Thursday, July 31, 2008

இலங்கைத் தூதரகம் செயல்படாமல் தடுக்க வேண்டும்-இந்திய பொதுவுடமை கட்சி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்திய பொதுவுடமை கட்சி சார்பில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டித்தின்போது பேசிய இந்திய பொதுவுடமை கட்சியின் தேசிய செயலர் து.இராசா அவர்கள் பேசியதாவது;

“1974-ம் ஆண்டு கச்சத் தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்பட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

பிறகு நெருக்கடி நிலை காலத்தில் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. கச்சத் தீவில் நமக்கு உரிமைகளை மீண்டும் பெறவேண்டும். இல்லையெனில் கச்சத் தீவு ஒப்பந்தத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கச்சத் தீவுக்கு அருகில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்ளதாக சொல்ல முடியாது என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் தமிழக மீனவர்களுக்கு மன்மோகன்சிங் அரசு துரோகம் இழைத்துவிட்டது. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

சர்வதேச கடல் எல்லையை குசராத், மகாராட்டிர மீனவர்கள் தாண்டும்போது, பாகிஸ்தான் அந்த மீனவர்களை சுட்டுத்தள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் இராசபக்சவிடம் பேச வேண்டும். தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நிரந்தர தீர்வுக்கு சம்மதிக்கவில்லை எனில் கச்சத் தீவு ஒப்பந்தத்தையே இரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இந்திய பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு அவர்கள் பேசும்போது

“தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா என்று கருதவேண்டியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 800 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இலங்கைத் தூதரகம் செயல்படாமல் தடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய பொதுவுடமை கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக து. இராச, இரா. நல்லகண்ணு, பழ.நெடுமாறன், தா. பாண்டியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி: தினமணி

Tuesday, July 29, 2008

யானை கட்டி போரடிச்ச தமிழனை சோத்துக்காக கண்டவங்ககிட்ட கையேந்த வைச்சிடாதிங்கடா பாவிங்களா...-காட்டுமோட்டான்

2011-ல் 30 இலட்சம் பேருக்கு வேலை அளிக்கும் “புதிய தகவல் தொழிந்நுட்ப கொள்கை”-யை தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்-னு எல்ல ஊடகத்திலும் இன்னிக்கு செய்தி வந்திருக்கு...

இந்தத்துறையில 250 கோடி ரூபாய் முதலீடு போடுகிறவனுக்கு 1.5 கோடி உதவித் தொகை... 5 ஆண்டு வரிவிலக்கு... பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு... 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம்... துணை நகரம்... அடிப்படை கட்டமைப்பு... தரமான சாலை... இப்படி நிறைய சலுகைகளை வாரி வழங்க இருக்காங்க...

இப்படி ரூ.200 கோடி முதலீடு... ரூ.150 கோடி முதலீடு... ரூ.100 கோடி முதலீடு... ரூ.50 கோடி முதலீடு... ரூ.5 கோடி முதலீடு... ன்னு தகவல் தொழில் நுட்பத்துறையில பத்து ரூபாய முதலீடு போட்டு (ரூ.10) பத்தாயிரம் ரூபாய் (ரூ.10,000) அள்ளுகிறவனுக்கேல்லாம் அரசாங்கம் வாரி வாரி சலுகையை வழங்குது...

மக்களுடைய அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி, கல்வி, மருத்துவம் இந்தத்துறையை கண்டுக்கத்தான் யாருமில்ல... மனுசன மானத்தோட வாழவைக்குற துறைகளுக்கு இம்மியளவு தூக்கிப்போட்டு... தகவல் தொழில் நுட்பத்துறைக்கு வாரி கொட்டுறது என்னய்யா நியாயம்...,

உங்க வாதப்படியே படிச்சவனுக்கு வேலை கொடுப்பதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கிறதாவே வச்சிக்குவோம்... அந்தத்துறையில அப்படி என்னதான் வேலை செய்யுறானுங்க...
அமெரிக்கக்காரனுக்கும் ஐரோப்பாகாரனுக்கு கணக்குப்புள்ள வேலையும் எடுபிடி வேலையும் பாக்குறத தவிர அங்க என்ன உருப்படியா நடக்குது... அந்தத்துறையே நாசாமா போனாக்கூட உலகத்துல எவனும் பட்டினி கிடந்து சாகப்போறது இல்ல...

ஆனா நாட்டுல விவசாயமே இல்லன... அவனவன் எதடா திண்ணு உயிர்வாழுவிங்க...
இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விசயத்த கருணாநிதி தெளிவுபடுத்துனும்... (அவரு எதையுமே தெளிவா பேச மாட்டார், செய்யமாட்டார் என்பது வேறு விசயம்) உணவு உற்பத்தி தமிழ்நாட்டுக்கு வேணுமா? வேணாமா?
வேண்டும்; அப்படின்னா விவசாய விளைநிலங்களையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கவும், அதை வளர்க்கவும் உங்க வாழ்நாள்ள ஏன் இதுவரைக்கும் உருப்படியான நடவடிக்கை எடுக்கல...
வேண்டாம்; அப்படின்னா தமிழ்நாட்டு மக்கள் உணவுத்தேவைக்காக இந்த தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
இல்ல; தமிழ்நாட்டு மக்கள் 2011-ல் பிளாப்பி, சி.டி, டி.வி.டி., ஆர்டுவேரு, சாப்ட்டுவேரு இதெல்லாம் திண்ணு உயிர்வாழ கத்துக்கொடுக்க ஏதாவது பன்னாட்டு கம்பெனிகூடயோ ஆந்திராகாரனுங்க கம்பெனிகூடயோ ஒப்பந்தம்போட்டு தமிழனை அடகு வச்சி கருணாநிதி குடும்பத்துக்கு தொடர்ந்து தரகுக்கூலி கிடைப்பதற்காக திட்டம் ஏதாவது வச்சிருக்கிங்களா...


யானை கட்டி போரடிச்ச தமிழனை சோத்துக்காக கண்டவங்ககிட்ட கையேந்த வைச்சிடாதிங்கடா பாவிங்களா...

Monday, July 28, 2008

மு.க. அழகிரி பிறந்தநாளுக்கு இந்தியில் சுவரொட்டி!

'தமிழைக் காக்க அவதாரமெடுத்துத் தனிமைச் சிறையில் வாடினேன்' என்பார் - 'மொழிப் போர்' தியாகிகளுக்கு வாழ்வுப் பணம்' என்பார் - 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்று வசனம் பேசுவார்! இதெல்லாம் மேடை நாடகத்தில் தான். உண்மையில் அப்படியன்று

மு.க. அழகிரி பிறந்த பொன்னாளுக்கு மூதூர் மதுரையில் இந்தியில் வாழ்த்துச் சுவரொட்டி ஒட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், தமிழாய்ப் பிறந்த தமிழ் இனத்தலைவரின் மகனார் விருப்பப்படி!

நன்றி: தெளிதமிழ்

வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒருபோதும் தயங்கவில்லை-பழ. நெடுமாறன்-4

... ... ...
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும்போது இந்தியக் கடற்படை ஒருபோதும் தலையிடாது என்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு உள்ளது. அதற்கேற்றாற்போல இந்திய அரசு நடந்து கொள்கிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையைத் திருப்தி செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். அவர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இலங்கையும் அதைப் பின்னணியில் இருந்து இயக்குகிற அன்னிய நாடுகளும் விரும்புகின்றன.

சிங்களக் கடற்படைக்கும் சிங்கள அரசுக்கும் எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒழிய இந்தியாவின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசைத் திருப்தி செய்ய இந்தியா எவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரி, அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் இந்திய அரசு தயங்கவில்லை. இப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள அரசின் போக்கில் மாற்றம் வரவில்லை.

1962-ஆம் ஆண்டில் இந்தியா சீனா எல்லைப் போர் வெடித்தபோது சீனாவை ஆக்கிரமிப்பாளர் என அறிவிக்க வேண்டுமென இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்தியபோது அதற்கு இணங்குவதற்கு பிரதமர் பண்டாரநாயகா மறுத்துவிட்டார்.

1971-ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இலங்கை வழியாகச் சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச, சிங்கள அரசு அனுமதித்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒருபோதும் தயங்கவில்லை.

இந்தியாவிடமிருந்து ராணுவ, நிதி உதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள அரசு, சிறிதளவு நன்றி கூட இந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள இந்த உண்மைகளை எண்ணிப் பார்க்கத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும்!

முற்றும்
நன்றி: தினமணி

Thursday, July 24, 2008

இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது; சிறுபிள்ளைத்தனமானது - பழ. நெடுமாறன்-3

... ...
அன்னிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்பதற்கு இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவ உதவியை இலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் இந்தியாவே முந்திக் கொண்டு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க வேண்டும் என தில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள்.

அதன்படியே செயல்படுகிறார்கள். இதன் மூலம் இலங்கை மேலும் துணிவு பெற்றுவிட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இல்லை என்று கருதுகிறது.

இலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவும் பிற நாடுகளும் ராணுவ ரீதியான உதவிகளையும் நிதி உதவிகளையும் அள்ளி அள்ளித் தருவது என்பது எதற்காக? இந்நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதுதான் இந்நாடுகளின் நோக்கமாகும்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதனால் ஆபத்து வந்து சேரும்''.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த உண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் உணர்ந்திருந்தார். அன்னிய வல்லரசுகள் எதுவும் இலங்கையில் காலூன்ற அவர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள இன வெறி அரசை அனுமதிக்கவும் இல்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரையில் எந்த அன்னிய வல்லரசும் இலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.

ஆனால் ராஜீவ் கையாண்ட தவறான அணுகுமுறையின் விளைவாக இலங்கையில் அன்னிய வல்லரசுகள் தடம் பதித்தன. இதன் விளைவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் துணிவு சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய இந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. அதுவும் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.

இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் பலி கொடுக்கவும் இந்திய அரசு தயங்கவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

தொடரும்...
நன்றி: தினமணி

Tuesday, July 22, 2008

தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன - பழ. நெடுமாறன்-2

...
இந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இனப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரி, இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் ஆகிய இருவரும் ராஜீவின் ஆலோசகர்களாக விளங்கினார்கள். இந்திராவின் ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.

இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் அணுகுமுறை என்பது சிங்கள அரசுடன் ஆதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.

சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளும் இஸ்திரேலிய மொசாட் படையினரும் பயிற்சி அளித்தனர். அமெரிக்காவின் ராணுவ செல்வாக்கு இலங்கையில் ஊடுருவியது.

இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது.

ராஜீவ் கடைப்பிடித்த இந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.
 1. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமையத் தொடங்கின.
 2. இலங்கை இனப்பிரச்னைக்கு சிங்கள அரசு கூறிய தீர்வை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
 3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் அரசால் இயலவில்லை.
 4. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது.
 5. திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான எண்ணெய்க் கிடங்குகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டபோது இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா, அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.
இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்குத் துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவப் பொருளாதார உதவிகள் இக்கொள்கையின் விளைவே ஆகும். தென்னாசியாவைப் பொருத்தவரை இந்தியாவை அதனுடைய எல்லைக்குள்ளாகவே அடங்கியிருக்கும்படி செய்ய அமெரிக்கா விரும்புகிறது.

டிகோ - கார்சியா தீவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து இருப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் அமெரிக்காவுக்குத் தேவை. அதற்காக இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது.

மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக இலங்கை திகழ்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. ஆனால் இதன் விளைவாக இந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்துவிட்டது.

தென்னாசிய நாடுகளின் அமைப்பிற்கு இயற்கையான தலைவராக இந்தியா இருந்தபோதிலும் அந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக இல்லை. தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன.

இந்தியாவைச் சுற்றி அந்த நாடுகள் இப்போது வியூகம் அமைத்துள்ளன. இந்த வியூகத்தின் ஓர் அங்கமே இலங்கையாகும்.
இந்த வியூகத்துக்கு பக்கபலமாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் உள்ளன. இந்த வியூகம் பலம் பெறுவது இந்தியாவின் சுதந்திரத்துக்கு அபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இன்னமும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணரவில்லை.

தொடரும்...
நன்றி: தினமணி

வீரமணி அடிகளாரின் அருள்வாக்கு-காட்டுமோட்டான்

ஒவ்வொரு அமாவாசைக்கும் செத்துப்போன பெத்த அப்பனுக்கு சோறு போடுவதாக நினைத்து காக்காவுக்கு! படையல் போடுற மாதிரி...

மாசத்து ஒரு முறை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அறிக்கை மூலம் அருள்வாக்கு சொல்வது இந்த வீரமணிக்கு ஒரு பொழப்பாப் போச்சி...

ஒழுங்காக கல்வித் தொழிலைப் பார்த்தோமா, அண்ணாமலையாருக்கு கிரிவலம் வர மாதிரி கோபாலபுரத்தை சுத்திச் சுத்தி வந்தமோ... வழியில ஏதாவது அன்னதானம், பட்டை, மொத்தைன்னு ஏதாவது கெடச்சது திண்ணு வயித்த ரொப்பிக்கினு கட்டைய நீட்டினோமான்னு இல்லாம... இவருக்கு எதுக்கு இந்த வீண் வேலை... இவரு எதுக்கு தயாநிதி மாறனை பாராட்டி அறிக்கையெல்லாம் விடுராரு...

“ஏஞ்சாமி... உங்களுக்கு எதுக்கு இந்த வேலையத்த வேலை... மதுரக்காரரு கோவிச்சிக்கனாருன்ன ஒங்கலால தாங்கமுடியுங்களா...

எக்குதப்பா உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னாகூட உங்க நண்பர் கருணாநிதியால கூட உங்களை காப்பாத்த முடியாது... ஏன்னா அவருக்கு இப்பல்லாம் என்ன செய்யரோம்... என்ன பேசரோம்... புரியாம ஏடாகுடாமா ஏதாவது பேசிக்குன்னு இருக்காரு... அவரே சூழ்நிலை கைதியா இருக்காருன்னு எல்லோரும் சொல்றாங்க...

நான் சுயமரியாதைகாரன் அப்படின்னு மார்த்தட்டிக்குற அவராலேயே இப்ப சுயமா சிந்திக்க முடியல... பேச முடியல... எழுதமுடியல... செயல்பட முடியல...

அறிஞர் அண்ணா காலத்திலிருந்து அவரு கூட இருந்து தி.மு.க-வுக்காக பாடுபட்ட த.கிருட்டிணனை கொன்னவனுங்க மசுறகூட அவரால புடுங்க முடியல...

அவர நம்பி எந்தத் துணிச்சல்ல தயாநிதி மாறனை பாராட்டுரிங்க...

ஆமா அது என்னங்க “நடந்தது நடந்ததாக இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்”...

மதுரையில தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூனு பேரு செத்து அவங்க பொண்டாட்டிங்க தாலி அறுத்தாங்க இல்ல... அத அப்படியே விட்டுடச் சொல்றிங்கலா?

இல்ல... “உன் வீட்டுக்காரனை நான் கொன்னது கொன்னதா இருக்கட்டும் நாம ரெண்டுபேரும் சேர்ந்து புள்ளகுட்டி பெத்து நல்லபடியா வாழலாம் வான்னு” கூப்புடரிங்களா?...

உங்களுக்கெல்லாம் ஏயா கருப்பு சட்ட, பேசாம அதை கழட்டிட்டு சிலுக்கு ஜிப்பா மாட்டிகொண்டு ஒரு வெத்தலை டப்பாவும், ஒரு குடையும், ஒரு பையும் எடுத்துக்கொண்டு... வேற ஏதாவது தொழில் செய்யலாமுல்ல...

காட்டுமோட்டான்

Monday, July 21, 2008

யாருக்கு எதிராக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது- பழ. நெடுமாறன்-1

1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. மாறாக அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.

மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். இவரது கட்சியின் ஆதரவு மத்திய ஆட்சி நீடிப்பதற்கு மிக மிக இன்றியமையாததாகும்.

இந்த நிலைமையில் தில்லிக்கு எச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஏமாற்றுவதாகும்.

யாருக்கு எதிராக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராக என்றால் அந்த அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கமாகும். அப்படியானால் தன்னை எதிர்த்து, தானே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.

இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு இந்தியா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான இந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை இந்தியாவுக்கு விடப்பட்ட அறைகூவலாக அல்லது குறைந்தபட்சம் அவமானமாகவோ கூட இந்திய அரசு கருதவில்லை.

ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவருக்குக்கூட இந்திய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னஞ்சிறிய இலங்கைக்கு இந்தத் துணிவு எங்கே இருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? இதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் உள்ளனவா? என்ற கேள்விகள் நமது உள்ளங்களைக் குடைகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இலங்கை இனப் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறை என்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.

 1. இந்தியாவின் செல்வாக்குக்கு உள்பட்ட ஒரு நாடாக இலங்கை கருதப்பட்டது.
 2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்னையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.
 3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.
 4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது ராணுவ ரீதியாக உதவி அளிக்க முன் வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.
 5. திரிகோணமலை மாவட்டத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலோ அன்னிய ராணுவத் தளங்கள் அமைவதை இந்தியா எதிர்க்கும்.
 6. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலை பகுதியின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.

இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக இந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட சிங்கள அரசின் பயங்கரவாதம் செயலிழந்தது.

இந்திய அரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள அரசு ஆளாக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள அரசு முதலில் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.

நன்றி: தினமணி
தொடரும்...

Thursday, July 10, 2008

குருவை கைது செய்ததில் கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் எல்லாம் முதல்வர்தான்-மருத்துவர் இராமதாசு

திருச்சியில் மத்தியச் சிறையிலிருக்கும் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவைச் சந்தித்த பிறகு வியாழக்கிழமை மருத்துவர் இராமதாசு அளித்த பேட்டி:
"வன்னியர் சங்கத் தலைவர் குரு கைது செய்யப்பட்டதில் சட்டம் தானாக அதன் கடமையைச் செய்யவில்லை; சட்டம் ஏவப்பட்டிருக்கிறது."

குருவின் மீது புகார் தெரிவித்ததாகக் கூறப்பட்ட குணசேகரன், செல்வி ஆகியோர் அவர்களாகவே முன்வந்து "குருவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை” என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறை வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி 2 நாள் நாடகத்தை அரங்கேற்றி, பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.

குருவை கைது செய்ததில் கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் எல்லாம் முதல்வர்தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

மதுரையில் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு வழக்குகள் போடப்பட்டன. முதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேயர், துணை மேயர் உள்ளிட்ட திமுகவினர் அன்றைய நாளே பிணையில் வெளிவந்துள்ளனர்.
2-ம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட "காட்டுவாசி' முருகன், ஓராண்டாகத் தலைமறைவாக இருந்துவிட்டு திடீரென மதுரை நிதிமன்றத்தில் சரணடைந்து, அன்றைய நாளே பிணையில் வெளிவந்தார்.

ஆனால், நாங்கள் புகார் கொடுக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறிய பிறகும் குருவுக்கு 15 நாள் காவல்- இரவோடு இரவாக கடத்தி 2 நாள் காவல்துறையினரின் காவலில் ரகசிய விசாரணை என்ற நாடகம்.
காட்டுவாசிக்கு ஒரு நீதி; காடுவெட்டிக்கு ஒரு நீதியா? பாமகவினர் துவண்டுவிட மாட்டார்கள். குறிப்பாக குரு துவண்டுவிட மாட்டார். சிறையில் அவர் உற்சாகமாக இருக்கிறார்.

குருவின்மீது மாவட்ட ஆட்சியர் தவறான நடவடிக்கை எடுத்துவிடக் கூடாது. அவ்வாறு எடுக்கப்பட்டால், பாமகவின் மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்திப்பார்கள்.

5 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் திமுகவின் ஆட்சி "பாஸ் மார்க்' பெறப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசியம் - பாதுகாப்பு - சட்டம் - கைது?

வன்னியர் சங்கத் தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவருமாகிய “காடுவெட்டி” குரு வியாழக்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரனைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், குரு கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ம.க. முன்னாள் மகளிரணிச் செயலர் செல்வி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கிலும் குரு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் புகார் கொடுத்த இருவரும் எங்கள் புகாரில் குருவின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், காவல்துறையினர் வெள்ளைத்தாளில் எங்களிடம் கையெழுத்து வாங்கி பொய்புகார் பதிவு செய்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குருவுக்கு பிணை வழங்கக்கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் பொதுக் கூட்டங்களில் பேசி வந்தது மற்றும் 7 குற்ற வழக்குகள் உள்ளதாலும் குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தே. கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில், குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இரா. சுடலைக்கண்ணன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

Sunday, July 6, 2008

தமிழ்-தமிழர்-உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 06.07.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் “தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே முதன்மை பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும்” என்ற கொள்கையோடு தேர்தலை சந்தித்த திரு.இராம.நாராயணன் அவர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய அணியைச் சேர்ந்தவர்களும் அமோக வெற்றியடைந்துள்ளனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முன்னாள் தலைவர் இராம.நாராயணன் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னேற்ற அணியும் பஞ்சு அருணாசலம் தலைமையில் தமிழ்த் திரைப்பட ஜனநாயக முற்போக்கு அணியும் போட்டியிட்டன.

இராம.நாராயணன் அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பாலயா பிரபாகரன் ஆகியோரும் செயலாளர் பதவிகளுக்கு கே.முரளிதரன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு காசமொய்தீனும் போட்டியிட்டனர். இவர்களுடன் 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

பஞ்சு அருணாசலம் அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஏ.எம்.இரத்தினம், பாபுகணேசு ஆகியோரும் செயலாளர் பதவிகளுக்கு இராதிகா சரத்குமார், கேயார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு இராதாகிருட்டிணனும் போட்டியிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.யசோத்வர்தன், எல்.சந்திரகுமார், வி.பார்த்திபன் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் வாக்களிக்க 601 உறுப்பினர்கள் தகுதி பெற்றிருந்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தல் பணிகள் அனைத்தும் 2 காட்சிப் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 532 வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 4.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 394 வாக்குகள் பெற்று இராம.நாராயணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.ஏ.சந்திரசேகரன் (313 வாக்குகள்), அன்பாலயா பிரபாகரன் (340 வாக்குகள்) ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்தி பாண்டியன் 299 வாக்குகளும் கே.முரளிதரன் 286 வாக்குகளும் பெற்றும் வெற்றியடைந்தனர். காசாமொய்தீன் 345 வாக்குகள் பெற்று பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் தமிழ்-தமிழர் உரிமையை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் முதன்மைப் பொறுப்பிற்கு தமிழர்கள் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத்துறைகளிலும் இந்த வெற்றி கிடைக்க தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம்...

பத்தாண்டுகளுக்கு முன் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்த்திரைப்பட படைப்பாளிகள் சங்கம் தொடங்குவதற்கா இயக்குநர் பாரதிராசா போன்றவர்கள் எடுத்த முயற்சிக்கு ஒருசிலர் முட்டுக்கட்டை ஏற்படுத்தாமல் இதுபோன்று தமிழர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படத்துறையும் இன்றைக்கு தமிழனின் கையில் இருந்திருக்கும்.

அந்த இலக்கு நோக்கி தமிழ்த்திரைப்பட தமிழர்கள் பயனித்து வெற்றியடைய வாழ்த்துவோம்...


படம்: தினமணிக்கு நன்றி

Saturday, July 5, 2008

தமிழர் மட்டுமே போட்டியிட வேண்டும்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கு “தமிழர் மட்டுமே போட்டியிட வேண்டும்” என்று புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.

காலம் கடந்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், தமிழ்-தமிழர்-தமிழ்நாடு நலனுக்கு நன்மை பயக்கும் நல்ல முடிவு. இம்முடிவில் தொடர்புடையவர்கள் உறுதியுடன் அதை நடைமுறைபடுத்த வேண்டும். இது போன்று தமிழ் திரைப்படம் தொடர்புடைய பிற சங்கங்களிலும் விதியை உருவாக்கி நடைமுறை படுத்தவேண்டும்.

இதை கண்டித்தும் எதிர்த்தும் சில சலசலப்புகள் எழுந்துள்ளன. சரத்குமாரும் தற்போது அவருக்கு பொஞ்சாதியாக இருப்பவரும், இது போன்று பலருக்கு பொஞ்சாதியாக இருந்தவருமான இராதிகா போன்ற தமிழ்த் திரையுலக மேதைகள்...

“கலைக்கு மொழி, சதி, மதம் எதுவும் கிடையாது.”
“அரசியலில் வேண்டுமானால் தமிழர் மட்டும் போட்டியிடலாம். திரைப்படத்துறையில் அப்படி போட்டியிடக் கூடாது.”...

என்பது போன்ற தத்துவங்களையும் மாந்த நேயப் பண்புகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

“ஏண்டா! வெண்ணைங்கலா... மலையாள திரையுலகமும் கன்னட திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் வடநாட்டு திரையுலகங்களும் இது போன்ற விதிகளை வைத்துள்ளதே அதைப்பற்றி நீங்க ஏண்டா வாயத்திறக்காம இருக்கிங்க...”

என்று சாதாரண பாமரனும் கேள்வி எழுப்புகிறான். அவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன? அல்லது மற்றவர்கள் கலைஞர்கள் இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா?

விருந்துண்ண வந்தவனுக்கும்... பிழைக்க வந்தவனுக்கும் இங்கே வாழ வழியுண்டு... அதற்காக தமிழனின் வீட்டையோ படுக்கையையோ கண்டவனுக்கும் பங்குபோட்டு தரமுடியாது...

Tuesday, July 1, 2008

தே.மு.தி.க.-வில் பண்ருட்டி இராமச்சந்திரன் ஓரங்கட்டப்பட்டாரா?-காட்டுமோட்டான்

நம்ம புரட்சி கலைஞரு விசயகாந்து நாயுடு தேசிய! முற்போக்கு!! திராவிடர்!!! கழகம்!!!!!!!!! அப்படின்னு கட்சி தொடங்கினாரு... இல்ல...

குறுக்கால... புரட்சின்னா என்னன்னு யாரும் வயைத்திறந்து கேக்கக்கூடாது. புரட்சித் தலைவர்... புரட்சித் தலைவி... மாதிரி புரட்சி கலைஞர்... அப்புறம் கேப்டன் என்றால் என்னன்னும் யாரும் பட்டிமன்றம் நடத்தக்கூடாது...

தே.மு.தி.க-வை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யமுடியாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லிவிட்ட நிலையில்...

“கட்சியை இவன் என்னடா பதிவு செய்றது... என் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே மனசுல பதிஞ்சிட்டாங்கடா...”-ன்னு விசயகாந்து பேசுனது உங்கக் காதுல விழுந்திருக்கும்னு நினைக்கிறேன்...

அந்நேரம் பார்த்து பி.இ. ஆனர்சு படிச்ச அரசியலுல பழம் திண்ணு கொட்டப் போட்ட முன்னாள் அமைச்சரு நம்ம பண்ருட்டியார் தே.மு.தி.க.-வில் சேர்ந்தார்...

விசயகாந்து நாயுடு பண்ருட்டியாரிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் வேலை “டெல்லிக்குப் போயி கட்சியை பதிவு செஞ்சிட்டு வாங்க...“
பண்ருட்டியாரும் தில்லியில முகாமடிச்சி சுளுவா வேலைய கச்சிதமா முடிச்சார்...

தே.மு.தி.க. கட்சிகாரங்களுக்கு ஒரே கொண்டாட்டந்தான்... தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம்போட்டு பண்ருட்டியார பேச அழைச்சாங்க... அவரும் அங்க இங்க போயி புரட்சிக்கலைஞரின் புகழ்பாடி அரசியல் பேச ஆரம்பிச்சாரு... எதிர் கட்சிக்காரங்கல அப்படி இப்படி மடக்குனாரு... அவருக்கு கட்சிக்காரங்க எல்லாரும் முக்கியத்துவம் கொடுத்தாங்க... நம்ம இராசாவுக்கு அறிவுற சொல்ல நல்ல ஆளு கிடைச்சிட்டார்ன்னு தே.மு.தி.க.காரங்க... நம்புனாங்க...

நம்ம புரட்சி கலைஞருக்கு கோவம் கோவமா வந்திருச்சி...
“ஏய்.............................. கம்பெனி ஆரம்பிக்கறது நானு... பேரு வாங்குறது நீயா?”
அப்படின்னு பண்ருட்டியார பார்த்து கண்ணு செவக்க விசயகாந்து நாயுடு கேட்டாரு...

பண்ருட்டியாருக்கு ஒன்னும் புரியல... “என்னடா இது வம்பாப்போச்சு இவரு கம்பெனி ஆரம்பிச்சாரா!!!!!!!!!!!!!!!! கட்சி ஆரம்பிச்சாருன்னுதான நாம சேந்தோம்... இவரு இன்ன இப்படி பேசுறாரேன்னு” சோந்து போயிட்டாறு.

விசயகாந்து நாயுடு கட்சிக்காரங்கல கூப்பிட்டு “இனிமே கட்டவுட் வைக்கும் போது என் படமும் என் பொண்டாடி படமும் மட்டும்தான் பெருசா போடனும்... வேற எவன் படமும் பெருசாப் போடக்கூடாது குறிப்பா பண்ருட்டியாரு படத்த பெருசா போடக்கூடாது”ன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு...

நாட்டுல வெலவாசி ஏறனத கண்டிச்சி நேத்து விழுப்புரம் மட்டுமில்லாம தமிழ்நாட்டுல ஆர்ப்பாட்டம் நடந்தது இல்ல அதுலயும் பண்ருட்டியார எங்கேயும் காணோம்...

பண்ருட்டியாரோட சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திலும் அவர காணோம்... நாதியத்துபோயி கெட்டந்த சி.ஆர்.பாசுகருன்னு ஒருத்தன்... அவன் யாருன்னு தெரியுதா? மக்கள் தொலைக்காட்சியில நீதிக்கு குரல் கொடுத்தாரே அவரேதான்... அந்த ஆளு சரியில்ல... அங்கங்க கைய நீட்டுறாருன்னு மக்கள் தொலைக்காட்சியில் இருந்து விரட்டி அடிச்சாங்க...

அங்க ஓட்டம் எடுத்தவன் நேரா நம்ம புரட்சி கலைஞர் விசயகாந்து நாயுடுகிட்ட ஒட்டிக்கிட்டு மூச்சு வாங்குனாரு... அவருதான் கடலூர் ஆர்ப்பாட்டத்துல கலந்துகிட்டு எழுச்சி உரையாற்றுனாரு...

அப்படி இப்படி கூட்டிச் கழிச்சிப் பார்த்தா பண்ருட்டியாரு இப்ப எங்க இருக்காருன்னு தெரியல...

மொத்தத்துல “பைத் பைத் நுத்திப்பத்து படாச்சிக்காக பத்து....”

காட்டுமோட்டான்