Tuesday, March 24, 2009

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்: அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.

இந்திய இராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள இராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள இராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தாவில் என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து ஆனையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள இராணுவம் அஞ்சுகிறது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் இரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது.

இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.

சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த இராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய இராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதைய போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.

இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.

''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது.

இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய இராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.

இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள இராணுவம்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.

தமிழ் ஆர்வலர்களோ, ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய இராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சதீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப்பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

- இரா. சரவணன்


அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா!

புல்மோட்டையிலும், மணலாற்றிலும் இந்திய ,ராணுவத்தினர் நேரடியாக போரில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வல்லரசான இந்தியா ஏற்கனவே 1989 களில் ஒரு சிறிய இயக்கமான விடுதலைப் புலிகளிடம் தோற்று ஓடியது. தன் சுய லாபத்துக்காக ஈழப் பிரச்சினையில் விளையாடிய இந்தியா கையை சுட்டுக் கொண்டது.

இப்போது திரும்பவும் தனது கொலைக்கரங்களை ஈழத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. சீனா பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ சென்றால் அவர்கள் தர்ம அடி கொடுப்பார்கள். அதனால்தான் என்னவோ, இளிச்சவாயர்கள் என்று எண்ணி தமிழர்களை சீண்டிக் கொண்டிருக்கிறது.

அதி நவீன ரேடார்கள், ஆயுதந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், செயற்கைக் கோள்கள் மூலம் உளவு சொல்லி இந்தியா நேரடியாக போரில் இறங்கினாலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை. போர் இழுத்துக் கொண்டே செல்கிறது. 70,000 இராணுவத்தினர், கணக்கு வழக்கில்லாமல் எண்ணற்ற ஆயுதங்கள், 7 நாடுகளின் உதவிகள், இத்தனையும் கொண்டு இலங்கை அரசு போரை நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. புலிகளின் சூழ்நிலையில் வேறு எந்த பெரிய இராணுவமாக இருந்தாலும் இந்நேரம் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்.

புலிகளும், தமிழர்களும் ஆக்கிரமிப்பு போரை நடத்தவில்லை. அவர்கள் தங்கள் பூர்வீக பூமியை அடிமைத்தளையில் இருந்து மீட்பதற்காக விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தர்மமும் நீதியும் அவர்களின் பக்கம் உள்ளது. தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம் என்று துரியோதனன் போல் கொக்கரித்த மகிந்தவுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறது.

எவராலும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட பிதாமகன் பீஷ்மர் மகாபாரதப் போரில் தோற்றுப் போனார். அக்கிரமத்திற்கும், அநீதிக்கும் துணை போனதால்தான் அவர் தோற்க நேர்ந்தது.

இந்தியா அல்ல, எந்த வல்லரசு உதவி செய்தாலும் எத்துணை வலிமையாக இருந்தாலும் அநீதியின் பக்கம் இருந்தால் வெற்றி கிட்டாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். எத்தனை அடக்குமுறைகளை ஏவினாலும், கொன்று குவித்தாலும், அக்கிரமம் செய்தாலும் சாம்பலிலிருந்தும் தமிழர்கள் மீண்டெழுவார்கள். விடுதலையை அடையும் வரை இந்த போராட்டத்தை தொடருவார்கள்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மறுபடியும் வெல்லும்'.
தமிழகத்திலிருந்து அதிபதி.

நன்றி தமிழ்வின்.காம்

Monday, March 23, 2009

பகத்சிங் - நினைவுநாள்

வீரவணக்கம்23.03.1931
தூக்கிலடப்பட்ட நாள்

Friday, March 20, 2009

இரணிலுக்கு பணம் தருகிறது இந்தியா

ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ ''

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வருகின்றது.இதேபோன்று ஜேவிபி கட்சியிலும் முக்கிய தலைவர்களுக்கும் பெருமளவான நிதியினை '' ரோ '' அமைப்பு வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு சோரம் போயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்ளாது, மக்களுக்கு எதுவித அவலங்களும் ஏற்படவில்லை என நியாயப்படுத்திய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாராளுமன்ற அமர்வுகளின் போது சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிடிக்கு உரையாடுவதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆழ் மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.

