Thursday, October 23, 2008

மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்? - இயக்குநர் சீமான்

சீமானை கைது செய்யவேண்டும் என்று சொன்ன அரசியல் வியாபாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து தன்மான இயக்குநர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 86 சதவீதம் மக்கள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆட்சியையே மக்கள் தீர்மானிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமா பயங்கரவாத இயக்கம் என்றும் தடை செய்யவேண்டும் என்றும் முடிவு செய்வது.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா மக்களை பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

பால்தாக்ரே விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்றார். அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று கண்டித்தது உண்டா? அவர் மேல் ஏன் கோபம் வரவில்லை. அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள். மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்?

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்புஇல்லை, வக்குஇல்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்கு நூறாகி விட்டதா? உடைந்து விட்டதா? சாதாரண இரண்டு பேர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படி ஊறு விளைவிக்க முடியும்.

சிதைக்கப்படும் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர்.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள் மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்பவர்கள் ஏன் கண்டிக்கவில்லை.

இங்கிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு தன் இனத்தை சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று என்றாவது பேசியது உண்டா?

நாங்கள் உண்மையான மனிதநேயவாதிகள் ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை இடித்ததற்காக அழுதோம். அதற்காக ஜார்ஜ் புஷ் பழிவாங்க இருநாடுகள் மீது படையெடுத்து அழிவு ஏற்படுத்தியதற்காகவும் அழுதோம்.

பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதை பார்த்து பேசாமல் மவுனமாக இருக்க முடியவில்லை. மவுனத்தை கலைத்து பேச வேண்டி இருக்கிறது.

எனவே தயவு செய்து தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்கு அழுகிறோம். எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள். நெல்சன் மண்டேலாவை கூட தீவிரவாத பட்டியலில் தான் வைத்துள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ் பெயரை அப்பட்டியலில் இருந்து இப்போது தான் நீக்கியுள்ளனர்.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21 ஆயிரம் பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள். பொறுத்து இருந்து பார்ப்போம். எதுநடக்குமோ அது நன்றாகவே நடக்கும்

Tuesday, October 21, 2008

விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல! - மருத்துவர் இராமதாசு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தில்லி சென்று இருக்கிறார். அங்கு அவர் ஊடகவியலாரிடம் கூறியதாவது:

இந்தியா தலையிட வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் நடுவண் அரசு தலையிட வேண்டும்.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி நடுவண் அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிசுதான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ளவேண்டும்.

திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலைலாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது.

தீவிரவாத இயக்கம் அல்ல

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். இலங்கைக்கு நடுவண் அரசு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகல்

அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் இலங்கை பிரச்சினையை இந்தியா தீர்க்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் செய்வது என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை ஏற்கிறேன். எங்கள் முதல்-அமைச்சர் இலங்கை பிரச்சினையை ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்து செயல்படுகிறார்.

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதை பின்பற்றுவோம்.

மீனவர் பிரச்சினை

இலங்கை அரசு அரசியல் தீர்வு காண்பதில் விருப்பம் தெரிவிக்க வில்லை. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக இலங்கை அரசு செயல்படுகிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

கச்சத்தீவையும் இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் இராமதாசு கூறினார்.

நன்றி: தினத்தந்தி

Friday, October 17, 2008

தமிழக அரசு பள்ளிக் கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதா?

வாழிடம், உணவு உற்பத்தி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு போன்றவற்றை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் அது உண்மையான அரசாக இருக்கும்.

இவைகள் முழுமையாகவோ அல்லது பகுதிப் பகுதியாகவோ அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலகி தனியாரிடமோ, முதலாளிகளிடமோ, வியாபாரிகளிடமோ சென்றுவிட்டால் அந்த அரசு மக்களுக்கான அரசாக இருக்கமுடியாது. மாறாக அது முதலாளிகளுக்கான அரசாகவோ, தரகு வியாபாரிகளுக்கான அரசாகவோ மாறிவிடும்.

நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் அரசு அதிகாரத்திற்கு வந்தவர்கள் வியாபாரிகளாக மாறிப்போனதாலும், அரசு அதிகாரத்திற்கு வியாபாரிகள் வந்ததாலும் மேற்குறிப்பிட்ட அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலகிவருகிறது.

குறிப்பாக; ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நல்ல குடிமக்களையும் நல்ல எதிர்காலத்தையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறையாகும்.

அதில் உயர்கல்வித்துறை என்பது இன்று பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

பள்ளிக் கல்வியும் இன்று நிலவணிகத்திற்கு அடுத்தபடியாக நல்ல இலாபம் தரும் தொழிலாக மாறிவருகிறது.

இதனால் கல்வியைப் பற்றி எந்தப் புரிதலுமே இல்லதவர்கள் இலாபத்தை மட்டுமே இலக்காக்கொண்டவர்கள் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இப்படி வர்த்தகத்திற்காக தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகளில் வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து தற்குறி தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்பள்ளிகளை நோக்கி ஓடுவதற்கு முக்கிய காரணம் பள்ளிகளின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை, இடவசதி போன்றவையே.

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைஎளிய மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் 70 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். இப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து அரசு உண்மையாக சிந்தித்து செயல்படுகிறதா? என்பதே இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி.

நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைதான் என்ன என்பதை இன்றுவரை எந்த அரசும் தெளிவுபடுத்தாது,

சமச்சீர் கல்வி முறையை இதுவரை செயல்படுத்தாது,

தமிழ்நாட்டில் கல்வி மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதை இன்றுவரை தீர்மானிக்காதது,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புதியதாக எந்த ஒரு அரசுப் பள்ளியையும் தொடங்காமல், ஏற்கனவே இருக்கின்ற பல அரசுப்பள்ளிகளை தொடர்ந்து இழுத்து மூடுவது போன்ற செயல்கள் போன்றவை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் அனைத்தையும் முழுமையாக இழுத்து மூடும் திட்டம் அரசுக்கு உள்ளதா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்; இன்று (17.10.2008) தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.அப்துல்மசீத்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கும்போது பள்ளிக் கல்வித்துறை எதற்காக உள்ளது யாருக்காக செயல்படுகிறது? என்றம் ஐயம் எழுத்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்,

“தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் பொதுத் தேர்வுகளில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு, தொடக்கக் கல்வியில் தமிழக அரசு கவனம் செலுத்தத் தவறியதே காரணம்.

கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டக் கல்விப் பணிகள் குறித்து, கடலூரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தொடக்கக் கல்வியில் பின்தங்கிய நிலையைச் சுட்டிக் காட்டி, அதுவே 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி சதம் குறைந்ததற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். இதை நாங்கள் முன்பே கூறி வருகிறோம்.

கடந்த ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 623 திறன்களை அடைய வேண்டிய மாணவர்கள், 17 திறன்களை மட்டுமே அடைந்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பின்னடைவுக்குக் காரணம்,

அரசு ஆரம்பப் பள்ளிகளில், 5 ஆயிரம் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் ஆக்கப்பட்டுவிட்டன.

மாணவர்கள் இருந்தும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

95 தொடக்கப் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

1005 நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

108 பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லாமல், பக்கத்துப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

தொடக்கக் கல்விக்கு மாநில அரசு ரூ.4800 கோடியும், மத்திய அரசு ரூ.4800 கோடியும் செலவிடுவதாகக் கூறுகின்றன. ஆனால் முறையாகச் செலவிடப்படுகிறதா?

தொடக்கப் பள்ளிகளுக்கு குறைந்தது 3 ஆசிரியர்களாவது நியமிக்க வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:30 ஆகக் குறைக்க வேண்டும்.

6-ம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச, எழுதத் திறன் வரும் வகையில், கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் திறமை வாய்ந்தவர்களால் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரி, ஓராண்டில் 13 போராட்டங்களை நடத்திவிட்டோம். பயன் இல்லை.

எனவே நவம்பர் மாதம் மீண்டும் போராட்டம் தொடங்குகிறோம். நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை, தமிழக முதல்வருக்கு 10 ஆயிரம் தந்திகள் அனுப்புவோம்.

15 முதல் 19-ம் தேதி வரை கிராமங்களில் நடைப்பயணம் மேற்கொள்வோம்.

20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம்.”

என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்கட்சியினரோ, மாற்றுக் கருத்து கொண்டவர்களோ ஏதாவது அறிக்கை விடுத்தாலோ கோரிக்கை வைத்தாலோ அவர்களுக்கு உடனே பதில்சொல்லும் தமிழக அரசு. இது போன்ற அறிக்கைகளுக்கு பதில்சொல்வதே கிடையாது. இதுபோன்ற நாட்டுக்குத் தேவையான மிக முக்கியமான அறிக்கைகளை மக்களும் படிக்கமாட்டார்கள். அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதே இதற்குக் காரணம்.

இந்தச் சிக்கல் ஏதோ ஒரு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை என்று யாருமே கண்டுகொள்ளாமல் விட்டால் இழப்பு ஆசிரியர்களுக்கு அல்ல; இந்த நாட்டிற்குத்தான்.

மக்களே! நாட்டின் நலன் கருதி “கல்வி வியாபாரமாக மாறுவதை தடுப்போம்! அனைத்துக் கல்வியையும் அரசுடமையாக்குவோம்.”

Monday, October 13, 2008

தமிழ் திரைப்பட கலைஞர்கள் இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலம் நடத்துகிறார்கள்

சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது நடத்தும் இனவெறி தாக்குதலை கண்டித்து அக். 19 அன்று தமிழ் திரைப்பட கலைஞர்கள் சங்கம் இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலம் நடத்துகிறது. இதில் திரைப்படத்துறையைச் சோ்ந்த அனைத்து கலைஞர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இதுபற்றிய ஆலோசனை கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் கருத்தரங்கு மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் திரைப்பட தயாரிப்பாளர்கள்ம், இயக்குநர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகசுதர்கள் ஆகிய அனைத்து அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த கூட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன் தலைமை தாங்கினார். `திரைப்பட வர்த்தகத் தலைவர் கே.ஆர்.ஜி. முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராசா கூறுகைளில்,

சிங்கள இராணுவத்தினர் நடத்தி வரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

இந்த பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகமும் குரல் கொடுத்து வருகிறது. திரையுலகை சேர்ந்தவர்கம் சிங்கள இராணுவத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், நேற்று முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்து வருகிறார்கள்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழ் திரையுலகம் சார்பில், வருகிற 19-ந் தேதி இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் நடிகர்-நடிகைகள் உட்பட திரையுலகைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்துகொம்கிறார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* "தமிழ் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், சிங்கள இராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒரு சேர நின்று குரல் கொடுத்து வருகின்றன. அவர்களுடன் கலையுலகமும் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், சிங்கள இராணுவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சிங்கள ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில், திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகசுதர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் எங்களின் கண்டனத்தை தெரிவிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

* முதல்கட்டமாக, தமிழர் பகுதியில் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அறிவித்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.

* உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை, பாதிக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும்.

* ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

* தமிழக மீனவர்கம் கடல் எல்லை பகுதியில் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

* இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

* முறையாக ஒரு தூதுக்குழு அமைத்து, இலங்கையில் நடக்கும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

* இலங்கை அரசுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வருகிற 18, 19, 20 ஆகிய நாட்களில், தமிழ் திரையுலகில் எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். படப்பிடிப்பு உட்பட திரைப்பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து தனி ரெயிலிலும், பஸ்களிலும் புறப்பட்டு ராமேசுவரம் செல்கிறோம். 19-ந் தேதி, இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெறும்.

இராமேசுவரம் கடலோரத்தில் நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில், திரையுலகம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கும். அந்த குரல், இலங்கைக்கு எட்ட வேண்டும். மத்திய அரசுக்கும் எட்ட வேண்டும்.''

Tuesday, October 7, 2008

குழப்பமும் வேண்டாம்! குழப்பவும் வேண்டாம்!-தமிழீழமே தீர்வு

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் இன்று ஈழத்தமிழர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

தாய்த்தமிழக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழகத்தில் சூழல் நிலவுகிறது.

இந்தச்சூழலை பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பாகவும் நிரந்தர தீர்வுகாண தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும்.

ஈழச்சிக்கலுக்கு நிரந்த தீர்வு “தமிழீழ தனிநாடுதான்“ என்பது இங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கடந்தகால நிகழ்கால நிலைப்பாடு.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் போன்ற இயக்கங்கள் தமிழீழ சிக்கலுக்கு நிரந்தரத்தீர்வு “தமிழீழ தனி நாடுதான் ஒரே தீர்வு” என்ற நிலைப்பாட்டில் இப்போதும் உள்ளன. திராவிடர் கழகமும் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கும் என நமபுகிறோம்.

எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அ.திமு.க.வின் நிலைப்பாடு தனிநாடுதான் தீர்வு என்றிருந்தார். தற்போது செயலலிதா அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

புதியதாக ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய பொதுவுடமை கட்சியினர் “அனைவருக்கும் சமமான உரிமை வழங்கும் கூட்டாட்சி” மலரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

காங்கிரசு, பா.ச.க. போன்ற கட்சிகளின் தற்போதயை நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் ஈழ பிரச்சனை தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை என்ன என்பதை விளக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் 06.10.2008 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலவரும் தி.மு.க.வின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் பேசும்போது,

......... ............ ....... ........ “இலங்கையில் காந்தியடிகளைப் போன்ற உருவம், ஆனால் பெரியாரை போன்ற உள்ளம் கொண்ட செல்வா தொடங்கியதுதான் உரிமை போராட்டம். அதற்கான ஆதரவு கேட்டு தமிழகத்திற்கு வந்தார். இங்கு வந்த போது அவரோடு அமிர்தலிங்கமும் வந்தார்.

இவர்கள் எல்லாம் இன்று இல்லை. இவர்கள் இல்லாமல் போனதற்கான காரணங்களை நான் ஆராய விரும்பவும் இல்லை. அதற்காக இப்போது கண்ணீர் விட்டு புண்ணியமும் இல்லை.

செல்வா காலத்திற்கு பிறகு அங்கு இளைஞர்கள் தோன்றினார்கள். அந்த இளைஞர்கள்தான் சிறைச்சாலையிலே உயிர்நீத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தியாகம் அவர்கள் நினைத்த விடுதலை உணர்வு இன்றளவும் பட்டுப்போகாமல் இலங்கையில் இருக்கிறது.

ஆனால் முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீர வேண்டுமா? இது விவாதத்திற்குரிய விஷயம். நெடுநாளாக விவாதிக்கப்படுகிறது.” . ......... ......... ........ ........
என்று பேசியுள்ளார்.

கடந்த காலங்களில் தி.மு.க.வின் நிலைப்பாடும் கலைஞரின் நிலைப்பாடும் ஈழத்தமிழர்களின் இன்னல் தீர ஒரே வழி “தமிழீழ தனிநாடு மட்டுமே” என்ற நிலைப்பாடுதான். இந்த நிலைப்பாட்டில் தற்போது குழப்பம் ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

மரியாதைக்குரிய கலைஞர் அவர்களே! வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்துவிடாதீர்கள். தமிழீழ சிக்கலுக்கு “தமிழீழ தனிநாடு” மட்டுமே நிரந்தரத்தீர்வு என்ற இலக்கை நோக்கி மட்டுமே உங்கள் பார்வையை செலுத்துங்கள்... அதற்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுங்கள்... தமிழீழ அதரவு சக்திகள் அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஓரணியில் திரட்டுங்கள்...
“தமிழீழ தனி நாடே” ஒரே தீர்வு என்று தாய்த் தமிழகம் ஒரே குரலாக ஒலிக்கட்டும்...

Friday, October 3, 2008

தமிழ்நாட்டில் மருத்துவர் அன்புமணியைப் பாராட்ட யாருக்கும் மனமில்லை!




காந்தியடிகளின் பிறந்த நாளான கடந்த அக்டோபர் 02 அன்று நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி அவர்கள் நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் நடுவண் அரசில் சுகாதாரத்துறை என்ற ஒன்று இருப்பது நாட்டுமக்களுக்கு பரவலாக தெரிந்தது என்பதே உண்மை.

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் “குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ வசதி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அறிவித்தார்.

அதன்படியே பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவரின் நடவடிக்கைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் அவை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கின.

அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த மருத்துவம் என்ற நிலை நாட்டில் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் அதற்கான பணியை தொடங்கியதற்காக அமைச்சர் மருத்துவர் அன்புமணியை அனைவரும் பாராட்ட வேண்டும்.

இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் மருத்துவர் அன்புமணியின் பணியை உலகமே பாராட்டினாலும் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தவிர்த்து வேறு யாருமே பாராட்டாததுதான்.

அண்மையில் லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்து நாளேடுகளிலும் கொட்டையெழுத்தில் வந்தது. ஒவ்வொரு நாளேடும் ஆய்வின் ஒவ்வொரு கூறுகளையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டன.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 13 நடுவண் அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்ற ஆய்வும் ஆய்வு முடிவும் “தமிழ் ஓசை” நாளிதழ் “மக்கள் தொலைக்காட்சி” தவிர வேறு எந்த ஊடகங்களிலும் துணுக்குச் செய்தியாகக்கூட வெளிவரவில்லை.

காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 நடுவண் அமைச்சர்களில் மிகச்சிறப்பாக செயல்படுவர் மருத்துவர் அன்புமணி என்ற ஆய்வு முடிவுதான்.

ஒரு தமிழன் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்வதை இந்த ஊடகங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? அல்லது ஏற்றுக்கொள்ள மனமில்லையா?

Thursday, October 2, 2008

ஏண்டா! நீங்களெல்லாம் அரசியலுக்கு வந்து தமிழன் தாலிய அருக்கறிங்க?

காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.வீ.தங்கபாலு 02.10.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க சில கட்சிகள் முயல்வதாகவும்,

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவவில்லை என்றும்,

இலங்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் ஆதரிக்கவில்லை என்றும்,

இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.”

தமிழ்நாடு காங்கிரசு கட்சி பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முட்டாள்களின் கைக்கு மாறியதும் அல்லது முட்டாள்களுக்கு மட்டுமே தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிந்ததே.

அந்த வரிசையில் தற்போது கே.வீ.தங்கபாலுவிற்கு அந்தப்பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக நியமிக்கப்படும் வரை ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் தான்உண்டு தன் வேலைஉண்டு என்று கல்வி வியாபாரத்தை மட்டுமே பார்த்துவந்தார்।
தற்போது அவரை தலைவராக நியமித்ததால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டவர்போல் உளரிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் விடுதலைப் புலிகள் வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத்தின் கூட்டுபடை முகாம் மீது நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் இருவர் படுகாயமுற்றதையும் இலங்கையில் 250-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று இலங்கை தூதரக அதிகாரி அறிவித்ததையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இச்செய்தி தமிழக மக்கள் அனைவரும் அறிந்த பழைய செய்தி.

அதுபோல் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக்கொன்றதும் இந்திய அரசு அதை வேடிக்கைப் பார்ப்பதும் தமிழக அரசின் கையாளாகத் தனமும் தமிழர்கள் அறிந்ததே!

திரு. தங்கபாலு அவர்களே! உங்களுக்குத் தெரிந்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். அரசியல் அறிவோ, பொது அறிவோ குறைந்த பட்சம் செய்தித்தாள் அறிவோ இன்றி அரசியல் பேசி தமிழர்களின் தாலியை அருக்காதீர்கள்.