெரிந்து கொண்டதை போல் பாவனை ஏற்படுத்தியுள்ளனர்.

“கூட இருந்து குழிபறிப்பவர்” என்று எனக்கு பட்டம் சூட்டப்பட்டுள்ளது. சிடியிலுள்ள விஷயங்கள் ஆபத்தானவை, பயங்கரமானவை. கொலைசதிக்கு உடந்தை யார் யார் என்று தெரியும் என்று முதல்வர் பேசியுள்ளார். உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் ஐஜி ஜாபர்சேட் போன்றவர்கள்தான் உங்கள் கூடவே இருந்து குழிபறிப்பவர்கள். நாங்கள் அல்ல.

பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரம் பேசுவார்கள். அது கட்சி விவகாரம். சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை ஜாபர்சேட் மறுநாளே உங்களிடம் கொடுத்துவிட்டார். அது தொடர்பாக கடிதம் எழுதினேன். நீங்களும் எழுதினீர்கள். நீங்கள் மூத்த அரசியல் தலைவர். உங்கள் மீது தூசு விழுந்தால் எங்கள் தொண்டர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் வளர வேண்டும். யாரும் ஒரு துளி ரத்தம் சிந்தக் கூடாது என்பதுதான் எங்கள் அரசியல் சித்தாந்தம்.

அரியலூர் மாநாட்டுக்கு உங்களை வரவழைத்து சிறப்பாக நடத்தியது இந்த குருதான். என் படம் ஒரு இடத்தில்கூட இல்லாமல் எல்லா இடங்களிலும் உங்கள் படத்தையே வைத்தார். நீங்கள்கூட ஆற்காடு வீராசாமி யிடம், உன்னால் இப்படி நடத்த முடியுமா? என்று கேட்டீர்கள். ஆனால் இன்று கொலை சதி நடத்த உட்கார்ந்து பேசுகின்றனர் என்கிறீர்கள்.

சில உண்மைகளை சொல்லாமல் இருக்க முடியவில்லை. மிசா காலத்தில் தி.மு.க.-வினர் கொடுமை அனுபவித்தனர். அடுத்து சனதா ஆட்சி. அப்போது மதுரை வந்த இந்திரா காந்தி மீது தி.மு.க.வினர் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். நெடுமாறன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் காதர், ஓட்டுநர் ஜான் ஆகியோர் அவரை காப்பாற்றினர்.

இதில் அப்துல் காதருக்கு ஒரு கண் பறிபோய்விட்டது. காவல்துறை எச்சரிக்கையால் திருச்சி பயணத்தையும் இரத்து செய்துவிட்டு இரயிலில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு சென்னைக்கு வந்தார் இந்திரா காந்தி.

அந்த வழக்கில் அப்ரூவரான பாவலர் முத்துசாமி, தமிழகம் வரும் இந்திரா உயிருடன் திரும்பக்கூடாது என்று திமுக செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டது என்று சாட்சியமே அளித்தார்.

ஆனால் சில காலத்தில் நீங்களே “நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக” என்று பேசினீர்கள். அப்படியெல்லாம் எங்களுக்கு பேச வராது.

எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதுவரை திராவிடம் பேசிவந்தவர்கள் தமிழர் படை என்ற அமைப்பை உருவாக்கி மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தினர். அண்ணாசாலையில் இருந்த மலையாளி ஓட்டல் பலமுறை தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்தை நீங்கள் என்ன பாடு படுத்தினீர்கள் என்பதை இன்றைக்கும் எனக்கு சொல்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். விலகிய பிறகு திமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். இரத்தம் ஒழுக வெளியே வந்ததை மறக்க முடியுமா?

மதுரையில் நடந்த சம்பவம்... எந்த சம்பவத்தை பற்றி நான் சொல்ல? நான் எதையும் சொல்லப்போவதில்லை.இப்படியெல்லாம் நாங்கள் இந்த 19 ஆண்டுகளில் ஏதாவது வன்முறையில் ஈடுபட்டிருக்கிறோமா?

பெரியாரை போல், காமராஜரை போல், கக்கனை போல் இருக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்ட நேர்மையான காமராஜர் வாழ்ந்த வீட்டை படம் பிடித்து போட்டு பங்களாவில் வசிக்கிறார் என்று பிரசாரம் செய்தீர்கள்.

திமுக ஆட்சியில் நாங்கள் எந்த சிபாரிசுக்கும் போகவில்லை. கூட இருந்தே குழி பறிப்பவர்கள் என்று எங்களை சொல்பவர்கள் எந்த அளவு தோழமையை கடைப்பிடித்தனர்? ஏதாவது உதாரணம் காட்ட முடியுமா? தோழமை என்ன ஒருவழி பாதையா?

ஏழைகளுக்காக கல்விக் கோயில் கட்டியதும், உங்களை அழைத்துதான் திறந்தோம். அந்த இடத்தை புறம்போக்கு என்று சொன்னால் நான் பொறுத்துக் கொள்ளலாம். மாவீரன் (குரு) பொறுத்துக் கொள்ள முடியுமா? பத்திரிகை, தொலைக்காட்சி என்று நாங்கள் நடத்தும் எல்லா ஊடகங்களையும் உங்களை வைத்துதான் துவக்கினோம்.

உங்கள் ஆட்சியை விமர்சனம் செய்தால், மத்திய அமைச்சர் அன்புமணி அவரது அம்மாவிடம், “அவரது வயதை பார்த்து அப்பாவை பேசச் சொல்லுங்கமா. பெரியவர் மனசு கஷ்டப்பட போகுது” என்பார். அவரது அம்மாவும் அதனை என்னிடம் சொல்வார். அப்படி உங்களை தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்புமணி போற்றினார்.

ஆனால் ஜிப்மர், எய்ம்ஸ் என எந்த விஷயத்திலாவது, நீ செய்வது நல்ல காரியம்; நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்லியிருக்கிறீர்களா?மருத்துவ மாணவர்களை தூண்டிவிட்டு 3 மாதம் போராட வைத்தனர். நீங்கள் தூண்டி விட்டதாக சொல்லவில்லை. ஆனால் தூண்டி விட்டவர்களை தடுத்து நிறுத்தினீர்களா?

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல போவதாக என்னிடம் சொல்லிவிட்டு, என் பதிலைக்கூட கேட்காமல் சென்றவர் அன்புமணி. உங்களிடம் அத்தனை அன்பு வைத்திருக்கிறார். எங்களை இப்படி பேசினால் நியாயமா? இது அடுக்குமா?அந்த அம்மையார் ஆட்சி அமைத்த 3 மாதத்தில் அவரது கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். அதன்பிறகு நாலே முக்கால் ஆண்டு எதிர்கட்சியாக துணிச்சலுடன் செயல்பட்டோம். உங்களைப் போல பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பயந்து பயந்து செயல்படவில்லை.

பதவிக்காக இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை. எங்களுக்கு பதவி ஆசை இல்லை. அதே சமயம், பதவி என்பது வேட்டி, துண்டு என்றெல்லாம் எங்களுக்கு வசனம் பேச தெரியாது.

இந்த மண்ணில் கால் வயிறு கஞ்சி குடித்துவிட்டு உழைக்கும் பாட்டாளிகளுக்காக பாடுபடும் கட்சி பா.ம.க. உங்கள் கொள்கை வேறு. எங்கள் கொள்கை வேறு. அதுதான் உங்களை எரிச்சல் படுத்துகிறதோ என்னவோ தெரியவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது?

பா.ம.க.-வை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. அப்படி பாமக அழிந்தால் மொழி, இனம் காக்க குரல் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்படும். எனவே எங்கள் பயணம் தொடரும். எங்களுக்கு என்றும் தோல்வி யில்லை. இவ்வாறு மருத்துவர் இராமதாசு பேசினார்.

Sunday, June 22, 2008

இந்திய அரசு இலங்கைக்கு போர்படை உதவிகள் அளிப்பதைத் தடுக்க, தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

இந்திய அரசு இலங்கைக்கு போர்படை உதவிகள் அளிப்பதைத் தடுக்க, தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத்துறை செயலாளர் விசய் சிங் ஆகியோர் திடீரென கொழும்பு சென்றுள்ளனர்.

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில் இவர்கள் அங்கு சென்றுள்ளது போர்படை உதவிகள் அளிப்பது தொடர்பாகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஏற்கெனவே நார்வே அரசு சமரசத் தூதரை சிங்கள அரசு தன்னிச்சையாக திருப்பி அனுப்பியதைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றை நிறுத்தியுள்ளன.

இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறும் நிலையில் இந்தியா அந் நாட்டுக்கு பெருமளவு நிதி உதவி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கவும் முன் வந்திருப்பது மேற்கண்ட அதிகாரிகளின் கொழும்பு பயணம் மூலம் உறுதியாகிறது. என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும்-பழ.நெடுமாறன்

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.

கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை விலக்கும்போது அக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைமை தன்னிச்சையாக முடிவு எடுத்து பா.ம.க.-வை விலக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராமம் பிரச்னையில் கூட்டணிக் கட்சிகள் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் மார்க்சீய பொதுவுடமை கட்சி, எந்தக் கட்சியையும் விலக்கவில்லை.

ஆனால், தமிழகத்தில் பதவிக்காக சந்தர்ப்பவாத கூட்டணி உள்ளது. எந்தக் கொள்கையையும் அடிப்படையாக் கொண்டு அமையாத கூட்டணி என்பதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

எனவே, கூட்டணி அமையும் போதே கொள்கையும், குறைந்தபட்ச செயல் திட்டமும் இருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மத்தியிலும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் கொள்கையும் இல்லை. குறைந்தபட்ச செயல் திட்டமும் இல்லை. தி.மு.க. அரசு பெரும்பான்மை இல்லாத அரசாக இருந்து கொண்டு ஏதேச்சாதிகாரமாக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை நடத்துகிறது. இது சர்வாதிகாரப் போக்காகும். இன்றைக்கு பா.ம.க.-வுக்கு ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் மற்ற கட்சிகளுக்கும் வரக்கூடும்.

இதனால், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி இல்லாத வகையில், மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை அமைக்க முன்வர வேண்டும். அப்போது தான் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்றார்.

நன்றி:தினமணி

Thursday, June 19, 2008

புதியதாக அரசியல் கட்சி தொடங்கி அரசியல் பேசுகின்ற நடிகர்களுக்கு இருக்கும் தகுதி கூட வீரமணிக்கு இல்லை

தந்தை பெரியார் மானமும் அறிவும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க உயிருள்ளவரை திராவிடர் கழகத்தை வளர்த்தெடுத்தார்.

தமிழினத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தை தந்தை பெரியார் இறப்பிற்குப்பின் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொந்தமான வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்ட மானமிகு தமிழர் தலைவர்(!) வீரமணியார் அவர்கள் அவ்வப்போது அறிக்கைகளின் மூலம் மட்டுமே தன் இருப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தன் வாழ்நாளில் விரமணியார் மேற்கொண்டிருக்கும் தலையாயக் கடமை தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசை பாதுகாப்பது மட்டுமே. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விடும் அல்லவா? அதனால் கண் துஞ்சாது தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசை கட்டிக்காக்கும் பெரும்பொறுப்பு இந்தப் பூனையிடம் உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள தி.மு.க. அரசை காப்பாற்றி வருகிறார். (இவரால ஒரு ம...ம் ஆகாது என்பது தொடர்புடைய அனைவருக்கும் தெரியும்...).
நானும் இருக்கிறேன் பார்! என்பதற்காக தற்போதைய தி.மு.க. - பா.மக. அரசியல் சூழலில் நாளேடுகளில் இன்று (19.06.2008) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “சுயமரியாதை உணர்வோடு தமிழ் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இழி சொற்களை தாங்கிக் கொண்டு பா.ம.க.வோடு உறவை தொடருவது சரியாக இருக்குமா” என்றும்,
“திராவிட இயக்கத் தோள்களின் மீது ஏறி நின்று பயனடைந்துவிட்டு, திராவிட இயக்கங்களையே இன்று பா.ம.க. தலைமை எள்ளி நகையாடுவதை திராவிட இயக்கங்கள் மனதில் பதியவைத்து கொள்ளாமல் இருக்கமுடியுமா?”
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், போலிசாரையும் கூட தரக்குறைவாக ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் விமர்சிப்பது ஒரு தவறான முன்மாதிரி அல்லவா”. என்று வினா எழுப்பியுள்ளார்.
ஐயா நல்லவரே எங்களைபோன்ற சாதாரண தமிழனுக்குள்ள கேள்வி என்னன்னா,
  • தொடர்ந்து தந்தை பெரியார் கூட இருந்து திராவிடர் கழகத்தில் பணி செய்தால் சுயமரியாதை கெட்டுப்போய்விடும் என்பதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதா? சுயமரியாதைக்காக தொடங்கப்பட்ட தி.மு.கவில் நீங்க ஏன் போய் சேரல...
  • உண்மையான தி.மு.க.வினர் யாரும் அ.இ.அ.தி.மு.க.-வை இன்னும் திராவிட இயக்கமா ஏற்றுக்கொள்ளவில்லை... இந்த நிலையில அ.இ.அதி.மு.க.-வை நீங்க திராவிட இயக்கமா ஏற்றுக்கொள்கிற்களா? இல்லையா?...
  • அ.இ.அ.தி.மு.க.வை நீங்கள் திராவிட இயக்கமா ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் தற்போது ஒரு பாப்பாத்தி தலைமையில் இயங்கும் இயக்கத்தை நீங்கள் எப்படி திராவிட இயக்கமுன்னு சொல்றீங்க...
  • நீதிமன்றத்திலேயே நீதிபதியையும் அவங்க சொன்ன நீதியையும் துணிச்சலா எதிர்த்த பெரியார் வழி வந்ததாகச் சொல்லும் நீங்கள் அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல் எப்படி தவறான முன்னுதாரனம் ஆகும். ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டப்போது... கைது செய்ய வந்த காவலர்களை கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் தரக்குறைவாக பேசியானர்கள் என்பது தாங்கள் அறிந்ததுதான்... அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது நாடறிந்த இரகசியம்...

வெட்கக்கேடு....

புதியதாக அரசியல் கட்சி தொடங்கி அரசியல் பேசுகின்ற நடிகர்களுக்கு இருக்கும் தகுதி கூட வீரமணிக்கு இல்லை என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்

காட்டுமோட்டான்


Tuesday, June 17, 2008

மாநாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து மனசுல ஏதோ ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யுது...

கருப்பன்: வணக்கம் அண்ணே. நல்லா இருக்கீங்களா?

சிவப்பன்: வணக்கம் தோழர், நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க... என்ன உங்களை ஒரு வாரமா பார்க்க முடியல?

கருப்பன்: நம்ம கட்சி மகளிர் அணியோட முதல் மாநில மாநாடு நடந்தது இல்லையா? அதான்... மாநாட்டு வேலை, அதோட 14, 15 இரண்டு நாளும் கடலூரு மாநாட்டுப் போனேன்...

சிவப்பன்: அப்படியா தோழர், ஆதான் பார்க்க முடியல... மாநாடு எல்லாம் சிறப்பா முடிந்ததா? மாநாடு எழுச்சியா இருந்ததா?

கருப்பன்: மாநாடு சிறப்பாதான் நடந்தது... நம்ம தளபதி இல்லாததுதான் குறை.

சிவப்பன்: தளபதிக்கு உண்மையாகவே உடம்பு சரியில்லையா? இல்ல வேற எதாவது காரணமா?

கருப்பன்: அதான் ஒன்னும் புரியல... தலைவரும் அதபத்தி எதுவும் பேசல... ஆனா மாநாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து மனசுல ஏதோ ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யுது...

சிவப்பன்: என்ன தோழர் நீங்களே இப்படி செல்லிட்டிங்க...

கருப்பன்: உண்மையான கட்சிக்காரனுக்கு, உயிர கொடுத்து கட்சிக்காக உழைச்சவங்களுக்கு எந்த கட்சியிலும் மரியாத இல்ல அண்ணே... கோயில் சுத்தற மாதிரி தலைமையை சுத்திவரவங்க... காசு பணம் உள்ளவங்க... சொந்த, பந்தம்... சேத்துக்கினவங்க... வச்சிக்கினவங்க... அவங்களுக்கு பொறந்தவங்க... இப்படிப்பட்டவங்களுக்குத்தான் பேரு..., புகழ், மரியாதை, பதவி எல்லாம்...

சிவப்பன்: என்னப்பா திடீர்னு இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசற... உனக்கு மனசு சரியில்லன்னு நினைக்கிறேன்... நாம வழியில நின்னு இதப்பத்தி பேச வேணாம்... உங்க கட்சிக்காரங்க யாராவது கேட்டுட்ட போராங்க... இதப்பத்தி நாம அப்புறம் பேசலாம்...

கருப்பன்: நிங்க சொல்றதும் சரிதாண்ணே... இதப்பத்தி நாம அப்புறம் பேசுவோம்...

சிவப்பன்: சரி தோழர்... வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா? உங்க மகள் பன்னிரெண்டாவது தேர்ச்சி அடைஞ்சிதே... மேற்கொண்டு என்ன படிக்க வைக்கப்போற... அந்த வேலைய முதல்ல பாரு... நாம அப்புறமா பேசுவோம்...

Monday, June 16, 2008

பல கோடி ரூபாய் முதலீட்டில் நடத்தப்பட்ட திமுக மகளிர் அணி முதல் மாநில மாநாடு - யாருக்காக? எதற்காக?