நன்றி: பதிவு.காம்

புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் ஏவுகணைகளை வீசும் இந்திய இராணுவம்

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் ஏவுகணைகளை வீசும் இந்திய இராணுவம்

இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாறு காட்டுப் பகுதியை முற்றுகையிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பல்குழல் ஏவுகணை, ஆட்லறிகளாலும்....

அறுபது கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கு தவறாமல் தாக்கும் ஏவுகணை மூலமாகவும் இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்நகர்வை மேற்கொண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ் ஏவுகணை ஜந்து கிலோ மீற்றர் பகுதிகளை முற்றாகத் தாக்கி துவம்சம் செய்யக்கூடியது. இவ் ஏவுகணையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி: தமிழ்வின்.காம்

Thursday, March 19, 2009

ஏப்ரல் 14 ஆம் நாளுக்கு முன்பு புலிகளை அழியுங்கள்: இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு சிறீலங்கா அரசுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், இந்தியப் புலனாய்வுத் துறையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என கங்கணம்கட்டி நிற்கின்றனர். இதற்கு உடந்தையாக இருப்பதன்மூலம் அடுத்த தவணையும் ஆட்சியை தக்க வைக்க முடியும் எனவும் சோனியா காந்தி தலைமையிலான கொங்கிரஸ் கட்சி எண்ணுகின்றது.

இதனாலேயே தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனை திசை திரும்பும் வகையில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி மற்றொரு தமிழீழ ஆதரவுப் போராட்ட நாடாகத்தை அரங்கேற்றுவதாகவும், ஈழத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படுகின்ற போதிலும், கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

கடந்த மாதம் 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் நடைபெற்ற உலகின் தொழிற்கட்சி மற்றும் இடதுசாரிகளின் நாள்காம் மண்டல மாநாட்டின்போது ஊடகவியலாளர்கள் மத்தியிலும், பின்னர் நெதர்லாந்தின் முன்னணி வானொலிச் சேவை ஒன்றிற்கும் கருத்துரைத்த இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஈழத்தமிழ் மக்கள் மீது தற்போதைய போர் முற்றாகவும், நேரடியாகவும் இந்திய அரசினால் முன்னெடுக்கப்படுவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 17ஆம் நாள் சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த சிறீலங்காவின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிமால் சிறீபால டி சில்வா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது போரில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், இந்தியாவிற்கு சிங்கள மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா படைகளின் முக்கிய தளபதி ஒருவர், கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னரும், அதற்கு முன்னரும் இந்தியாவே வன்னியில் போரை முன்னெடுப்பதாகவும், தமது படைகள் பெயரளவிலேயே அங்கு பணிகளில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா முப்படைத்தளம் மீது 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9ஆம் நாள் வான் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, அங்கு ராடர் கருவிகளை இயக்கிவந்த இரண்டு இந்தியப் படையினர் காயமடைந்த தகவல் வெளியுலகிற்குக் கசிந்திருந்தது.

இதன் பின்னர், சிறீலங்கா படைகளுக்கான இந்தியப் படைத்துறை உதவிகள் மிக இரகசியமாக வழங்கப்பட்டு வருவதாகக் கருதப்படும் நிலையில், வன்னி களமுனைகளில் இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

இவற்றை மூடி மறைப்பதற்காகவும், வேறு சில படைத்துறைக் காரணங்களுக்காகவுமே, வன்னியில் காயமடைந்த மக்கள் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலும், ஏனைய சிலர் திருகோணமலை நகருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லையிலுள்ள புல்மோட்டைக்கு இந்திய படைத்துறை மருத்துவர்கள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, March 17, 2009

விடுதலைக் கதவை தட்டும் தமிழர்களின் எழுச்சி

தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழினம்
இன்று எழுச்சியோடு ஓரணியில் திரண்டுள்ளது...

தமிழீழத்தில் ஒலித்த விடுதலை குரல்
இன்று உலகம் முழுவதும் ஒலிக்கிறது...

உலகத்தமிழர்களே! ஓய்வின்றி தோய்வின்றி
எழுச்சியோடு போராடுவோம்...
தமிழீழம் மலரும்வரை...

தமிழர்களின் எழுச்சி தொகுப்பு:

பெல்ஜியத்தில் தமிழர்களில் உரிமைப்போர் – 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் பங்கேற்பு
http://www.pathivu.com/news/871/54/30.aspx

ஜெனீவாவில் ‘சாவிலும் வாழ்வோம்’ பேரணி: பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
http://www.pathivu.com/news/873/54//d,view.aspx

தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக மாணவர்கள் ரஷ்ய நாட்டு தூதரிடம் மனு கையளிப்பு
http://www.pathivu.com/news/865/54//d,view.aspx

பல்லாயிரக்கணக்கான தமிழீழ தேசியக் கொடிகளுடன் ரொறன்ரோவில் வரலாறு படைத்த 'உரிமைப்போர்': ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
http://www.puthinam.com/full.php?2bXRnKe0dzg7Q0ecIE9M3b4Z7Ip4d2l4k3cc2FmX2d43cSU3b027Nv3e

கனடா, சுவிஸ், பெல்ஜியம் - இரண்டு இலட்சம் தமிழர்கள் பேரெழுச்சி
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2453&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Tuesday, March 10, 2009

மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்

மகாத்மா காந்தியை நினைக்க வேண்டியவர்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள் காந்தியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால், இதை இந்திய அரசியலின் நகைமுரண் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது!

காந்தியின் உடைமைகள்- ஒரு மூக்குக் கண்ணாடி, இரண்டு பாத்திரங்கள், காலணி -ஆகியவற்றை ரூ.9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார் மதுபான உற்பத்தி உள்பட பல்வேறு பெருந்தொழில்களை நடத்தி வரும் விஜய் மல்லையா. ஏலம் முடிந்த பிறகுதான், இந்தப் பொருள்களை வாங்கியவர் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா என்பதே தெரியவந்தது.

விஜய் மல்லையா இந்திய மக்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்குரியவர். காந்தியின் கொள்கைக்கு மாறுபட்ட தொழில் செய்பவர் என்றாலும், காந்தியின் கொள்கையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்க்கு இல்லாத ஆர்வமும், இந்திய உணர்வும் அவருக்கு இருந்தது என்பதால் அவர் இந்த பாராட்டுக்கு முழுத் தகுதியுடையவர்.

"இந்திய அரசு சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை. இது முழுக்க முழுக்க எனது சொந்த முடிவு' என்று குறிப்பிட்டுள்ள விஜய் மல்லையா, இரண்டாவது முறையாக இந்திய மானம் ஏலம் போவதைத் தடுத்துள்ளார்.

முன்பு, 2005-ம் ஆண்டில் திப்பு சுல்தானின் வீரவாள் உள்பட 30 பொருள்களை சோத்பே ஏல நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்தபோது ரூ.8 கோடிக்கு அந்தப் பொருள்களை வாங்கி, பெங்களூர் கொண்டுவந்து சேர்த்த பெருமை விஜய் மல்லையாவுக்கு உண்டு. திப்பு சுல்தானின் வீரவாளை பெங்களூருக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்காக அவருக்கு பெங்களூரில் மிகப்பெரிய விழாவும் எடுக்கப்பட்டது. அதேபோன்று, காந்தி நினைவுப் பொருள்களை ஏலத்தில் எடுத்து இந்திய மானத்தைக் காப்பாற்றியதற்காக இன்னொரு விழா நடத்தப்படலாம்.

காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்ட இந்தச் சம்பவத்தில் இந்திய அரசும், காந்தியின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சியும் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது. காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுப்போம் என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வீரவசனம் பேசினாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலமாக ஓடிஸýடன் பேச்சு வார்த்தை நடத்தினார்களே தவிர, அதையும் முறைப்படி செய்து, பொருள்களை மீட்பதில் தீவிரம் காட்டவில்லை.

"ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் ஒரு பகுதியை ஏழைகளின் உடல் நலத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓடிஸ் கோரிக்கை வைத்ததாகவும் அதை அரசு நிராகரித்துவிட்டதாகவும், செய்திகள் வந்ததே தவிர, அரசுத் தரப்பில் என்னப் பேசப்பட்டது என்ற விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை.

இந்தப் பொருள்கள் எப்படி ஓடீஸ் கைக்கு சென்றது, அல்லது இந்த உடைமைகள் நவஜீவன் அறக்கட்டளைக்குத்தான் சொந்தம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமான விவகாரங்கள். இது மிகக் குறுகிய காலத்தில் தீராத பிரச்னை. ஏலத்தை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசே அப்பொருள்களை மீட்க ஏலத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஒருவேளை, இந்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏலத்தொகை உயரக் காரணமாகும் என்று கருதியிருந்தால், வேறு ஆட்கள் மூலம் ஏலம் எடுத்து, பின்னர் உலகம் அறிய தெரிவித்திருக்கலாம். ஆனால் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசுதான் இப்படியென்றால், காந்தியின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் எந்த விதமான முயற்சியையும் செய்யவில்லை. ஒருவேளை, நேருவின் நினைவுப் பொருள்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டால் அதற்காக வேண்டுமானால்- அதுவும் சோனியா காந்தியின் கவனத்தைப் பெற்று ஆதாயம் பெறுவதற்காக- ஏலத்தில் இறங்கி, காங்கிரஸ் கோஷ்டியினரே விலையை உயர்த்தி, பொருளை வாங்கி வந்து சேர்த்திருப்பார்களோ என்னமோ! அல்லது காந்தியின் கண்ணாடிக்கு குஜராத்தில் ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்றாலோ அல்லது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்றாலோகூட, ஏலத்தில் இறங்கியிருக்கக்கூடும்.

ரஷிய நாவலாசிரியர் லியோ தால்ஸ்தஸ்தோய் எழுதிய "போரும் வாழ்வும்' நாவலில் இடம்பெறும் முக்கிய நாயகர்களில் ஒருவர் இளவரசர் ரஸ்தோவ். தந்தையின் மரணத்திற்குப் பின் பெரும்கடன் சுமையால் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அவரது சுற்றத்தார் அறிவுரை சொல்கிறார்கள்: "என் தந்தைக்கு மகன் என்ற உறவை நான் முறித்துக்கொள்கிறேன் என்ற ஒரு அறிவிப்பு போதும், தந்தையின் கடன்கள் உங்களைக் கட்டுப்படுத்தாது' என்று. ஆனால், "உயிரோடு இருக்கும்வரை செய்யமாட்டேன்' என்று சொல்லி அந்தக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் இளவரசர் ரஸ்தோவ். மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்.

தேசத்தை மதிக்கத் தெரிந்தவர்கள்தானே தேசத் தந்தையையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்!

நன்றி: தினமணி - 10.03.2009 - ஆசிரியர் தலையங்கம்

Monday, March 2, 2009

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த வள்ளிப்பட்டு சீனிவாசன் மரணம்

இலங்கையில் தமிழ் மக்கள் இரக்க மில்லாமல் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதை கண்டித்து 26ஆம் தேதி நள்ளிரவு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேமுதிக கிளைச்செயலாளர் தீக்குளித்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன். இவருக்கு வயது 36. இவர் சிறுவயது முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து, வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளராக இருந்து வந்தார்.

இவர் 26ஆம் தேதி மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்துநிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரினால் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இரவு வீட்டுக்கு வந்தவர், டி.வி.யை பார்த்துள்ளார். டி.வி.யிலும் ஈழப்பிரச்சனை குறித்த படம் ஓடியது. இதைப்பார்த்த சீனிவாசன், இலங்கையில் இப்படி கொடுமை நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு 10.50 மணிக்கு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேணை தீடிரென எடுத்துக்கொண்டு, தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு போனார். தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீக்குளித்த சீனிவாசன் காவல்துறையினரிடம் கூறுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள். இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.

தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக் கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை கேப்டனிடம் (விஜயகாந்த்) சொல்லுங்கள் என்றார் சீனிவாசன்.

வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சீனிவாசன் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார்.

இவரின் உடல் அடக்கம் அவரின் சொந்த கிராமத்தில் நாளை மதியம் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் அனைத்து தேமுதிக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இறந்து போன சீனுவாசனுக்கு அம்மு என்ற மனைவியும், 9 வயதில் 4வது படிக்கும் சிவா என்ற மகனும் உள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்