Tuesday, December 8, 2009

நடிகை ரம்பாவுக்கு ஓராண்டுக்கு எத்தனை பிறந்தநாள்?


இன்றைய “தினத்தந்தி” நாளேட்டில் நடிகை இரம்பா தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்ற செய்தி வந்துள்ளது. (மகிழ்ச்சி இரம்பா பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்..)

கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்ற செய்தி இந்த ஆண்டு அடிக்கடி “தினத்தந்தி”, “தினகரன்” போன்ற நாளேடுகளில் செய்தி வருகிறது. (முதல்வரை யாராவது சந்திச்சா செய்தி வரத்தான் செய்யும்)


ஆண்டுக்கு ஒருமுறைதான் அனைவருக்கும் பிறந்தநாள் வரும். (இரம்பாவுக்கு மட்டும் ஏம்பா அடிக்கடி பொறந்தநாள் வருதுன்னு யாரும் கேட்கக்கூடாது)


கருணாநிதி ஒரு செய்தியை வெளியிடுகிறார் என்றால் யாருக்கோ ஏதோ ஒரு செய்தியை குறிப்பால் உணர்த்துகிறார் என்று பொருள்... (உங்களுக்கு ஏதாவது செய்தி தெரிந்தால் சொல்லுங்க...)

Thursday, April 2, 2009

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன உணர்வுடன் செயற்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும்: தமிழருவி மணியன்

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன...' எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நாற்காலி மனிதர்களின் நாடக மேடைதான் தமிழக அரசியல் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.

நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக்கொள்வது?

'வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழை கூடக் களத்தில் நிற்பான். நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான் விரும்புவேன். பல மோசமான வெற்றிகளை விட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது' என்றார் ஜோர்ஜ் எலியட்.

ஆனால், நம் அரசியல் தலைவர்களுக்கு வெற்றிதான் முக்கியம். இங்கே கொள்கைகளை பலியிடுவதுதான் கூட்டணி தர்மம்!

பாவம், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்... பாசிச வெறி பிடித்த ராஜபக்ச இராணுவத்தால் கரிக்கட்டைகளாய் குவிக்கப்படும் தங்கள் சொந்த உறவுகளின் சோகம் தவிர்க்க உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த 'சொக்கத் தங்கம்' சோனியா காந்தியிடம் கலைஞர் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர்.

ஈழத்தமிழரின் பிரச்னை குறித்துப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்று இரவு, பகல் கண்ணுறக்கமின்றிக் கண்ணீர் வடிக்கும் 'தமிழ்க்குடி தாங்கி' மருத்துவர் இராமதாஸ், சிறிலங்கா அரசுக்குத் துணை நிற்கும் இந்திய அரசின் செயலைக் கண்டித்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து மகன் அன்புமணியை விலகச்செய்து, ஈழத் தமிழரின் இன்னலைத் தேர்தல் பிரச்சினையாக்கி மாநிலம் முழுவதும் இனவுணர்வைத் தூண்டுவார் என்று நாளும் நம்பிக்கை வளர்த்தனர். அவர்களுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின.

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் கொழுந்து விட்டெறிந்த ஈழ ஆதரவு நெருப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் தகித்தபோது, பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்து அரசியல் பாரம்பரியம் மறு உயிர்ப்பு அடைந்தது. அதனால் உந்தப்பட்டு தீக்குளிக்கும் அப்பாவித் தியாகிகளின் பட்டியல் நீண்டது. கருகிக் கிடந்த சடலம் தேடி ஓங்கிய குரலில் ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஓடியது. எங்கும் உணர்ச்சி வெள்ளம். கலைஞரின் ஆட்சி அதைக் கண்டு அரண்டது.

ஒருபுறம் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை, மறுபுறம் இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரவை என்று வீதி நாடகங்கள் இனவுணர்வு ஒப்பனைகளுடன் அரங்கேறின.

இரண்டு பக்க நாடகங்களிலும் அரிச்சந்திரன்-சந்திரமதி மயான காண்டப் புலம்பல்கள் நெஞ்சைப் பிளந்தன. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈழ நாடகத்தில் இரண்டு பக்கமும் அவசரம் அவசரமாய்த் திரை விழுந்தது.

கூட்டணி முயற்சிகள் தொடங்கின. 'இனமே அழியினும், ஈழமே கருகினும், சோனியா காந்தியின் கருணையில் ஆட்சி நாற்காலியில் அசையாமல் இருப்பதே அடியேன் லட்சியம்' என்று முடிவெடுத்த முதல்வர் கலைஞர், இராமதாசுக்கும் விஜயகாந்த்துக்கும் திருமாவளவனுக்கும் வெவ்வேறு வலைகளை விரித்து வைத்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சக்திமிக்க மாநிலக் கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் காங்கிரஸ், விஜயகாந்த்தையும் மருத்துவரையும் கட்டியணைத்துக் கூட்டணியமைக்கக் கால்களில் விழுந்து கண்ணீர்விட்டது. பேரம் படியாததால், விஜயகாந்த் லட்சிய வீரரானார். ஆசைப்பட்ட தொகுதிகள் அமையாததால், காங்கிரசை ஈழத் தமிழரின் விரோதியாய் இனம் கண்டுகொண்டார் இராமதாஸ். இதுதான் பின்னணி உண்மை!

கலைஞரின் வலையில் விடுதலைச் சிறுத்தைகள் விரும்பி விழுந்தன. இரண்டு தொகுதிகளுக்காக திருமாவளவனின் புறநானூற்றுப் போர்க்கோலத்தில் புழுதி படிந்தது.

ஈழத்தில் இன்றுவரை இனப்படுகொலை ஓயவில்லை. திசையெங்கும் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து உணவின்றி, மருந்தின்றி நம் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கின்றனர்.

ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை. பண்டாரநாயக்க, சேனநாயக்க, சிறிமாவோ, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விட ராஜபக்ச பெரிய இராஜதந்திரி இல்லை. ஆனால், அவர் ஜெயவர்த்தனவை விட மோசமான இன அழிப்பு அரக்கனாக விசுவரூபம் எடுத்ததற்கு இந்திய அரசின் ஆதரவுதான் அடித்தளமானது.

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது.

மன்மோகன் அரசு சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடப்பது நாடறிந்த உண்மை. காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விழாவில் மன்மோகன் சிங் மனம் நெகிழ்ந்து சோனியா காந்தியை 'மத்திய அரசின் காவல் தெய்வம்' என்று வர்ணித்திருக்கிறார்.

அந்தக் காவல் தெய்வம் இன்றுவரை ஈழத்தமிழர் அவலம் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதனால், அவருடைய தலைமையில் இயங்கும் காங்கிரசுக்கு இனவுணர்வுள்ள எந்தத் தமிழரும் வாக்களித்தால் அது தகுமா? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை மாநிலம் முழுவதும் மேடைபோட்டு, 'முதல்வர் கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்து விட்டார்' என்று முழங்கியது.

முத்துக்குமார் தொடங்கிவைத்த தீக்குளியல் தியாகம் வைகோவையும், இராமதாசையும், தா.பாண்டியனையும், திருமாவளவனையும் ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க 'எந்தத் தியாகத்தையும் செய்யும்' சூளுரைக்குத் தூண்டியது. உண்மையில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்திருப்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஆண்டுக்கணக்கில் 'பொடா' சட்டத்தில் வைகோவை சிறையிலடைத்தார் ஜெயலலிதா.

'பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிக்கவேண்டும்' என்று முதல்வராய் இருந்தபோது சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்தார். 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்' என்று இயேசுவின் இரக்கவுணர்வோடு, புத்தரின் பாதையில் ஜெயலலிதாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கி, பகைமையுணர்வைத் தியாகம் செய்து, ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்காக அன்று போயஸ் தோட்டத்தில் அடைக்கலமானார் புரட்சிப்புயல் வைகோ. நாளையே தொகுதி பேரங்கள் படியாமல் போனால், மறுபடியும் அவர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்வாள் தூக்குவார்!

'ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசு நியமனங்களே கிடையாது. சாலைப் பணியாளர்களை சாவின் விளிம்பில் நிறுத்திய ஜெயலலிதா, ஒரு துளி மையில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய தொழிலாளர் விரோதி' என்று பாட்டாளிகளின் நலனுக்காகப் பாடுபடும் இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்தனர்.

கிரிமினல் குற்றவாளிகளைப் போல அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த ஜெயலலிதாவைக் கோட்டையிலிருந்து வெளியேற்ற கலைஞருடன் கைகோத்தனர். இன்றோ, தலா மூன்று தொகுதிகளைக் கேட்டு வரதராஜனும் பாண்டியனும் போயஸ் தோட்டத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து வாதிட்ட காட்சிகளை நாடு பார்க்கிறது. ஆம், தொகுதி ஆசையில் தங்கள் வர்க்கப் போராட்ட உணர்வையே தியாகம் செய்துவிட்டவர்கள் அவர்கள்.

பெரியார், அம்பேத்கர் இருவரின் வாரிசாக வலம்வர விரும்பும் திருமாவளவனிடம் பெரியாரின் நாற்காலிப் பற்றற்ற பண்பும் இல்லை; அம்பேத்கரின் போர்க் குணமும் இல்லை.

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை அவர் கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் அடங்க மறுத்ததும் இல்லை; அத்துமீறியதும் இல்லை. மாறி மாறி சரணடைவார். 'காங்கிரசை அழித்துவிட்டுத்தான் இனி அடுத்த வேலை' என்று அவர் சூளுரைத்த வார்த்தை நெருப்பில் சாம்பல் பூப்பதற்கு முன்பே தன்மானத்தைத் அவர் தாரை வார்த்திருக்க வேண்டாம்.

டெல்லியிலிருந்து பறந்து வந்த காங்கிரசின் குலாம் நபி ஆசாத்துக்குப் பக்கத்தில் போய் நின்று கனிவுப் புன்னகை பூத்திருக்கவும் வேண்டாம். இப்போதும் கெட்டுவிடவில்லை... 'எனக்குக் கலைஞருடன்தான் கூட்டு. காங்கிரஸ்காரர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று திருமா பகிரங்கமாக வாக்குமூலம் வழங்குவாரா?

கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை இருக்கவிடமாட்டோம் என்று காங்கிரஸ் நண்பர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், கலைஞருக்காக அவர்களை அரவணைக்கத் துடிக்கும் திருமாவளவனின் சுயமரியாதைத் தியாகம் என்னவொரு சிலிர்ப்பைத் தருகிறது... பார்த்தீர்களா தோழர்களே! பொதுவாழ்வில் அடிக்கடி ஏதாவது தியாகம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்தவர் மருத்துவர் இராமதாஸ். சந்தர்ப்பவாத அரசியல் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததை, 'இதுதான் சாணக்கிய முத்திரை' என்று கொண்டாட வைத்த பெருமை அய்யாவுக்கே உண்டு.

ஒரே நேரத்தில் கலைஞரோடும் காங்கிரசோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் சாகசக் கலையை அவரன்றி இந்த அரசியலில் வேறு யாரறிவார்? அவருக்குத் தேவை அதிகத் தொகுதிகள். அவருடைய மகனுக்குத் தேவை மாநிலங்களவை உறுப்பினர் பதவி. அடுத்த தேவை, மத்திய அமைச்சர் பதவி. இதில் ஈழமாவது எள்ளுருண்டையாவது! தேர்தலுக்குத் தேர்தல் மருத்துவர் செய்யும் கொள்கைத் தியாகம் பெரிதினும் பெரிதல்லவா!

திரைப்பட நடிகர்களை, தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவைத்துப் பார்ப்பதில் காங்கிரசுக்கு அளவற்ற ஆசை. எம்.ஜி.ஆர். இருக்கும்வரை அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்த காங்கிரஸ், அவருடைய மறைவுக்குப் பின் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்று கவரி வீசியது. இன்று விஜய்காந்த்துக்குப் பட்டுக்கம்பளம் விரித்து, 'கோடி அர்ச்சனை' நடத்தப் பெட்டியைத் திறந்து வைத்தும் பயனற்றுப் போனது. பேரம் படியவில்லை... விஜயகாந்த் கூட்டணி காணா தனிப்பெரும் வீரராகி விட்டார்.

போகட்டும்... காரணம் எதுவாயினும்... விஜயகாந்த்தின் 'மக்கள் கூட்டணி அமைக்கும் மனோதிடம்' ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கு ஏன் வரவில்லை? இலங்கைத்தமிழர் பாதுகாப்புப் பேரவை அமைத்து இனவுணர்வை வெளிப்படுத்திய இந்தக் கட்சிகள் ஏன் தேர்தல் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தொடர்ந்திருக்கக்கூடாது? தங்கள் கொள்கையின் வெற்றி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா..? அல்லது, மக்கள் தங்களை நம்பவில்லை... அதனால் தோற்றுவிடுவோம் என்ற அச்சமா? தேர்தலில் வென்றால், வைகோ பிரதமரா? தா.பாண்டியன் உள்துறை அமைச்சரா? பா.ம.க. தலைமையில் மத்திய அரசா? தன்மானம் துறந்து தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் வென்றால் நிதி மந்திரியா?

எதற்காக இவ்வளவு சகிக்கவொண்ணாத சமரசங்கள்?

ஈழமக்களுக்கான அரசியல் தீர்வை ராஜபக்ச அரசு விரைவில் வழங்கும் என்று கலைஞருக்கு பிரதமர் கடிதம் வரைந்திருக்கிறார். இது தமிழரின் வாக்குகளைப் பெற காங்கிரசும் கலைஞரும் நடத்தும் தேர்தல் திருவிளையாடல். சிங்களர் - தமிழர் சம உரிமையுடன் வாழ வழிவகுக்கும் கூட்டாட்சி முறை, தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, எல்லா மதங்களையும் பராமரிக்கும் மதச்சார்பற்ற மத்திய அரசு, தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் இணைந்த தமிழ் மாநிலம், இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழருக்கு உரிய இடம் என்ற அரசியல் தீர்வை பௌத்த சிங்களப் பேரினவாத அரசு அங்கீகரிக்க இந்திய அரசு வழிவகுக்குமா? இலங்கை சிங்கள நாடு. ஆட்சிமொழி சிங்களம் மட்டும். அரசு மதம் பௌத்தம். ஆளப் பிறந்தவர் சிங்களர் என்று அடம் பிடித்தால் தமிழீழத்தை அங்கீகரிக்க மத்திய அரசு முன்வருமா?

இரண்டில் ஒன்றையும் செய்யாமல் கடைசித் தமிழனும் செத்து மடிந்து அநாகரிக தர்மபாலன் என்ற சிங்களத் தலைவன் கண்ட கனவின்படி இலங்கை முழுவதும் சிங்களர் நாடாய் மாறுவதற்கு, மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதா?

இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்? நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.

ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபக்கம்; உறவிழந்தவர் மறுபக்கம்; உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம். பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல். கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம். இன்று தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில். மக்கள் நலனில் மருந்துக்கும் நாட்டமில்லாத இவர்கள் அமர்ந்து ஆடும் நாற்காலிகள், சுயநல கீதம் இசைத்தபடி இடையறாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.

'என் நம்பிக்கையின் பாடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. தோல்வியின் பூக்களால் உடைந்த என் இதயத்தில், யாரோ துயருற்ற நண்பன் ஒருவன் அதை வைத்திருக்கிறான்' என்று ஈழத்திலிருந்து ஈனஸ்வரத்தில் வரும் சோக இராகம் இன்று யார் காதிலும் விழவில்லை. நாற்காலி மனிதர்கள் செவிடாகிவிட்டனர்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

Wednesday, April 1, 2009

“உத்தமர் கலைஞர் விருது” எனக்கு கிடைக்கும்!

தமிழ்நாட்டில் கருணாநிதியின் வசவுக்கு ஆளாகாத தலைவர்கள் யாருமே இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவருடைய நச்சுநாக்கின் பேச்சுக்கும், நஞ்சை மையாக ஊற்றி எழுதும் பேனாவுக்கும் இடையே சிக்கி சின்னாபின்னமாவது இந்தத் தமிழினம் தான்.

பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி...

பழ.நெடுமாறன் புலியின் முதுகை குத்தி பணம் பறிக்கும் கழுகு...

இராமதாசு ஒரு போலி...

வைகோ ஒரு சகுனி...

தா. பாண்டியன் ஒரு தற்குறி...

கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் குழப்பவாதிகள்...

இப்படி தமிழினத்திற்காக உண்மையாக போராடும், உழைக்கும், பேசும் தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்துவது இவரின் வாடிக்கை.

கருணாநிதி எது செய்தாலும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டு இருப்பவர்களே தமிழ்நாட்டின் தலைவர்களாக இருக்க தகுதியுடையவர்கள். அது எந்த கழிசடையாக இருந்தாலும் பரவாயில்லை... கருணாநிதியை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதும்...

தாங்க முடியல சாமி...

தமிழர்களுக்காக உழைப்பவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இழித்தும் பழித்தும் பேசும் கருணாநிதி அவர்களுக்கு இந்த கையாலாகாத தமிழனின் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,

தாங்கள் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி...

“கருணாநிதிக்கும் அவருடைய அனைத்து குடும்பத்திற்கும் யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கே பதவியும் பவிசும் வழங்கப்படும்.“

“யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு சிறை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.“

-என்ற சட்டத்தை கருணாநிதியின் நலன் கருதி பேராசிரியர் அவர்கள் முன்மொழிய வேண்டும்.

அந்த சட்டத்திற்கு “உத்தமர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப பாதுகாப்புச் சட்டம்” என்று பெயர் சூட்டவேண்டும்.

தமிழர்களை காங்கிரசுகாரர்களிடம் தவணை முறையில் அடகு வைத்து நீங்கள் காசு பார்ப்பதற்காக உங்கள் வயதிற்கு மீறி நீங்கள் உழைக்க வேண்டியுள்ளது. உங்கள் மாமாக்களுக்கும் மன்னிக்கவும் தம்பிகளுக்கும் வேலை மிச்சம்...

எனது கோரிக்கையை தமிழர்களின் நலன்கருதி தாங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக்காக இந்த ஆண்டிற்கான “உத்தமர் கலைஞர் விருதும்” ரம்பாவும் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்...

இப்படிக்கு,

கையாலாகாதத் தமிழன்

Tuesday, March 24, 2009

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்: அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.

இந்திய இராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள இராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள இராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தாவில் என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து ஆனையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள இராணுவம் அஞ்சுகிறது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் இரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது.

இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.

சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த இராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய இராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதைய போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.

இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.

''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது.

இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய இராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.

இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள இராணுவம்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.

தமிழ் ஆர்வலர்களோ, ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய இராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சதீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப்பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

- இரா. சரவணன்


அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா!

புல்மோட்டையிலும், மணலாற்றிலும் இந்திய ,ராணுவத்தினர் நேரடியாக போரில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வல்லரசான இந்தியா ஏற்கனவே 1989 களில் ஒரு சிறிய இயக்கமான விடுதலைப் புலிகளிடம் தோற்று ஓடியது. தன் சுய லாபத்துக்காக ஈழப் பிரச்சினையில் விளையாடிய இந்தியா கையை சுட்டுக் கொண்டது.

இப்போது திரும்பவும் தனது கொலைக்கரங்களை ஈழத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. சீனா பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ சென்றால் அவர்கள் தர்ம அடி கொடுப்பார்கள். அதனால்தான் என்னவோ, இளிச்சவாயர்கள் என்று எண்ணி தமிழர்களை சீண்டிக் கொண்டிருக்கிறது.

அதி நவீன ரேடார்கள், ஆயுதந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், செயற்கைக் கோள்கள் மூலம் உளவு சொல்லி இந்தியா நேரடியாக போரில் இறங்கினாலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை. போர் இழுத்துக் கொண்டே செல்கிறது. 70,000 இராணுவத்தினர், கணக்கு வழக்கில்லாமல் எண்ணற்ற ஆயுதங்கள், 7 நாடுகளின் உதவிகள், இத்தனையும் கொண்டு இலங்கை அரசு போரை நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. புலிகளின் சூழ்நிலையில் வேறு எந்த பெரிய இராணுவமாக இருந்தாலும் இந்நேரம் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்.

புலிகளும், தமிழர்களும் ஆக்கிரமிப்பு போரை நடத்தவில்லை. அவர்கள் தங்கள் பூர்வீக பூமியை அடிமைத்தளையில் இருந்து மீட்பதற்காக விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தர்மமும் நீதியும் அவர்களின் பக்கம் உள்ளது. தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம் என்று துரியோதனன் போல் கொக்கரித்த மகிந்தவுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறது.

எவராலும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட பிதாமகன் பீஷ்மர் மகாபாரதப் போரில் தோற்றுப் போனார். அக்கிரமத்திற்கும், அநீதிக்கும் துணை போனதால்தான் அவர் தோற்க நேர்ந்தது.

இந்தியா அல்ல, எந்த வல்லரசு உதவி செய்தாலும் எத்துணை வலிமையாக இருந்தாலும் அநீதியின் பக்கம் இருந்தால் வெற்றி கிட்டாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். எத்தனை அடக்குமுறைகளை ஏவினாலும், கொன்று குவித்தாலும், அக்கிரமம் செய்தாலும் சாம்பலிலிருந்தும் தமிழர்கள் மீண்டெழுவார்கள். விடுதலையை அடையும் வரை இந்த போராட்டத்தை தொடருவார்கள்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மறுபடியும் வெல்லும்'.
தமிழகத்திலிருந்து அதிபதி.

நன்றி தமிழ்வின்.காம்

Monday, March 23, 2009

பகத்சிங் - நினைவுநாள்

வீரவணக்கம்



23.03.1931
தூக்கிலடப்பட்ட நாள்

Friday, March 20, 2009

இரணிலுக்கு பணம் தருகிறது இந்தியா

ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ ''

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வருகின்றது.இதேபோன்று ஜேவிபி கட்சியிலும் முக்கிய தலைவர்களுக்கும் பெருமளவான நிதியினை '' ரோ '' அமைப்பு வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு சோரம் போயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்ளாது, மக்களுக்கு எதுவித அவலங்களும் ஏற்படவில்லை என நியாயப்படுத்திய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாராளுமன்ற அமர்வுகளின் போது சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிடிக்கு உரையாடுவதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆழ் மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.

நன்றி: பதிவு.காம்

புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் ஏவுகணைகளை வீசும் இந்திய இராணுவம்

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் ஏவுகணைகளை வீசும் இந்திய இராணுவம்

இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாறு காட்டுப் பகுதியை முற்றுகையிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பல்குழல் ஏவுகணை, ஆட்லறிகளாலும்....

அறுபது கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கு தவறாமல் தாக்கும் ஏவுகணை மூலமாகவும் இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்நகர்வை மேற்கொண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ் ஏவுகணை ஜந்து கிலோ மீற்றர் பகுதிகளை முற்றாகத் தாக்கி துவம்சம் செய்யக்கூடியது. இவ் ஏவுகணையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி: தமிழ்வின்.காம்

Thursday, March 19, 2009

ஏப்ரல் 14 ஆம் நாளுக்கு முன்பு புலிகளை அழியுங்கள்: இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு சிறீலங்கா அரசுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், இந்தியப் புலனாய்வுத் துறையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என கங்கணம்கட்டி நிற்கின்றனர். இதற்கு உடந்தையாக இருப்பதன்மூலம் அடுத்த தவணையும் ஆட்சியை தக்க வைக்க முடியும் எனவும் சோனியா காந்தி தலைமையிலான கொங்கிரஸ் கட்சி எண்ணுகின்றது.

இதனாலேயே தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனை திசை திரும்பும் வகையில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி மற்றொரு தமிழீழ ஆதரவுப் போராட்ட நாடாகத்தை அரங்கேற்றுவதாகவும், ஈழத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படுகின்ற போதிலும், கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

கடந்த மாதம் 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் நடைபெற்ற உலகின் தொழிற்கட்சி மற்றும் இடதுசாரிகளின் நாள்காம் மண்டல மாநாட்டின்போது ஊடகவியலாளர்கள் மத்தியிலும், பின்னர் நெதர்லாந்தின் முன்னணி வானொலிச் சேவை ஒன்றிற்கும் கருத்துரைத்த இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஈழத்தமிழ் மக்கள் மீது தற்போதைய போர் முற்றாகவும், நேரடியாகவும் இந்திய அரசினால் முன்னெடுக்கப்படுவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 17ஆம் நாள் சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த சிறீலங்காவின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிமால் சிறீபால டி சில்வா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது போரில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், இந்தியாவிற்கு சிங்கள மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா படைகளின் முக்கிய தளபதி ஒருவர், கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னரும், அதற்கு முன்னரும் இந்தியாவே வன்னியில் போரை முன்னெடுப்பதாகவும், தமது படைகள் பெயரளவிலேயே அங்கு பணிகளில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா முப்படைத்தளம் மீது 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9ஆம் நாள் வான் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, அங்கு ராடர் கருவிகளை இயக்கிவந்த இரண்டு இந்தியப் படையினர் காயமடைந்த தகவல் வெளியுலகிற்குக் கசிந்திருந்தது.

இதன் பின்னர், சிறீலங்கா படைகளுக்கான இந்தியப் படைத்துறை உதவிகள் மிக இரகசியமாக வழங்கப்பட்டு வருவதாகக் கருதப்படும் நிலையில், வன்னி களமுனைகளில் இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

இவற்றை மூடி மறைப்பதற்காகவும், வேறு சில படைத்துறைக் காரணங்களுக்காகவுமே, வன்னியில் காயமடைந்த மக்கள் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலும், ஏனைய சிலர் திருகோணமலை நகருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லையிலுள்ள புல்மோட்டைக்கு இந்திய படைத்துறை மருத்துவர்கள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, March 17, 2009

விடுதலைக் கதவை தட்டும் தமிழர்களின் எழுச்சி

தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழினம்
இன்று எழுச்சியோடு ஓரணியில் திரண்டுள்ளது...

தமிழீழத்தில் ஒலித்த விடுதலை குரல்
இன்று உலகம் முழுவதும் ஒலிக்கிறது...

உலகத்தமிழர்களே! ஓய்வின்றி தோய்வின்றி
எழுச்சியோடு போராடுவோம்...
தமிழீழம் மலரும்வரை...

தமிழர்களின் எழுச்சி தொகுப்பு:

பெல்ஜியத்தில் தமிழர்களில் உரிமைப்போர் – 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் பங்கேற்பு
http://www.pathivu.com/news/871/54/30.aspx

ஜெனீவாவில் ‘சாவிலும் வாழ்வோம்’ பேரணி: பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
http://www.pathivu.com/news/873/54//d,view.aspx

தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக மாணவர்கள் ரஷ்ய நாட்டு தூதரிடம் மனு கையளிப்பு
http://www.pathivu.com/news/865/54//d,view.aspx

பல்லாயிரக்கணக்கான தமிழீழ தேசியக் கொடிகளுடன் ரொறன்ரோவில் வரலாறு படைத்த 'உரிமைப்போர்': ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
http://www.puthinam.com/full.php?2bXRnKe0dzg7Q0ecIE9M3b4Z7Ip4d2l4k3cc2FmX2d43cSU3b027Nv3e

கனடா, சுவிஸ், பெல்ஜியம் - இரண்டு இலட்சம் தமிழர்கள் பேரெழுச்சி
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2453&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Tuesday, March 10, 2009

மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்

மகாத்மா காந்தியை நினைக்க வேண்டியவர்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள் காந்தியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால், இதை இந்திய அரசியலின் நகைமுரண் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது!

காந்தியின் உடைமைகள்- ஒரு மூக்குக் கண்ணாடி, இரண்டு பாத்திரங்கள், காலணி -ஆகியவற்றை ரூ.9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார் மதுபான உற்பத்தி உள்பட பல்வேறு பெருந்தொழில்களை நடத்தி வரும் விஜய் மல்லையா. ஏலம் முடிந்த பிறகுதான், இந்தப் பொருள்களை வாங்கியவர் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா என்பதே தெரியவந்தது.

விஜய் மல்லையா இந்திய மக்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்குரியவர். காந்தியின் கொள்கைக்கு மாறுபட்ட தொழில் செய்பவர் என்றாலும், காந்தியின் கொள்கையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்க்கு இல்லாத ஆர்வமும், இந்திய உணர்வும் அவருக்கு இருந்தது என்பதால் அவர் இந்த பாராட்டுக்கு முழுத் தகுதியுடையவர்.

"இந்திய அரசு சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை. இது முழுக்க முழுக்க எனது சொந்த முடிவு' என்று குறிப்பிட்டுள்ள விஜய் மல்லையா, இரண்டாவது முறையாக இந்திய மானம் ஏலம் போவதைத் தடுத்துள்ளார்.

முன்பு, 2005-ம் ஆண்டில் திப்பு சுல்தானின் வீரவாள் உள்பட 30 பொருள்களை சோத்பே ஏல நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்தபோது ரூ.8 கோடிக்கு அந்தப் பொருள்களை வாங்கி, பெங்களூர் கொண்டுவந்து சேர்த்த பெருமை விஜய் மல்லையாவுக்கு உண்டு. திப்பு சுல்தானின் வீரவாளை பெங்களூருக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்காக அவருக்கு பெங்களூரில் மிகப்பெரிய விழாவும் எடுக்கப்பட்டது. அதேபோன்று, காந்தி நினைவுப் பொருள்களை ஏலத்தில் எடுத்து இந்திய மானத்தைக் காப்பாற்றியதற்காக இன்னொரு விழா நடத்தப்படலாம்.

காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்ட இந்தச் சம்பவத்தில் இந்திய அரசும், காந்தியின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சியும் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது. காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுப்போம் என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வீரவசனம் பேசினாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலமாக ஓடிஸýடன் பேச்சு வார்த்தை நடத்தினார்களே தவிர, அதையும் முறைப்படி செய்து, பொருள்களை மீட்பதில் தீவிரம் காட்டவில்லை.

"ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் ஒரு பகுதியை ஏழைகளின் உடல் நலத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓடிஸ் கோரிக்கை வைத்ததாகவும் அதை அரசு நிராகரித்துவிட்டதாகவும், செய்திகள் வந்ததே தவிர, அரசுத் தரப்பில் என்னப் பேசப்பட்டது என்ற விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை.

இந்தப் பொருள்கள் எப்படி ஓடீஸ் கைக்கு சென்றது, அல்லது இந்த உடைமைகள் நவஜீவன் அறக்கட்டளைக்குத்தான் சொந்தம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமான விவகாரங்கள். இது மிகக் குறுகிய காலத்தில் தீராத பிரச்னை. ஏலத்தை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசே அப்பொருள்களை மீட்க ஏலத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஒருவேளை, இந்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏலத்தொகை உயரக் காரணமாகும் என்று கருதியிருந்தால், வேறு ஆட்கள் மூலம் ஏலம் எடுத்து, பின்னர் உலகம் அறிய தெரிவித்திருக்கலாம். ஆனால் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசுதான் இப்படியென்றால், காந்தியின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் எந்த விதமான முயற்சியையும் செய்யவில்லை. ஒருவேளை, நேருவின் நினைவுப் பொருள்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டால் அதற்காக வேண்டுமானால்- அதுவும் சோனியா காந்தியின் கவனத்தைப் பெற்று ஆதாயம் பெறுவதற்காக- ஏலத்தில் இறங்கி, காங்கிரஸ் கோஷ்டியினரே விலையை உயர்த்தி, பொருளை வாங்கி வந்து சேர்த்திருப்பார்களோ என்னமோ! அல்லது காந்தியின் கண்ணாடிக்கு குஜராத்தில் ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்றாலோ அல்லது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்றாலோகூட, ஏலத்தில் இறங்கியிருக்கக்கூடும்.

ரஷிய நாவலாசிரியர் லியோ தால்ஸ்தஸ்தோய் எழுதிய "போரும் வாழ்வும்' நாவலில் இடம்பெறும் முக்கிய நாயகர்களில் ஒருவர் இளவரசர் ரஸ்தோவ். தந்தையின் மரணத்திற்குப் பின் பெரும்கடன் சுமையால் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அவரது சுற்றத்தார் அறிவுரை சொல்கிறார்கள்: "என் தந்தைக்கு மகன் என்ற உறவை நான் முறித்துக்கொள்கிறேன் என்ற ஒரு அறிவிப்பு போதும், தந்தையின் கடன்கள் உங்களைக் கட்டுப்படுத்தாது' என்று. ஆனால், "உயிரோடு இருக்கும்வரை செய்யமாட்டேன்' என்று சொல்லி அந்தக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் இளவரசர் ரஸ்தோவ். மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்.

தேசத்தை மதிக்கத் தெரிந்தவர்கள்தானே தேசத் தந்தையையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்!

நன்றி: தினமணி - 10.03.2009 - ஆசிரியர் தலையங்கம்

Monday, March 2, 2009

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த வள்ளிப்பட்டு சீனிவாசன் மரணம்

இலங்கையில் தமிழ் மக்கள் இரக்க மில்லாமல் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதை கண்டித்து 26ஆம் தேதி நள்ளிரவு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேமுதிக கிளைச்செயலாளர் தீக்குளித்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன். இவருக்கு வயது 36. இவர் சிறுவயது முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து, வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளராக இருந்து வந்தார்.

இவர் 26ஆம் தேதி மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்துநிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரினால் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இரவு வீட்டுக்கு வந்தவர், டி.வி.யை பார்த்துள்ளார். டி.வி.யிலும் ஈழப்பிரச்சனை குறித்த படம் ஓடியது. இதைப்பார்த்த சீனிவாசன், இலங்கையில் இப்படி கொடுமை நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு 10.50 மணிக்கு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேணை தீடிரென எடுத்துக்கொண்டு, தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு போனார். தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீக்குளித்த சீனிவாசன் காவல்துறையினரிடம் கூறுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள். இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.

தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக் கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை கேப்டனிடம் (விஜயகாந்த்) சொல்லுங்கள் என்றார் சீனிவாசன்.

வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சீனிவாசன் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார்.

இவரின் உடல் அடக்கம் அவரின் சொந்த கிராமத்தில் நாளை மதியம் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் அனைத்து தேமுதிக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இறந்து போன சீனுவாசனுக்கு அம்மு என்ற மனைவியும், 9 வயதில் 4வது படிக்கும் சிவா என்ற மகனும் உள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Wednesday, February 25, 2009

மருத்துவமனையில் கருணாநிதி மனவேதனையில் இருக்கிறார்!

எல்லோரும் நம்புங்கள்!

கருணாநிதி மனவேதனையில் இருக்கிறார்



நன்றி தினகரன்

Thursday, February 19, 2009

ப.சிதம்பரத்தின் ‘இராஜபக்சே’ குரல்! - விடுதலை க.இராசேந்திரன்

“இலங்கைத் தமிழர்கள் நம்மவர்கள்; அவர்கள் உணர்வும் நம் உணர்வும் ஒன்று தான்; அவர்கள் உரிமை மறுக்கப்பட்டால் நம் உரிமை மறுக்கப் படுவதுபோல் துடிக்கிறோம்” என்ற பீடிகையுடன் ப.சிதம்பரம் உரையாற்றுகிறார். இப்படி துடித்துப் போய் நிற்கும், ப.சிதம்பரத்தின் முழு உரையிலும் ராஜபக்சே இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை. ப. சிதம்பரத்தின் துடிப்பில் உள்ள நேர்மைக்கு இது மட்டுமே போதும்.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மயிலாப்பூரில் பெரும் பொருட் செலவில் ஒரு பொதுக்கூட்டத்தில் தனது வழக்கறிஞர் தொழில் திறமையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் உறுதியான ஈழத் தமிழர் ஆதரவு சிந்தனை யோட்டத்தை குலைக்கலாமா என்று முயற்சித் திருக்கிறார். நேர்மையற்ற, உண்மையற்ற வாதங்கள் வெற்றி பெற்றுவிட முடியாது. மாறாக இவர்களின் இனத் துரோகம் தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“பிரபாகரன் ஆயுதத்தைக் கீழே போடவேண்டும் எந்த இராணுவமும் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது” - என்கிறார் ப. சிதம்பரம். சிங்கள ராணுவம் ஏதோ, நாட்டு மக்களைப் பாதுகாக்கும் ராணுவத்தைப் போல ப. சிதம்பரம் பேசுகிறார். அற வழியில் ஜனநாயக முறையில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழர்களை ஆயுத முனையில் ஒடுக்கிய காரணத்தால்தான் போராளிகள் இயக்கமும் ராணுவத்தை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தும் நிலை உருவானது என்பது ப.சிதம்பரத்துக்கு தெரியாதா? தெரியும். ஆனாலும் தனது வழக்கை நிலை நாட்ட இப்படி எல்லாம் பொய்யான வாதங்களை முன் வைக்கிறார். சொந்த நாட்டு மக்களின் மீதே விமானக் குண்டுவீச்சு நடத்திடும் சிங்கள ராணுவம் ஏதோ, தமிழ் மக்களுக்கான ராணுவத்தைப் போல ப.சிதம்பரம் பேசும் வாதத்தின் நியாயத்தை மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

“எப்படி இந்தியா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தாதோ, அவ்வாறே இன்னொரு நாட்டைப் பார்த்து போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்து என்று கூறு முடியாது” என்று பச்சையாக பொய் கூறுகிறார், ப. சிதம்பரம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி தனிநாடு கோரும் இயக்கங்களோடு இதே இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதே; அவர்களோடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய் துள்ளதாக நாடாளுமன்றத்திலே அறிவித்தார்களே! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த (2006-2007 ஆம் ஆண்டு) உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை இதை அறிவித்ததே.

ஆயுதங்களைக் கீழே போடாத இந்த போராளி இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் உள்துறை செயலாளர் பத்மநாபய்யா என்ற அதிகாரிக்கு அதிகாரங்களை வழங்கியிருக்கிறார்களே!

1985 ஆம் ஆண்டில் பூடான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததே அப்போதைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தானே! இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் தம்பி, எச். டபிள்யூ ஜெய வர்த்தனே தலைமையில் இலங்கை அரசுவின் தூதுக் குழு போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதே. இதை எல்லாம் மக்கள் மறந்திருப் பார்கள் என்று கருதி, ப.சிதம்பரம் கதைவிடுகிறாரா?

அப்போது பேச்சு வார்த்தையில் பங்கேற்க வந்த எந்த போராளிக்குழுவிடமும், ‘ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு வா’ என்று எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லையே. மாறாக பேராளிகள் குழுக்கள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க நான்கு நிபந்தனைகளை முன் வைத்தார்கள்.

அவை என்ன? 1) ஈழத் தமிழர்கள் - ஒரு தேசிய இனம் 2) ஈழத் தமிழர்கள் தாயகத்தைக் கூறுபோடக் கூடாது 3) ஈழத் தமிழர்கள் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் 4) மலையகத் தோட்டத் தமிழர்களுக்கு முழுமையான குடி உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த நான்கு நிபந்தனைகளையும் இந்தியாவும், இலங்கை அரசும் அங்கீகரித்த பிறகு தானே அன்று போராளிகள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர்?

பேச்சு வார்த்தையில் பங்கேற்ற பல்வேறு போராளி குழுக்களும் முன் வைத்த அடிப் படையான நிபந்தனைக்கு எதிராக அரைகுறை அதிகாரங்களை மட்டும் இலங்கை வழங்க முன் வர, அந்த சொற்ப அதிகாரங்களையும் வழங்கக் கூடாது என்று சிங்கள புத்த பிட்சுகளும் எதிர்கட்சியான சுதந்திரக் கட்சியும் கலவரம் தொடங்கியதால் திம்பு பேச்சு வார்த்தையே முறிந்தது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி, தாம் ஏற்பாடு செய்த பேச்சு வார்த்தையையும் அதற்காக ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனையையும் மீறி செயல்பட்ட சிங்கள அரசை கண்டிக்க முன் வந்திருக்க வேண்டாமா? அதை ராஜீவ் செய்தாரா?

இல்லை மாறாக, போராளிகள் அமைப்புகளை முற்றாக ஓரம் கட்டி விட்டு ஜெயவர்த்தனாவோடு ராஜீவ் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஒப்பந்தத்தையும் இவர்களே தயாரித்துக் கொண்டு, அதை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று தனது அதிகாரவர்க்கத்தைக் கொண்டு மிரட்டினார். யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரனை ராணுவ விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு கொண்டு வந்து அசோகா ஓட்டலில் சிறைப் பிடித்து வைத்து மிரட்டினார்கள்.

“இன்னொரு நாட்டைப் பார்த்து போராளி களுடன் பேச்சு வார்த்தை நடத்து என்று சொல்ல முடியாது” (‘தினத்தந்தி’ பிப்.16) - என்று மயிலாப்பூர் மேடையில் முழங்கும் ப.சிதம்பரத்தைக் கேட்கிறோம்.

திம்பு பேச்சுவார்த்தைக்கு போராளிகளை அழைத்தது உங்கள் ராஜீவ் காந்தி தானே? இன்னொரு நாட்டின் பிரச்சினைக்காக அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதை அந்நாட்டு மக்கள் மீது திணிக்க முயன்றது நீங்கள் தானே! இதற்கெல்லாம் உங்களிடம் பதில் உண்டா?

இறையாண்மையில் தலையிடக் கூடாது என்று கூறும் ப. சிதம்பரம், பாகி°தான் இறையாண்மை யில் இந்திரா தலையிட்டு, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியதற்கு என்ன பதில் கூறுகிறாராம்?

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கப்பல் படையினர் சுட்டு கொல்வதற்குப் பெயர் என்ன? இது இறையாண்மையில் தலையீடு ஆகாதா? தமிழ்நாட்டில் இந்த மீனவர் படுகொலையை எதிர்த்து காங்கிரசார் எந்த ஒரு கண்டனத்தையாவது தெரிவித்தது உண்டா? விடுதலைப்புலிகளை எதிர்ப் பதற்காகவே கூட்டம் போட்டு பேசுகிறவர்கள், சொந்த நாட்டு மீனவனுக்காக பேசினார்களா?

மாறாக, தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப் படுவது எல்லாம் சிங்களர் கடல் பகுதியில் தானே, என்று, எதிர் கேள்வி கேட்டவர் தானே, பிரதமர் மன்மோகன் சிங்!

சரி; அந்த ராஜீவ் ஒப்பந்தத்தின் கதி என்னவாயிற்று? அந்த ஒப்பந்தத்தை முறித்தது யார்? ப.சிதம்பரம் கூறுகிறார்:

“அந்த உடன்பாட்டை பிரபாகரனும் அரை மனதாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்று, ஜெயவர்த்தனே வுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். அன்றே தனது மரண சாசனத்தில் ராஜீவ் கையெழுத்து போட்டார் என்பது அதன் பிறகே எங்களுக்கு தெரிய வந்தது” (தினத்தந்தி, பிப்.16) என்கிறார் ப.சிதம்பரம்.

உடன்பாட்டுக்கு கையெழுத்திடச் சென்ற ராஜீவ் காந்திக்கு இலங்கை அரசு தந்த ராணுவ அணிவகுப்பின்போது சிங்கள சிப்பாய், துப்பாக்கிக் கட்டையால் அடித்து, ராஜீவைக் கொலை செய்ய முயன்றானே; அதை மறந்தும்கூட ப.சிதம்பரம் குறிப்பிடாதது ஏன்? உண்மையில், அப்போதே ஒப்பந்தத்தை மரண சாசனமாக்க முயன்றது - சிங்கள வெறி அல்லவா? அதைக் குறிப்பிடாமல் தனது தலைவன் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியது சிங்களன் என்பதற்காக மூடி மறைப்பது தான் இவர், ராஜீவ் மீது காட்டும் உண்மையான பற்றுப் பாசமா?

உண்மையில், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகளுக்கு நம்பிக்கையே இல்லை. விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க அந்த ஒப் பந்தம் வற்புறுத்தியது. ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப் புலிகள் மறுத்தபோது ராஜீவ் காந்தியே பிரபாகரனை நேரில் அழைத்துப் பேசினார். அது பற்றி யாழ்ப்பாணத்தில் சுதுமலை எனுமிடத்தில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, மக்களிடம் பிரபாகரன் விளக்கி னார். (அந்த சுதுமலைக் கூட்டத்துக்கு இந்திய ராணுவமே தமிழகத்திலிருந்து பத்திரிகை யாளர்களை அழைத்துச் சென்றது. அந்தக் குழுவில் விடுதலை இராசேந்திரன் உடன் சென்றார்)

பிரபாகரன் தனது உரையில் இதுபற்றி குறிப்பிட்டது என்ன?

“எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்.

நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்தி லிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.

இப்படி, இந்தியாவை நம்பி ராஜீவ் காந்தியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தப் பிறகு, இந்தியா எப்படி நடந்து கொண்டது? ஒப்பந்தங்களை முறியடிக்கும் முயற்சிகளில் ஜெயவர்த்தனே இறங்கியபோது அதை ராஜீவ் கண்டித்தாரா? பிரபாகரனிடம் தனிப்பட்ட முறையில் சில வாக்குறுதிகளைத் தந்ததுபோல், ஜெயவர்த்தனா விடமும் பல ரகசிய வாக்குறுதிகளை வழங்கி, இரட்டை வேடம் போட்டார் ராஜீவ்.

ஜெயவர்த்தனாவுக்கு வழங்கிய ரகசிய உறுதி மொழிகளை அமுல்படுத்தவே ராஜீவ் முயன்றார்.

இன்று ப. சிதம்பரம் கூறும் அதே அறிவுரை யைத்தான் அன்று ராஜீவ் காந்தி செயல்படுத்த முயன்றார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் “அமைதிப்படை” தனது ஆதரவுக் குழுவான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியது, ஏதோ சாதாரண மனிதர் அல்ல; இந்திய ‘அமைதிப் படை’க்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த தளபதி ஹர்சிரத்சிங்கே - இந்த உண்மைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். அவர் எழுதுகிறார்:

போர் நிறுத்தத்தை சீர்குலைத்தது இந்தியாவே!

“Vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Later on, all ran into trouble. Because they did not stop arming the E.P.R.L.F. (Ealam peoples Revolutionary Liberation Front). ‘RAW’ was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they could’t stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual stand still. And the whole thing took an ugly turn. They started anti - I.P.K.F. demonstrations.”

“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள்.

காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆக°ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று எழுதுகிறார் ஹர்சிரத் சிங்! மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள் ளோம் என்று கூறினோம்.

அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987.

On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’

நியாயவான்களைப்போல் புனித வேடம் போடும் ப. சிதம்பரம் அவர்களே!

இந்தியாவின் நேர்மையான அதிகாரி அமைதிப்படைத் தளபதியின் இந்த கருத்துக்கு, நீங்கள் தரும் பதில் என்ன? இந்தியாவை நம்பி, இராஜீவ் உறுதியை நம்பி, ஆயுதங்களை ஒப் படைத்து, வெள்ளைக் கொடியின் கீழ் சமாதானம் பேச வந்த ஒரு தலைவனை சுடச் சொன்ன ராஜீவின் யோக்கியதைக்கு என்ன பதில் கூறுவீர்கள்?

விடுதலைப்புலிகளிடம் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, மற்றொரு குழுவிடம் ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசின் துரோகத்திற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? அதே துரோகக் குரலை இப்போது மயிலாப்பூர் பொதுக் கூட்ட மேடையில் நின்று கொண்டு புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்குமாறு கூற, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

புலிகள் ஆயுதம் ஒன்று தானே தமிழர்களின் பாதுகாப்பு! ஆயுதம் ஏந்தி ராணுவத்தின் ஆக்கிர மிப்பையும் இனப் படுகொலையையும் எதிர்த்தினால் தானே சிங்களம் சமாதானம் பேசவே முன் வந்தது! போராளிகள் ஆயுதம் ஏந்தாத காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து இலங்கையில் ஒற்றையாட்சி முறையை சட்ட மாக்கியவர்கள் தானே சிங்களர்கள்?

1957 இல் தந்தை செல்வா பண்டார நாயகாவுடன் செய்த ஒப்பந்தம் என்னவானது?

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தில் தமிழர்கள் தமிழைப் பயன்படுத்தலாம் என்றும், தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் கொண்டு வரப்பட்ட சட்டம், கிடப்பில் போடப் பட்டதே! இப்படி செல்வாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காகவே 1959 இல் அதிபர் பண்டார நாயகாவை சிங்கள புத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றானே! ஆயுதம் ஏற்காத காலத்தில் நடந்த இந்த அடக்குமுறை வரலாறுகள் ப. சிதம்பரங்களுக்குத் தெரியாதவையா?

ஒப்பந்தத்துக்குப் பிறகு இவ்வளவு துரோகங் களையும் செய்துவிட்டு, பிரபாகரனையே தீர்த்துக் கட்ட திட்டமிட்ட அதே காங்கிரஸ்கட்சியின் சிதம்பரம்தான் - இப்போது, “பிரபாகரன் சம்மதத் தோடு போடப்பட்ட ஒப்பந்தம் அது. அது நிறை வேறியிருந்தால் கடந்த 22 ஆண்டுகாலமாக தமிழ் மாநிலம் உருவாகியிருக்கும். தமிழன் ஒருவர் முதல்வராகியிருப்பார்” என்று காதில் பூ சுற்றுகிறார்.

வடக்கு- கிழக்கு மாநிலத்தில் ஒரு மாகாண சபையை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் உருவாக்கி, அதற்கு வரதராஜப் பெருமாள் என்ற தமிழனையும் பொம்மை முதல்வராக இந்திய ராணுவம் உடகார வைத்ததே; அந்த வரதராஜப் பெருமாள் என்ன ஆனார்? இந்திய ராணுவம் இந்தியாவுக்கு திரும்பி வரும் போதே தனது ராணுவ விமானத்தில் அந்த வரதராஜப் பெருமாளையும், அவரது குழுவினரையும் இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது. இன்று வரை அவர் இந்தியாவின் பாதுகாப்போடு பதுங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன காரணம்? ஈழத் தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக ராஜீவ் ஆட்சி, துப்பாக்கி முனையில் எதையும் சாதிக்க முடியும் என்று ஆணவத்தோடு செயல்பட்டது தானே!

பிரபாகரனை அப்போதே தீர்த்துக்கட்ட உத்தரவு போட்ட காங்கிரஸ்தான், ராஜீவ் மரணத்தையே மீண்டும் மீண்டும் பேசுகிறது. இந்திய ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை பிணமாக்கி, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, தமிழ் ஈழத்தையே பிணக்காடாக்கிய ராஜீவ் காந்தியின் செயல்கள் நியாயமானவை தானா?

ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்தி முடித்த பிரிட்டிஷ் அதற்குக் காரணமான ராணுவத் தளபதி டயரை அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனுக்குப் போய் சுட்டுக் கொன்று பழி தீர்த்த உணர்வுள்ள சீக்கியனை உக்கம்சிங்கை தியாகியாக போற்றுகிறவர்கள் - அதே தண்டனை ராஜீவ் காந்திக்கு கிடைக்கும் போது மட்டும் பதறுவது ஏன்? ராஜீவ் காந்தி மரணத்துக்காக ஈழத் தமிழினத்தையே பழி வாங்கத் துடிப்பதுதான் மனிதப் பண்பாடா?

“போரை நிறுத்துங்கள் என்று இலங்கை அரசிடம் கூறுகிறோம்; புலிகளிடம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்கிறோம்” என்று ஏதோ நடுநிலையாளர் போல் நாடகமாடுகிறார் சிதம்பரம். தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே சோனியா காந்தி தான். பிரணாப் முகர்ஜி, கொழும்புக்கு போய் திரும்பிய பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விடுத்த அறிக்கை போர் நிறுத்தத்தைப் பற்றி எதையும் குறிப்பிட வில்லையே.

மாறாக இலங்கையின் ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்று, 23 ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்தது” என்று இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையைக் கொண்டாடி மகிழ்ந்தது இந்திய அரசின் அறிக்கை. ப.சிதம்பரத்தால் இதை மறுக்க முடியுமா?

“தனிமனிதன் கையில் அதிகாரம் கொடுப்பதா தீர்வு?” என்று கேட்கிறார், ப.சிதம்பரம். பிரபாகரன் தனி மனிதன் அல்ல. அவர் தமிழ் ஈழத்தின் பிரதிநிதி. இந்த உண்மை சிறீலங்கா ஆட்சிக்கே தெரியும். நார்வே நாடு சமரச முயற்சியில் ஈடுபட்டபோது, அதன் காரணமாகத்தான் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளோடு போர் நிறுத்த உடன்பாடு செய்து பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தது. போர் நிறுத்த உடன்பாடு உருவாகி, விடுதலைப்புலிகள் மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டதைப் பொறுக்க முடியாத இந்தியப் பார்ப்பன ஆட்சி, தனது நயவஞ்சகத்தால் போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சிகளிலும் இறங்கியது. கருணா குழுவை உருவாக்கியதில் ரணில் ஆட்சிக்கு உதவியதே இந்திய உளவுத் துறை தானே!

போர் நிறுத்த ஒப்பந்தம் உருவான பிறகு, அரசியல் தீர்வுக்காக தன்னாட்சி சபைத் திட்டத்தை சர்வதேச சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசி உருவாக்கி, விடுதலைப்புலிகள் முன் வைத்த போது அதை குலைப்பதற்கு பின்புலமாக செயல்பட்டது இந்திய உளவு நிறுவனம்தானே!

அப்போது அதிபராக இருந்த சந்திரிகா, தீர்வுத் திட்டத்தை எதிர்த்து ரணில் ஆட்சியைக் கவிழ்க்கும் நிலையை உருவாக்கியபோது - தீர்வு திட்டத்தை ஏன் குலைக்க வேண்டும் என்று இந்தியா தட்டிக் கேட்டதா? அடுத்து பதவிக்கு வந்த ராஜபக்சே, சமரச உடன்பாட்டை தூக்கி எறிந்து புலிகளை ராணுவத்தால் சந்திப்பேன் என்று சிங்களர்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து தானே பதவிக்கு வந்தார் என்பதை ப. சிதம்பரம் மறுக்க முடியுமா?

விடுதலை புலிகளை பழிவாங்குவதையும் சமரச முயற்சிகளைக் குலைப்பதையும் சிங்கள அரசுக்கு முண்டு கொடுப்பதையும் வஞ்சகமாக ராணுவ உதவிகளை வழங்குவதையும் ராஜீவ் காலத்திலிருந்து தொடங்கி, செயல்படுத்தி வரும் துரோக சக்திகள், இப்போது நீலிக் கண்ணீர் வடித்து, ‘நியாயவான்’ வேடம் தரிப்பதை தமிழர்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.

‘ராஜபக்சே எதைப் பேசுகிறாரோ, அதையே தான் நாங்களும் பேசுவோம்’ என்று ப.சிதம்பரங்கள் நாட்டுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இந்த தமிழ்நாட்டு ‘ராஜபக்சேக்கள்’ வாக்கு கேட்க வரும் காலம் நெருங்கி வருகிறது.

துப்பாக்கித் தோட்டாக்களைவிட வலிமை யான வாக்கு வேட்டுகளால் இவர்களை தமிழக மண்ணிலிருந்து தூக்கி துரத்தி அடிக்க, தமிழக வாக்காளர்களே தயாராவீர்! தயாராவீர்!

நன்றி: தமிழ்வின்.காம்

Thursday, February 12, 2009

உலக நாடுகளே! நாங்களும் மனிதர்கள்தான்!

உலக நாடுகளே!
நாங்களும் மனிதர்கள்தான்,
உங்களைப்போன்று...

நாங்கள் முற்றிலுமாக
அழிந்து போக நீங்கள்
விரும்புகிறீர்களா?

உங்கள் விருப்பம் அதுவாக இருக்காது
என நாங்கள் நம்புகிறோம்...
ஆம். நிச்சயமாக நம்புகிறோம்...

எங்களுக்காக
நீங்கள் செய்ய வேண்டியது
இதுதான்...,

எங்களையும் மனிதர்களாக
ஏற்றுக்கொள்ளுங்கள்...

நாங்கள் நிம்மதியாக வாழ
நாங்கள் கட்டமைத்த
தமிழீழ அரசை ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழீழத்தின் மீது
சிங்கள இனவெறி அரசு நடத்தும்
ஆக்கிரமிப்பு போரை உடனே தடுத்து நிறுத்துங்கள்...

தமிழீழத்தை
விடுதலை பெற்ற சுதந்திர
நாடாக ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான
தடையை நீக்குங்கள்...

தமிழின அழிப்புப் போரை
தொடர்ந்து நடத்தும்
சிங்கள இனவெறி அரசை
தடுத்து நிறுத்துங்கள்...

தமிழின அழிப்புப் போருக்கு
துணைநிற்கும் இந்திய அரசை
கண்டியுங்கள்...

இப்புவியில்
சுதந்திர காற்றை சுவாசிக்க
எங்களையும் அனுமதியுங்கள்...

Monday, February 9, 2009

தமிழீழ விடுதலை - ஆதரவு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைமையிடம் திட்டம் தயார்!

இலங்கைத் தீவில் உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிங்கள இனவெறி அரசு தமிழின அழிப்பு போரை கடந்த 60 ஆண்டுகளாக நடத்திவருகிறது என்பதும்,

இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் தமிழர்கள் அனைவரும், தங்களின் எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாக உயிர்வாழ தமிழர்களுக்காக “தமிழீழம்” என்ற தனி நாடு அமைய போராடி வருகிறார்கள் என்பதும்,

இலங்கைத் தீவில் தமிழீழ தனிநாடு வேண்டி அரை நூற்றாண்டாக சனநாயக முறையிலான போராட்டங்கள் நடந்தது என்பதும், அத்தகையப் போராட்டங்களுக்கு சிங்கள இனவெறி அரசுகள் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமே பதில் சொன்னது என்பதும்,

சிங்களர்களுக்கு தெரிந்த வழியிலேயே தமிழ் இளைஞர்கள் போராளிக்குழுக்களாக மாறி அவர்களுக்கு பதில் சொன்னதும்,

போராளிக்குழுக்கள் அனைத்தும் இன்று ஒற்றைத் தலைமையில் ஓரணியில் திரண்டு சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக தங்கள் விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பதும்,

சிங்களர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்று ஈழத் தமிழர்களால் கட்டமைக்கப்பட்ட “தமிழீழ அரசின்” ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட “தமிழீழ நாட்டின்” மீது சிங்கள இனவெறி அரசு தற்போது ஆக்கிரமிப்புப் போரை நடத்தி வருகிறது என்பதும்,

...

“தனக்கு அருகில் மொழியாலும், அறிவாலும், வீரத்தாலும், மரபாலும் சிறந்து விளங்கும் “தமிழினம்” தனக்காக சுயாட்சி கொண்ட ஒரு ஆட்சிப்பரப்பை அடைந்து விடக்கூடாது“ என்று இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதும்,

தன்னலம் கருதாது, சுயசிந்தனையுடைய, மனிதநேயம் உள்ள, இனமானம் கொண்ட “மானிடன்“ ஒவ்வொருவனும் அறிந்த உண்மையாகும்.

...


இந்த உண்மை அனைத்தையும் மறைத்துவிட்டு,

“தன் நலனே தமிழினத்தின் நலனாகவும், தனது துன்பமே தமிழினத்தின் துன்பமாகவும், தன் குடும்ப சிக்கலே தமிழினத்தின் சிக்கலாகவும், தன் குடும்பத்தின் மகிழ்ச்சியே தமிழினத்தின் மகிழ்ச்சியாகவும் ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் தமிழர்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ என்று தனது ஊடக பலத்தின் மூலம் தி.மு.க. தலைமை பரப்புரை செய்து செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தன்னெழுச்சியாக கொழுந்து விட்டு எரியும் தமிழின உணர்வை தி.மு.க. தலைமையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “தமிழினத் தலைவர்” என்ற பட்டம் தன்னிடமிருந்து பறிபோய்விடுமோ என்ற அச்சம் தி.மு.க. தலைமைக்கு வந்துவிட்டதே இதற்குக்காரணம்.

இதற்காக மருத்துவமனையில் “ரூம்போட்டு” சிந்தித்தது தி.மு.க. தலைமை. திட்டம் தயார்!

...

திட்டம் – 1: அடக்குமுறை சட்டங்களுக்கு அஞ்சாமல் உண்மையாக தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக செயல்படும் தலைவர்களையும், இயக்கங்களையும், தமிழின உணர்வாளர்களையும் ஓர் அணியாக திரளச் செய்வது,

அந்த அணியைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தன்னால் உருவாக்கப்பட்ட அணியின் மூலம் தொடர்ந்து இழிவுபடுத்துவது,

அவர்களுக்குள் முரண்பாடுகளை செயற்கையாக உருவாக்கி அதை ஊதி பெரிதாக்கி அவர்களுக்குள் பிளவை உண்டாக்குவது,

தேர்தலுக்குள் அந்த இயக்கத்தை நீர்த்துப்போகச் செய்வது,


திட்டம் – 2: தமிழகத் தமிழர்களின் எழுச்சியை இரண்டாவது முறையாக தனதாக்கிக் கொள்வது,

அதற்காக பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மனித சங்கிலிகள் தொலைக்காட்சிகள் நடத்துவது, அந்த நிகழ்வுகளில் உண்மையான தமிழின உணர்வாளர்களை இழிவுபடுத்துவது,

எதிர்வரும் தேர்தலில் வாக்குகளைச் சேகரிக்க தமிழீழ சிக்கலை பயன்படுத்திக்கொள்வது,


திட்டம் – 3: இந்திய பேரரசின் உதவியோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைக்காக களத்தில் போராடும் போராளிகளையும் அழிப்பது,

போராளிகளை அழித்து விட்டு இந்தியாவில் உள்ள தலைவர்களைப் போல் சொகுசு வாழ்க்கையில் நன்கு பழக்கப்பட்ட தலைவர்களை தமிழீழ மக்களின் தலைவர்களாக அடையாளம் காட்டுவது, அந்தத் தலைவர்கள் தி.மு.க. தலைமையை தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருக்க அவர்களை சென்னையில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து “ஏற்பாடுகளையும்” செய்வது,

பிறகு ஒரு வேளை சோற்றுக்காக சிங்களனிடம் ஈழத்தமிழர்களை கையேந்த வைத்து விட்டு, குப்பை அள்ளுவதற்கும்; சாலைகள் போட்டு தரகுக்சகூலி வாங்குவதற்கும் அதிகாரம் கொண்ட ஒரு அரசு அமைத்து, தமிழீழ மண்ணில் மலிவு விலை மதுக்கடை, குடும்ப குழுமத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, குடும்ப குழுமம் தயாரிக்கும் திரைப்படங்கள் வெளியிடுவது, போன்ற விடுதலையை தமிழீழ மக்களுக்கு பெற்றுத் தருவது,

இவையை தி.மு.க. தலைமையின் செயல்திட்டம்...

வாழ்க! “தமிழினத் தலைவர்“ மு.க.

Tuesday, February 3, 2009

தமிழீழ விடுதலை-ஆதரவு போராட்டத்தை இழிவுபடுத்த தி.மு.க. தயாராகிவிட்டது!

இலங்கைத் தீவில் தமிழர்களே மண்ணின் மைந்தர்கள். அந்தத் தீவில் கால்வைத்த நாள் முதல் இன்றுவரை வந்தேறி இனமான சிங்கள இனவெறி அரசுகள் அனைத்தும் தமிழனத்தை பூண்டோடு அழித்தொழிக்கும் பணியை செய்து வருகிறது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழகத் தமிழர்கள் அவர்களை பாதுகாத்து எதிரிகளை விரட்டியடிக்க துணைநின்றுள்ளனர். இந்நிகழ்வும் வரலாற்று காலந்தொட்டு இன்றுவரை நடந்துவருகிறது.

வரலாற்று காலந்துதொட்டு இன்றுவரை தமிழர்களுக்குள் பகையை தூண்டிவிட்டு, அவர்களுக்குள் சண்டையிட்டு, போரிட்டு தமிழன் குருதி வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கைப் பார்த்து, கைகொட்டி சிரித்து, தமிழனின் குருதியை குடிக்கும் குள்ளநரிக் கூட்டங்களுக்கும், தமிழினத் துரோகிகளுக்கும் தமிழின வரலாற்றில் பஞ்சமில்லை...

...

இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மிகப்பெரிய அவலமாக தமிழீழ மண் சிவந்துகொண்டிருக்கிறது. தமிழினம் கொத்துக் கொத்தாக பூவோடும் பிஞ்சோடும் சிங்கள இனவெறி அரசால் கொன்று அழிக்கப்படுகிறது.

சிங்கள அரசின் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்துநிறுத்தக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது. அது கடந்த ஆறு மாதமாக தீவிர போராட்டமாக மாறி இன்று வீரமரணம் வரை சென்று கொண்டிருக்கிறது.

தமிழீழ ஆதரவு போராட்டம் இந்த அளவிற்கு தீவிரமடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? யார்? என்பது தமிழனுக்குப் பிறந்த ஒவ்வொருவனுக்கும், தமிழின உணர்வாளனுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.

...

இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து முடிவெடுக்க தமிழ் நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க. இன்று செயற்குழுவை கூட்டி தமிழினத்தின் விடியலுக்காக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

தி.மு.க.-வின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவரான முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்னையானாலும், தமிழ் தொடர்பான எந்த பிரச்னையானாலும் அதற்கு குரல் கொடுத்து போராட திமுக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட திமுக, இன்று ஒரு முக்கியமான காலக் கட்டத்தில் உள்ளது.

இப்போது தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக சில புதிய குரல்கள் ஒலிக்கிறது.

தமிழர் விடுதலை இயக்கங்கள் ஒரே இயக்கமாக விளங்கவில்லை.
அவர்களிடம் ஒற்றுமை இல்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.

இந்த கொடுமைகளை எல்லாம் மறந்து தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்கிறோம்.

திமுக இதையே வலியுறுத்தி வருகிறது.

நாங்கள் குரல் கொடுப்பது இலங்கை தமிழர்களுக்காக மட்டுமே.

தமிழகத்தில் உள்ள தலைவர்கள் காப்பாற்றுவார்கள் என்று இலங்கை தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள். எனவே நாமும் ஆயுதம், ராணுவம், போர் என்பதை ஆதரிக்காமல் தமிழர்களின் சக்தி ஜனநாயகம் மூலம் கூட்டப்பட வேண்டும் என்று இங்கு தீர்மானம் கொண்டு வரவுள்ளோம்.

தமிழ்நாட்டில் சிலர் திடீரென இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று பாவனை காட்டுகிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் 'எல்லாம் முதல்வர் தான் சொல்ல வேண்டும்' என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறார்.

ஈழம் பற்றி பேச, வெளி நாட்டு தமிழர்கள் பற்றி பேச, திராவிட இயக்கங்கள் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது.

தமிழர்களுக்காக போராடுவது போல சிலர் நாடகம் ஆடுகிறார்கள்.

ஆட்சியை விட்டு வெளியே போகிறோம் என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது.

இவ்வாண்டுக்குள் திமுக முடிந்து, எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார்.

இலங்கை பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது.

நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள்.

திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மேலும்,

இலங்கை பிரச்னைக்காக பட்டி தொட்டியெங்கும் கூட்டம், பேரணி, மாநாடு நடத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளது.

...

தி.மு.க. பட்டி தொட்டியெங்கும் நடத்தப் போகும் பேரணி, கூட்டம், மாநாடு போன்றவை எதை நொக்கி இருக்க வேண்டும். எப்படி பேசவேண்டும் என்று மு.கருணாநிதி தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்...

தி.மு.க.-வின் மேடைகளில் தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெறும் தமிழீழ ஆதரவு போரட்டமும் கொச்சைப்படுத்தப்படும். அப்போரட்டத்தில் ஈடுபடுபவர்களும், அதன் தலைவர்களும் கொச்சைப்படுத்தப்படுவார்கள்...

மொத்தத்தில் தமிழீழ விடுதலை-ஆதரவு போராட்டத்தை இழிவுபடுத்த தி.மு.க. தயாராகிவிட்டது!

...

தமிழர்களே!
நாம் என்ன செய்யப் போகிறோம்???????????????????????

Thursday, January 29, 2009

ஈகியர் முத்துக்குமாரின் கடிதம்!

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம்.

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.

என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?

பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.

எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?

எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.

அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.

இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...

இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.

1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

'அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை' என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.

இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும்.

கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

Monday, January 26, 2009

கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும்காணாமல் இருந்தார்

விதியின் சதியா? மதியின் பிழையா?

இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்!

முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் இந்தப் போர் தொடரும். தமிழீழம் கேட்டு எப்போதும்போல அவர்கள் தாக்குதலை நடத்துவார்கள். ஆனால், அது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்குமே தவிர, இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மீண்டும் மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

கடந்த கால் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்கள் போராடிப் போராடி ஓய்ந்து விட்டார்கள். மீண்டும் இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளவும், விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆள் மற்றும் ஆயுதம் அளிக்கவும் அவர்களால் முடியுமா என்பதும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இத்தனை காலமாக விடுதலைப் புலிகளின் பகுதிகளை நெருங்க முடியாத இலங்கை ராணுவம், மிகக் குறுகிய காலத்தில் அதைச் செய்து முடித்ததற்கு முக்கியமான நான்கு காரணங்கள் உண்டு.
இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் குடியேறிய தமிழர்களுக்கும் இடையே இருந்த விரிசலை மிகவும் பெரிதாக்கி, தனக்கு ஆதரவைத் தேடிக்கொண்டது இலங்கை அரசு.
இரண்டாவதாக, கிழக்கு மாகாணத்தில் அரசியல் தீர்வுக்கு கர்னல் கருணாவை இணங்கும்படி செய்ததும் இலங்கை அரசுக்குப் பலமாக அமைந்துவிட்டது.
உலக அளவிலான தீவிரவாதத்துக்கு எதிரான ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது என்பது மூன்றாவது காரணம்.
நான்காவது முக்கியமான காரணம் இந்திய அரசு, இலங்கை அரசுக்குத் தந்த மறைமுக ஒத்துழைப்பு.

இருபத்தைந்து ஆண்டுகளாக நுழைய முடியாத வன்னி காடுகளுக்குள் இலங்கை ராணுவத்தால் நுழைய முடிகிறது என்றால் அது, பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கர்னல் கருணா தந்த தகவல்களின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

"வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒரு கருணா' என்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது.

நாளைய தமிழர் வரலாற்றில், இலங்கைப் பிரச்னையில் ஏற்பட்ட பின்னடைவு பற்றிக் குறிப்பிடும் போது, நிச்சயமாக இந்த வரிகள் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை: "கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும்காணாமல் இருந்தார்'.

ஏனென்றால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தும்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை நிறுத்த முடியாமலும், இந்திய ராணுவத்தின் உதவிகளைத் தடைசெய்ய முடியாமல் விஷயத்தை தள்ளிப்போட்டதற்காகவும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவுக்குரல் கொடுத்தபோதும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் "உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்' என்று திமுகவினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியையும் வரலாறு குற்றம் சுமத்தும்.

மத்திய அரசின் அரசியல் ஆய்வுக் குழுவில் ப. சிதம்பரம், டி.ஆர்.பாலு என்ற இரு தமிழர்கள் இடம்பெற்று இருப்பதால், மத்திய அரசு ஏன் தாமதித்தது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்பதாக முதல்வர் கருணாநிதி சொல்லவே முடியாது.

முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் பிரதமரும் நானும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம் என்று மக்களின் பரிதாபத்தைப் பெறவும் இயலாது.

தமிழ்ச் சாதி பற்றி மகாகவி பாரதியார் எழுப்பிய அதே கேள்விதான் இன்று நமக்கும் எழுகிறது:

""...........................கலியின் வலியை
வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்.
நாசம் கூறும் "நாட்டு வைத்தியர்'
இவராம். இங்கு இவ் இருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழ்ச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா?''


நன்றி: தினமணி

Sunday, January 18, 2009

தமிழகத்தின் எழுச்சியால் “பம்முகிறார்” பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைத் தீவில் உள்ள சிங்கள இனவெறி அரசுகள் அனைத்தும் அந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களை பூண்டோடு அழித்தொழித்துவிட்டு அத்தீவை சிங்களர்களின் தீவாக மாற்றும் நடவடிக்கையை காலங்காலமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தன் இனத்திற்காக தமிழர்களை அழித்தொழிக்கும் பணியை சிங்கள இனத்தின் தற்போதையத் தலைவன் இராசபக்சே தன் பரிவாரங்களுடன் தீவிரமாக செய்து வருகிறான்.

இராசபக்சே செய்துவரும் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்தியாவில் வாழும் தமிழினப் பகைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்திய அரசின் பெயரால் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது ஊரரிந்த இரகசியம்...

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வலியுருத்தி வருகின்றனர்.


ஆனால் தமிழர்களின் குரலை செவி மடுக்காமலும், கோரிக்கைகளையும் வேண்டுகோளையும் குப்பைக்கூடையில் வீசியும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசின் தமிழின விரோத போக்கிற்கு எதிராக தமிழகம் தற்போது புதிய பாய்ச்சலோடு வெகுண்டெழுந்துள்ளது. இந்திய அரசுக்கு எதிராகவும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. இதைக்கண்டு காங்கிரஸ்காரர்கள் தற்போது அச்சமடைய தொடங்கியுள்ளார்கள் என்பது அவர்களின் பேச்சின் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஏ.கே.அந்தோணி அவரது சொந்த மாநிலமான கேரளாவில் சுற்றுப்பயணம் செய்தபோது வருகிறார். அப்போது ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

"சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. இலங்கையில் சில மனிதநேய பணிகளில் மட்டுமே இந்தியா ஈடுபட்டு வருகின்றது. ஒரு உறுதியான அரசியல் தீர்வு மூலமாகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண முடியும்'' என்று பம்முகிறார்...


சிங்கள இராணுவத்திற்கு ரேடார்கள் வழங்குவதும், வங்கக்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் போர்க்கப்பலை நிறுத்தி வைப்பதும், அப்பாவித் தமிழர்களை நாள்தோறும் கொன்றழிக்கும் சரத் பொன்சேகாவை பாராட்டுவதும், ஆயுதங்கள் வாங்க நிதியுதவி செய்வதும், சீருடை அணியாத தொழிற்நுட்ப வல்லுனர்களையும் போர் விமான பைலட்டுகளையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பது மனித நேயப் பணிகளாம்...

தமிழினத்தின் எதிரிகளே!


தமிழின எதிரிகளும் துரோகிகளும் ஒன்று சேர்ந்து குட்டக்குட்ட தமிழன் குணிந்து கொண்டே இருப்பன் என்று மட்டும் கனவு காணாதீர்கள்... நீங்கள் ஒரு இனமாக தோன்றுவதற்கு முன்னரே தன்னுடைய வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய இனம் தமிழினம்.


நிகழ்காலத்திலும் தமிழனத்தின் எதிரிகள் யார் என்றும் தமிழனின் இலக்கு எதுவென்றும் “எங்கள் கிழவன்” எங்களுக்கு பாடம் நடத்திவிட்டு சென்றுள்ளான்.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.

மேலும் இலங்கை தமிழருக்கு அதிக சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஒருபோதும் அவர் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. சிறிலங்கா போர் தளபதி சரத் பொன்சேகா சிறப்பாக செயற்படுகிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

முல்லைத்தீவில் முற்றுகையிடப்பட்டுள்ள சில லட்சம் தமிழர்களை கடல் வழியாகவும், வான்வழியாகவும், தரை வழியாகவும் சிறிலங்கா இராணுவம் தாக்கி வருகிறது.

இது தொடர்பாக நம்முடைய செயலாளர் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏன் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்திடம் அரசிடம் போர் நிறுத்தத்தை தொடர்பாக பேச வேண்டாம் என்று சொல்லி தானே அவரே அனுப்பி வைத்திருக்கிறது. அப்படியென்றால் இந்திய அரசாங்கம், இந்திய தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவமானப்படுத்தி விட்டது என்று தானே அர்த்தம்.

மத்திய அரசின் இந்த கடும் பாதக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள். இது தொடர்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே சமயத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து நாங்கள் பேச இருக்கிறோம்.

முதலமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழருக்காக தியாகம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் என்ன தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

50 ஆண்டுகாலம் முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம். இதுவரை தோற்று வந்ததாக தானே அர்த்தம்.

சரி அதனை விட்டு விடுவோம். இதற்கு முன்பு தி.மு.க. மத்திய அதிகாரத்தில் இல்லை. இப்போது காங்கிரசுக்கு சரி பாதியாக இருக்கிறார்களே? இப்போது ஏன் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் அமைச்சில் தி.மு.க. உள்ளது. அப்படியிருந்தும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தமிழனை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை ஏன் இவர்கள் வற்புறுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் எண்ணம் சிங்கள இராணுவத்திற்கு இல்லை என்றும், விடுதலைப் புலிகள் தான் தமிழ்மக்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றும் ஜெயலலிதா கூறியதாக வரும் தகவல்கள் தொடர்பாக எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறு. ஏனெனில், சிங்கள இராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவிப்பது எல்லோருக்கும் தெரியுமே.

இது தொடர்பாக உண்மை நிலைய அறிய வேண்டுமானால் நடுநிலையாளர்களான 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி, அங்குள்ள நிலைமைகளை கண்டு வர சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடவும் நாங்கள் தயாராகவும் இருக்கிறோம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Sunday, January 11, 2009

தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்!

நமது இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது. இலங்கையில் சிங்கள இனவெறி அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புப் போரை நிறுத்தவேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ தமிழினத்திற்காக “தமிழீழ அரசு” உருவாக குரல் கொடுக்கவேண்டும் -என தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக குரலெழுப்பி போராடி வருகிறார்கள். ஆனால் உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க இந்திய நடுவண் அரசு மறுத்து வருகிறது.

ஈழத்தமிழர்களுக்காக கடந்த ஆறு மாதமாக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் இன்னலை தீர்க்க மனிதநேயத்தோடு இப்பிரச்சனையில் இன்றுவரை இந்திய அரசு ஈடுபடவில்லை என்பதே உண்மை. காரணம் இந்திய அரசு கடைபிடித்து வரும் தவறான வெளியிறவுக் கொள்கையே!

இந்திய அரசு மேற்கொள்ளும் இத்தகைய தவறான போக்கை மாற்ற வேண்டுமென்றால் தமிழகத்தில் போராட்டம் நடத்தி இனி எந்தவித பயனும் இல்லை. “தமிழர்களின் போராட்டக்களம் இனி புது தில்லியாக இருக்கவேண்டும்.”

தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டால் நடுவண் அரசு தன்நிலையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும். தமிழகத்தில் உள்ள இனஉணர்வாளர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் “தமிழீழம்” என்ற இலக்கிற்காக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்.

தமிழினத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்களை தலைவராகக் கருதாமல் ஒரு வீரமிக்க தொண்டராக செயலாற்ற வேண்டும். இதுபோன்ற பணியை மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன், கி.வீரமணி ஆகியோர் ஈடுபட்டுவருவது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

தமிழர்களும் தமிழின உணர்வாளர்களும் இனி தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் ஈடுபடத்தேவையில்லை. நாம் அனைவரும் புதுதில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அது தொடர் போராட்டமாகவும் இருக்கவேண்டும்.

இன உணர்வோடும் எழுச்சியோடும் தமிழின உணர்வாளர்கள் புதுதில்லியை பத்துநாள் முற்றுகையிட்டால் தமிழீழம் தானக பிறக்கும். தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்.