Monday, September 8, 2008

“ஈழத்தமிழர்களின் முழு விடுதலையே நம் கோரிக்கை" சி.மகேந்திரன் திட்டவட்ட அறிவிப்பு

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சி.மகேந்திரன் ஆற்றிய உரை.

ஓர் மாற்றத்திற்கான போர்க்குணத்தை நாம் எங்கிருந்து பெறுவது என்ற உணர்வோடு இருக்கிறோம். தமிழர்களாய் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் ஒரு தொன்மையான பண்பாட்டைக் கொண்டவர்கள்; ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்றவர்கள் - இலங்கையில் அந்த காலம் முதல் ஆதி குடிகளாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் - பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐயா நெடுமாறன் அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால தமிழக வரலாற்றிலே, அரசியலை நேர்மையோடு செலுத்த வேண்டும் என்பதற்காக காயம்பட்டவர். தாக்குதலைச் சந்தித்தவர் அவருடைய ஒவ்வொரு முயற்சியும் தமிழர்கள் உலகத்தில் எங்கு தாக்கப்பட்டாலும் அவர்கள் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்ற வகையில் மிகத் தெளிவான போராட்டங்களை அன்று முதல் இன்று வரை நடத்தி வருகிறார். அனைவருக்கும் தலைமை தாங்கி நிற்கிற உண்மையான மாவீரனாக அவர் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மக்கள் மீது அடிமைத்தனம் திட்டமிட்டு சுமத்தப்பட்டுள்ளது. முதலில் அப்படி சுமத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். பின்னரும் புதிதாக அரசியல் இயக்கங்கள் கண்டவர்களும் சுதந்திரம் பெற்ற பின் வந்தவர்களும் தமிழர்கள் மீது அடிமைத் தனத்தைச் சுமத்தி உள்ளார்கள். அவற்றில் இருந்து எல்லாம் எப்படி விடுதலை பெறு வது என்பது தான் மிகப் பெரிய கேள்வி யாக இருக்கிறது அப்படிப்பட்ட கேள்விக் கான விடையை இப்படிப்பட்ட கூட்டங் களின் மூலம் தான் நாம் காண முடியும் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவின் சுதந்திரதின விழா தில்லியில் கொண்டாடப்பட்ட போது உரை யாற்றிய பிரதமர் ஆப்கனில் தூதரகம் தாக்கப்பட்டு இருப்பதாகவும் தூதரகத்தில் இருந்த மூன்று பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் சொன்னார். ஆனால் அதே நேரத்திலே தமிழகக் கடல் பகுதியிலே இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்களைப் பற்றி சொல்வதற்குத் தயாராக இல்லை. ஏன்? இந்தக் கேள்வியைத் தான் நாம் தமிழகத்தில் எழுப்பக் கடமைப்பட்டவர்கள். மீனவர்கள் உட்பட தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதற் குள் இருக்கும் அரசியல் தான் முக்கிய மானது. அந்த அரசியலை எதிர்த்து நாம் போராட வேண்டிய வர்களாக இருக்கிறோம்.

அதே போல உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழ் மக்களைப் பற்றி தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை - மலேயா நாட்டில் சியான் என்ற இடத்திலே பயணம் செய்வதற்கான இரயில் பாதை அமைப்பதற்கு கூலிகளாய் சென்ற 90,000 தமிழர்கள் செத்து மடிந்திருக்கிறார் கள் -தென்னாப்பிக்கா மற்றும் இலங்கையில் தோட்டத் தொழிலுக்காகச் சென்று அல்லற் பட்ட தமிழர்கள் பற்றியும் - யாழ்ப்பாணத் தில் நடக்கிற விடயங்களைப் பற்றியும் தமிழ கத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. அப்படி அக்கறை இருக்கிறவர்களைக் கூட கழுத்தைப் பிடித்து நெறிக்கக் கூடிய அரசாங்கங்களும் சட்டங்களும் நம் நாட்டிலே இருக்கிறது.

தமிழகத்திற்கு ஒரு பொது வேலைத் திட்டம் வேண்டும். அந்த வேலைத் திட்டம்தான் சந்தர்ப்பங்ளுக்காகக் கூட்டு வைத்துக் கொள்ளும் அரசியல் கூட்டணிகளை ஒழிக்கும் மக்கள் கூட்டணியாக இருக்கும். தமிழ் உணர்வாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பகுத்தறிவாளர்கள், உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று- பண்பாடு என்ற முறையிலே நம்முடைய கலாச்சாரம் என்ற வகையிலே, ஒரு மொழி உணர்வு என்ற முறையிலே, நமக்குள் இருக்கக்கூடிய ஒற்றுமையை, நமக்குள் இருக்கக்கூடிய தொப்புள்கொடி உறவினை, அந்தப் பொது செயல் திட்டத்தின் மூலம் காக்க வேண்டும். தமிழராய் பிறந்தவர்களிடம் இருந்து தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு இருக்கிறது. தாய்த் தமிழகம் இதைத் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை அதைப் பற்றிய அக்கறை கூட கிடையாது. பெரிய திரைகளிலும் சின்னத் திரைகளிலும் நாம் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.

இவற்றை எல்லாம் மாற்றுவதற்குரிய ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது. அது மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும். போராட்டங்களில் எல்லாம் வலிமை படைத்ததாக - தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழுகின்ற நமது தமிழ் மக்களின் முழு விடுதலையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம். பல பிரச்சினைகளோடு அது மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்திய நாடாளு மன்றத் தேர்தலுக்கு யார் எவரோடு கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகளோடு தேர்தல் வர இருக்கிறது. யார் யாரோடு வேண்டுமானா லும் கூட்டணி அமைக்கட்டும். அதைப் பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிர்ப்பந்தம் இருக்கும். ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியோடு வாழக்கூடிய அரசியல் திட்டத்தை தங்கள் கோரிக்கையாக வைக்கவேண்டும் தமிழ் மக்கள். இதைப்பற்றி நாம் அலட்சியப்படுத்துகிறோம். அண்மையில் கூட பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. தில்லி மாநகரத்தில் எங்கள் தேசியக்குழுக் கூட்டம் நடந்த போது மக்களுடைய பாதிப்பை - எத்தனை மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் - உலகத்தில் எங்காவது, தமிழ் மக்கள் எங்களுக்கு நாடு வேண்டும். வாழ்வதற்கு உரிமை வேண்டும் என்று கேட்டதற்காக - உலகத்தில் எங்காவது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக செய்தி உண்டா? இந்த அநியாயம் எங்காவது நடைபெற்று உள்ளதா? இந்த கேள்வியை நாம் கேட்டோம். தமிழகத்தின் கம்யூனிஸ்டுகளான நீங்கள் இலங்கைப் பிரச்சினையில் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது நாங்கள் கேட்டோம். பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ் - பங்களாதேஷில் ஒரு பாதிப்பு வரும்போது கம்யூனிஸ்டுகளாக இருக்கும் நாம் - மேற்கு வங்கத்தில் இருக்கக் கூடிய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு துடிப்பு ஏற்படுகிறது. அதில் உள்ள நியாயத்தைக் கேட்க வேண்டும் என்று உணருகிறார்கள். போராடுகிறார்கள். மொழிக் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படுகிற போது அவன் போராடத்தான் செய்வான். மொழி நம்மை இணைத்து வைத்திருக்கிறது. இலங்கையில் ஏற்படக் கூடிய அந்த மாற்றங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்படக் கூடிய விடுதலையின் மேன்மை - எவ்வளவு அழகான நாடு - எவ்வளவு மேன்மையான நாடு - ஒரு அழகிய தேசம் ஏன் இப்படி சிதைக்கப்படுகிறது?

இலங்கை மட்டுமல்ல - இலங்கையும் இந்துமாகடலும் இந்தியாவும் அமெரிக்காவின் காலனியாக மாறிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக நாம் போராட வேண்டும். கடந்த 20 ஆண்டு காலமாக இந்த கடல் - நமது மீனவர்களுக்குச் சொந்தமான கடல் - நம்முடைய மக்களுக்குச் சொந்தமானவை - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்து வருவதாகவும் நம் சுதந்திரம் பறி போவதாகவும்... எனவே தான் இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடக் கூடிய மாபெரும் போராட்டம் தேவை. போராட்டம் தேவை.

தமிழ் மக்களிடம் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக தமிழர்களோடு இணைந்து போராடக் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்றென்றும் உங்களோடு நின்று போராடும் போராடும்.

0 comments: