Wednesday, September 10, 2008

ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது-பழ.நெடுமாறன்-2

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
...
இந்த போக்குக்குத் தாய்த் தமிழகத்தின் புறக்கணிப்பு மட்டும் காரணமா? அது ஒரு காரணம். மற்றொன்று முக்கியமானது. இந்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது. இந்திய அரசு நம்முடைய வெளி நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இந்தியாவில் வேறு எந்த தேசிய இனமும் வெளிநாடுகளில் இந்த அளவுக்குப் பெருந்தொகையாக வாழவில்லை.

இலங்கை, மலேசியா, சிங் கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றபோது மலேசியாவுக்கான இந்தியத் தூதுவராக டாக்டர் சுப்பராயன் முதன் முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இன்றுவரை எந்த தமிழனுக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. மேற்கண்ட நாடுகளில் நாம் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வாழ்கிறோம் - பெரும்பான்மையாக இருந்த போதிலும்கூட அவர்களுக்கு என்ன குறை? என்ன தேவை என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்கு மொழி அறியாத இந்தியத் தூதுவர்களால் முடியவில்லை. நேர்மாறான காரியங்களைத்தான் செய்கிறார்கள். இந்திய அரசு அதிலே மட்டும் அலட்சியப் போக்குக் காட்டவில்லை.

கச்சத் தீவைத் தூக்கி இலங்கைக்குத் தாரை வார்த்தார்கள். அதனால் தமிழக மீனவர்கள் அங்கு செல்ல முடியாமல் அல்லற்படுகிறார்கள். ஏறத்தாழ 400 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஒரு போதும் இப்படிப்பட்ட செயலைச் சகித்துக்கொள்ளாது. பதிலடி கொடுக்கும் - எச்சரிக்கை தரும் - இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு வாங்கும். தமிழக மீனவர்கள் சிங்கள வல்லரசால் சுடப்பட்டாலும் ஒரு தம்பிடி கூட நட்டஈடு வாங்கப்படவில்லை. இந்திய அரசு வாங்கவில்லை.

அதுமட்டுமல்ல - இலங்கையிலிருந்து ஈழத்தை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் எந்த ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு - முழுமையாக மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது.

இராசீவ் காந்தி காலத்தில் இந்தியப் படை அனுப்பப்பட்டது. இப்போது படைக்கலன்களை அனுப்புகிறார்கள். நம் தமிழர்களைக் கொல்வதற்குத் தான் ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து அந்த தவறைச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கர்நாடகமும் கேரளமும் வஞ்சிக்கின்றன. தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லும் துணிவு வருகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் இங்கே வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை. துணிவும் இல்லை. எங்கே போய் முடியுமோ இது?

தொடரும்...

2 comments:

said...

//***
தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
***//
நச்சனு சொன்னிங்க
இந்திய அரசு நேரடியாகவும மறைமுகமாகவும் தமிழர்களையும்/தமிழையும் புறக்கணிக்கிறது என்பதை நான் தெரிந்துகொண்டதில் இருந்து சுதந்திரம் கொண்டாடியதில்லை
ஏனோ இந்திய கொடியை பார்த்தால் கோபம்தான் வருகிறது
நான் இன்று கைநிறைய சம்பாதிக்கிறேன் என்பதற்காக இந்தியாவுக்கு வக்காளத்து வாங்க முடியாது, தினமும் தமிழக மீனவர்கள் செத்துமடிகிறார்கள், இலங்கையில் நம் உடன்பிறப்புகள் செத்துமடிகிறார்கள், தமிழ்நாட்டுத் விவசாயிகளுக்கு கர்நாடகமும் கேரளமும் தண்ணீர் தராமல் வஞ்சிக்கின்றன, மலேசியாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இப்படி எதைபற்றியும் இந்த இந்திய அரசுக்கு கவலையில்லை
//***ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும் ***//
இதை நான் வழிமொழிகிறேன்

said...

பின்னூட்டத்திற்கு நன்றி! பதிவில் உள்ள கருத்தகள் அனைத்தும் மரியாதைக்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடையது. உலகத்தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவிழா மாநாட்டில் ஐயா அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு.

பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் கருத்துக்கள் அனைத்து எனக்கு ஏற்புடையது என்பதால் அவரின் உரையை நான் வெளியிட்டேன். நான் தமிழின உணர்வாளன் தமிழ்த்தேசிய சிந்தனையாளன். நன்றி.