கடந்த மூன்று மாதங்களாக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் மகளிர் அணி முதல் மாநில மாநாடு இப்போது நடைபெறும் அப்போது நடைபெறும் என்று ஒருவழியாக கடந்த சூன் 14, 15 ஆகிய நாட்களில் கோலாகலமாக பிரமாண்டமாக திருவிழாபோல் நடைபெற்றது.
பலகோடி ரூபாய் (சுமார் 20 கோடி! வசூல் செய்தது எவ்வளவு என்று தெரியவில்லை.) செலவில் தி.மு.க. வினரால் நடத்தப்பட்ட இந்தத் திருவிழா பற்றி கடந்த ஒரு மாதமாக அனைத்து நாளேடுகளும் நாளுக்கொரு செய்தி என்று எழுதித் தீர்த்தன. அதன் பலன் தி.மு.க.வினரின் விளம்பரம் மூலம் அனைத்து நாளேடுகளுக்கும் கிடைத்துவிட்டது. (எது நடந்தால் என்ன? நாளேடுகளுக்கு காசு வந்தால் சரிதான்.)
மாநாட்டின் முதல்நாள் நடைபெறும் வழக்கமான பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு தமிழகமெங்குமிருந்து திமுக தொண்டர்கள் திரண்டனர் அல்லது திரட்டப்பட்டனர். காசு கொடுத்தால் அனைத்துக் கட்சிகளுக்கும் கொடி பிடிக்க தற்போது பல மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் தயாராகவே உள்ளன. அவர்களை அழைத்துவரும் கடமை தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உண்டு. போக்குவரத்து கழகம் இலாபத்தில் இயங்கினால் என்ன? நட்டத்தில் இயங்கினால் என்ன? ஆளுங்கட்சிக்குப் பயன்படாத பொதுச்சொத்து எதற்கு?
பீடு நடைபோட்டு வந்த மாதர்குல மாணிக்கங்களை, மகளிருக்கு துணையாக வந்த கழகக் கண்மணிகளை, கழகக் குலவிளக்குகளை, கழகத் தூண்கள் ஆற்காடு வீராசாமி, பேராசிரியர், துரைமுருகன் ஆகியோர் அருகில் இருக்க தன் மனைவியும் துணைவியும் பக்கத்தில் அமர வைத்து மூன்று மணிநேரம் நடைபெற்ற இப்பேரணியை கலைஞர் கருணாநிதி அவர்கள் பார்த்து ரசித்தார்.
மாநாட்டு நிறைவு நாளில் வழக்கம்போல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் தமிழக மக்கள் அனைவரும் ஊடகங்களின் மூலம் பார்த்து படித்து அறிந்த செய்திகள்தான்.
வழக்கம்போல் கலைஞரின் உரையுடன் திருவிழா மன்னிக்கவும் மாநாடு இனிதே நிறைவேறியது.
எதையும் எப்போதும் தெளிவாகவோ, முழுமையாகவோ, பேசாதா, எழுதாத, செய்யாத கலைஞர் அவர்கள், நடந்தேறிய மாநாடு எதற்காக? யாருக்கா? நடத்தப்பட்டது என்பதை தமிழக மக்களுக்கு கவிதை வழியாகவோ, கட்டுரை வழியாகவோ, வினா-விடை அறிக்கையின் வழியாகவோ தெளிவுபடுத்தினாலோ அல்லது கோடிட்டுக் காட்டினாலோ நன்றாக இருக்கும்.
Monday, June 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment