Tuesday, July 22, 2008

தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன - பழ. நெடுமாறன்-2

...
இந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இனப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரி, இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் ஆகிய இருவரும் ராஜீவின் ஆலோசகர்களாக விளங்கினார்கள். இந்திராவின் ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.

இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் அணுகுமுறை என்பது சிங்கள அரசுடன் ஆதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.

சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளும் இஸ்திரேலிய மொசாட் படையினரும் பயிற்சி அளித்தனர். அமெரிக்காவின் ராணுவ செல்வாக்கு இலங்கையில் ஊடுருவியது.

இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது.

ராஜீவ் கடைப்பிடித்த இந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.
  1. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமையத் தொடங்கின.
  2. இலங்கை இனப்பிரச்னைக்கு சிங்கள அரசு கூறிய தீர்வை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
  3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் அரசால் இயலவில்லை.
  4. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது.
  5. திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான எண்ணெய்க் கிடங்குகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டபோது இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா, அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.
இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்குத் துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவப் பொருளாதார உதவிகள் இக்கொள்கையின் விளைவே ஆகும். தென்னாசியாவைப் பொருத்தவரை இந்தியாவை அதனுடைய எல்லைக்குள்ளாகவே அடங்கியிருக்கும்படி செய்ய அமெரிக்கா விரும்புகிறது.

டிகோ - கார்சியா தீவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து இருப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் அமெரிக்காவுக்குத் தேவை. அதற்காக இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது.

மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக இலங்கை திகழ்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. ஆனால் இதன் விளைவாக இந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்துவிட்டது.

தென்னாசிய நாடுகளின் அமைப்பிற்கு இயற்கையான தலைவராக இந்தியா இருந்தபோதிலும் அந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக இல்லை. தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன.

இந்தியாவைச் சுற்றி அந்த நாடுகள் இப்போது வியூகம் அமைத்துள்ளன. இந்த வியூகத்தின் ஓர் அங்கமே இலங்கையாகும்.
இந்த வியூகத்துக்கு பக்கபலமாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் உள்ளன. இந்த வியூகம் பலம் பெறுவது இந்தியாவின் சுதந்திரத்துக்கு அபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இன்னமும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணரவில்லை.

தொடரும்...
நன்றி: தினமணி

1 comments:

said...

வணக்கம் தோழர்
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்
பாருங்க‌ள்.