Monday, June 23, 2008

பதவி என்பது வேட்டி, துண்டு என்றெல்லாம் எங்களுக்கு வசனம் பேச தெரியாது-மருத்துவர் இராமதாசு

சென்னையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு பேசியதாவது:

ஆறு மாதத்திற்கு முன்பு பேசிய பேச்சை அன்றுதான் சிடி (குறுவட்டு) கிடைத்து தெரிந்து கொண்டதை போல் பாவனை ஏற்படுத்தியுள்ளனர்.

“கூட இருந்து குழிபறிப்பவர்” என்று எனக்கு பட்டம் சூட்டப்பட்டுள்ளது. சிடியிலுள்ள விஷயங்கள் ஆபத்தானவை, பயங்கரமானவை. கொலைசதிக்கு உடந்தை யார் யார் என்று தெரியும் என்று முதல்வர் பேசியுள்ளார். உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் ஐஜி ஜாபர்சேட் போன்றவர்கள்தான் உங்கள் கூடவே இருந்து குழிபறிப்பவர்கள். நாங்கள் அல்ல.

பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரம் பேசுவார்கள். அது கட்சி விவகாரம். சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை ஜாபர்சேட் மறுநாளே உங்களிடம் கொடுத்துவிட்டார். அது தொடர்பாக கடிதம் எழுதினேன். நீங்களும் எழுதினீர்கள். நீங்கள் மூத்த அரசியல் தலைவர். உங்கள் மீது தூசு விழுந்தால் எங்கள் தொண்டர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் வளர வேண்டும். யாரும் ஒரு துளி ரத்தம் சிந்தக் கூடாது என்பதுதான் எங்கள் அரசியல் சித்தாந்தம்.

அரியலூர் மாநாட்டுக்கு உங்களை வரவழைத்து சிறப்பாக நடத்தியது இந்த குருதான். என் படம் ஒரு இடத்தில்கூட இல்லாமல் எல்லா இடங்களிலும் உங்கள் படத்தையே வைத்தார். நீங்கள்கூட ஆற்காடு வீராசாமி யிடம், உன்னால் இப்படி நடத்த முடியுமா? என்று கேட்டீர்கள். ஆனால் இன்று கொலை சதி நடத்த உட்கார்ந்து பேசுகின்றனர் என்கிறீர்கள்.

சில உண்மைகளை சொல்லாமல் இருக்க முடியவில்லை. மிசா காலத்தில் தி.மு.க.-வினர் கொடுமை அனுபவித்தனர். அடுத்து சனதா ஆட்சி. அப்போது மதுரை வந்த இந்திரா காந்தி மீது தி.மு.க.வினர் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். நெடுமாறன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் காதர், ஓட்டுநர் ஜான் ஆகியோர் அவரை காப்பாற்றினர்.

இதில் அப்துல் காதருக்கு ஒரு கண் பறிபோய்விட்டது. காவல்துறை எச்சரிக்கையால் திருச்சி பயணத்தையும் இரத்து செய்துவிட்டு இரயிலில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு சென்னைக்கு வந்தார் இந்திரா காந்தி.

அந்த வழக்கில் அப்ரூவரான பாவலர் முத்துசாமி, தமிழகம் வரும் இந்திரா உயிருடன் திரும்பக்கூடாது என்று திமுக செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டது என்று சாட்சியமே அளித்தார்.

ஆனால் சில காலத்தில் நீங்களே “நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக” என்று பேசினீர்கள். அப்படியெல்லாம் எங்களுக்கு பேச வராது.

எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதுவரை திராவிடம் பேசிவந்தவர்கள் தமிழர் படை என்ற அமைப்பை உருவாக்கி மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தினர். அண்ணாசாலையில் இருந்த மலையாளி ஓட்டல் பலமுறை தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்தை நீங்கள் என்ன பாடு படுத்தினீர்கள் என்பதை இன்றைக்கும் எனக்கு சொல்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். விலகிய பிறகு திமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். இரத்தம் ஒழுக வெளியே வந்ததை மறக்க முடியுமா?

மதுரையில் நடந்த சம்பவம்... எந்த சம்பவத்தை பற்றி நான் சொல்ல? நான் எதையும் சொல்லப்போவதில்லை.இப்படியெல்லாம் நாங்கள் இந்த 19 ஆண்டுகளில் ஏதாவது வன்முறையில் ஈடுபட்டிருக்கிறோமா?

பெரியாரை போல், காமராஜரை போல், கக்கனை போல் இருக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்ட நேர்மையான காமராஜர் வாழ்ந்த வீட்டை படம் பிடித்து போட்டு பங்களாவில் வசிக்கிறார் என்று பிரசாரம் செய்தீர்கள்.

திமுக ஆட்சியில் நாங்கள் எந்த சிபாரிசுக்கும் போகவில்லை. கூட இருந்தே குழி பறிப்பவர்கள் என்று எங்களை சொல்பவர்கள் எந்த அளவு தோழமையை கடைப்பிடித்தனர்? ஏதாவது உதாரணம் காட்ட முடியுமா? தோழமை என்ன ஒருவழி பாதையா?

ஏழைகளுக்காக கல்விக் கோயில் கட்டியதும், உங்களை அழைத்துதான் திறந்தோம். அந்த இடத்தை புறம்போக்கு என்று சொன்னால் நான் பொறுத்துக் கொள்ளலாம். மாவீரன் (குரு) பொறுத்துக் கொள்ள முடியுமா? பத்திரிகை, தொலைக்காட்சி என்று நாங்கள் நடத்தும் எல்லா ஊடகங்களையும் உங்களை வைத்துதான் துவக்கினோம்.

உங்கள் ஆட்சியை விமர்சனம் செய்தால், மத்திய அமைச்சர் அன்புமணி அவரது அம்மாவிடம், “அவரது வயதை பார்த்து அப்பாவை பேசச் சொல்லுங்கமா. பெரியவர் மனசு கஷ்டப்பட போகுது” என்பார். அவரது அம்மாவும் அதனை என்னிடம் சொல்வார். அப்படி உங்களை தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்புமணி போற்றினார்.

ஆனால் ஜிப்மர், எய்ம்ஸ் என எந்த விஷயத்திலாவது, நீ செய்வது நல்ல காரியம்; நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்லியிருக்கிறீர்களா?மருத்துவ மாணவர்களை தூண்டிவிட்டு 3 மாதம் போராட வைத்தனர். நீங்கள் தூண்டி விட்டதாக சொல்லவில்லை. ஆனால் தூண்டி விட்டவர்களை தடுத்து நிறுத்தினீர்களா?

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல போவதாக என்னிடம் சொல்லிவிட்டு, என் பதிலைக்கூட கேட்காமல் சென்றவர் அன்புமணி. உங்களிடம் அத்தனை அன்பு வைத்திருக்கிறார். எங்களை இப்படி பேசினால் நியாயமா? இது அடுக்குமா?அந்த அம்மையார் ஆட்சி அமைத்த 3 மாதத்தில் அவரது கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். அதன்பிறகு நாலே முக்கால் ஆண்டு எதிர்கட்சியாக துணிச்சலுடன் செயல்பட்டோம். உங்களைப் போல பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பயந்து பயந்து செயல்படவில்லை.

பதவிக்காக இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை. எங்களுக்கு பதவி ஆசை இல்லை. அதே சமயம், பதவி என்பது வேட்டி, துண்டு என்றெல்லாம் எங்களுக்கு வசனம் பேச தெரியாது.

இந்த மண்ணில் கால் வயிறு கஞ்சி குடித்துவிட்டு உழைக்கும் பாட்டாளிகளுக்காக பாடுபடும் கட்சி பா.ம.க. உங்கள் கொள்கை வேறு. எங்கள் கொள்கை வேறு. அதுதான் உங்களை எரிச்சல் படுத்துகிறதோ என்னவோ தெரியவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது?

பா.ம.க.-வை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. அப்படி பாமக அழிந்தால் மொழி, இனம் காக்க குரல் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்படும். எனவே எங்கள் பயணம் தொடரும். எங்களுக்கு என்றும் தோல்வி யில்லை. இவ்வாறு மருத்துவர் இராமதாசு பேசினார்.

3 comments:

said...

:)))))))


நல்லாருக்கு

அப்படியே இந்த வோர்டு வெரிபிகேசன தூக்கிட்டா நல்லலாருக்கும்

said...

“நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக”

:-))

TAMIL MOZHI 1960
SEEM MOZHI 2000
KANNI MOZHI 2007

PUDUVAI SIVA

said...

நன்றி!

நான் புதுசா பதிவு போடுபவன் வோர்டு வெரிபிகேசன் அப்படின்னா என்னங்கையா... அது எதுக்காக... அத எப்படி தூக்கறதுன்னு தெரியல...
தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லிக்கொடுங்கையா...