கடந்த மூன்று மாதங்களாக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் மகளிர் அணி முதல் மாநில மாநாடு இப்போது நடைபெறும் அப்போது நடைபெறும் என்று ஒருவழியாக கடந்த சூன் 14, 15 ஆகிய நாட்களில் கோலாகலமாக பிரமாண்டமாக திருவிழாபோல் நடைபெற்றது.

பலகோடி ரூபாய் (சுமார் 20 கோடி! வசூல் செய்தது எவ்வளவு என்று தெரியவில்லை.) செலவில் தி.மு.க. வினரால் நடத்தப்பட்ட இந்தத் திருவிழா பற்றி கடந்த ஒரு மாதமாக அனைத்து நாளேடுகளும் நாளுக்கொரு செய்தி என்று எழுதித் தீர்த்தன. அதன் பலன் தி.மு.க.வினரின் விளம்பரம் மூலம் அனைத்து நாளேடுகளுக்கும் கிடைத்துவிட்டது. (எது நடந்தால் என்ன? நாளேடுகளுக்கு காசு வந்தால் சரிதான்.)

மாநாட்டின் முதல்நாள் நடைபெறும் வழக்கமான பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு தமிழகமெங்குமிருந்து திமுக தொண்டர்கள் திரண்டனர் அல்லது திரட்டப்பட்டனர். காசு கொடுத்தால் அனைத்துக் கட்சிகளுக்கும் கொடி பிடிக்க தற்போது பல மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் தயாராகவே உள்ளன. அவர்களை அழைத்துவரும் கடமை தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உண்டு. போக்குவரத்து கழகம் இலாபத்தில் இயங்கினால் என்ன? நட்டத்தில் இயங்கினால் என்ன? ஆளுங்கட்சிக்குப் பயன்படாத பொதுச்சொத்து எதற்கு?

பீடு நடைபோட்டு வந்த மாதர்குல மாணிக்கங்களை, மகளிருக்கு துணையாக வந்த கழகக் கண்மணிகளை, கழகக் குலவிளக்குகளை, கழகத் தூண்கள் ஆற்காடு வீராசாமி, பேராசிரியர், துரைமுருகன் ஆகியோர் அருகில் இருக்க தன் மனைவியும் துணைவியும் பக்கத்தில் அமர வைத்து மூன்று மணிநேரம் நடைபெற்ற இப்பேரணியை கலைஞர் கருணாநிதி அவர்கள் பார்த்து ரசித்தார்.

மாநாட்டு நிறைவு நாளில் வழக்கம்போல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் தமிழக மக்கள் அனைவரும் ஊடகங்களின் மூலம் பார்த்து படித்து அறிந்த செய்திகள்தான்.

வழக்கம்போல் கலைஞரின் உரையுடன் திருவிழா மன்னிக்கவும் மாநாடு இனிதே நிறைவேறியது.

எதையும் எப்போதும் தெளிவாகவோ, முழுமையாகவோ, பேசாதா, எழுதாத, செய்யாத கலைஞர் அவர்கள், நடந்தேறிய மாநாடு எதற்காக? யாருக்கா? நடத்தப்பட்டது என்பதை தமிழக மக்களுக்கு கவிதை வழியாகவோ, கட்டுரை வழியாகவோ, வினா-விடை அறிக்கையின் வழியாகவோ தெளிவுபடுத்தினாலோ அல்லது கோடிட்டுக் காட்டினாலோ நன்றாக இருக்கும்.

Friday, June 13, 2008

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மகளிர் மாநாடு நாட்டுக்கு என்ன சொல்லப் போகிறது?

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து மாநில மாநாடு, மண்டல மாநாடு, முப்பெரும்விழா, இளைஞரணி மாநாடு என பல்வேறு மாநாடுகளை சிறப்பாக ஆராவரத்துடன் நடத்தியுள்ளது. இருப்பினும் மகளிருக்கென்று இதுவரை எந்தவொரு மாநாடும் நடத்தப்படவில்லை.

இன்னிலையில் 14, 15 சூன் 2008 ஆகிய இரு நாட்களும் கடலூர் மாநகரில் கோடிக்கணக்கான ரூபாய் பொருட்ச்செலவில் மிக பிரமாண்டமான மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? என்பதை தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறர்கள்... நாமும் அவர்களுடன் காத்திருப்போம்...

Friday, June 6, 2008

பார்வை