Sunday, June 22, 2008

தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும்-பழ.நெடுமாறன்

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.

கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை விலக்கும்போது அக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைமை தன்னிச்சையாக முடிவு எடுத்து பா.ம.க.-வை விலக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராமம் பிரச்னையில் கூட்டணிக் கட்சிகள் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் மார்க்சீய பொதுவுடமை கட்சி, எந்தக் கட்சியையும் விலக்கவில்லை.

ஆனால், தமிழகத்தில் பதவிக்காக சந்தர்ப்பவாத கூட்டணி உள்ளது. எந்தக் கொள்கையையும் அடிப்படையாக் கொண்டு அமையாத கூட்டணி என்பதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

எனவே, கூட்டணி அமையும் போதே கொள்கையும், குறைந்தபட்ச செயல் திட்டமும் இருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மத்தியிலும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் கொள்கையும் இல்லை. குறைந்தபட்ச செயல் திட்டமும் இல்லை. தி.மு.க. அரசு பெரும்பான்மை இல்லாத அரசாக இருந்து கொண்டு ஏதேச்சாதிகாரமாக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை நடத்துகிறது. இது சர்வாதிகாரப் போக்காகும். இன்றைக்கு பா.ம.க.-வுக்கு ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் மற்ற கட்சிகளுக்கும் வரக்கூடும்.

இதனால், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி இல்லாத வகையில், மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை அமைக்க முன்வர வேண்டும். அப்போது தான் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்றார்.

நன்றி:தினமணி

0 comments: