Thursday, April 2, 2009

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன உணர்வுடன் செயற்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும்: தமிழருவி மணியன்

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன...' எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நாற்காலி மனிதர்களின் நாடக மேடைதான் தமிழக அரசியல் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.

நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக்கொள்வது?

'வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழை கூடக் களத்தில் நிற்பான். நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான் விரும்புவேன். பல மோசமான வெற்றிகளை விட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது' என்றார் ஜோர்ஜ் எலியட்.

ஆனால், நம் அரசியல் தலைவர்களுக்கு வெற்றிதான் முக்கியம். இங்கே கொள்கைகளை பலியிடுவதுதான் கூட்டணி தர்மம்!

பாவம், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்... பாசிச வெறி பிடித்த ராஜபக்ச இராணுவத்தால் கரிக்கட்டைகளாய் குவிக்கப்படும் தங்கள் சொந்த உறவுகளின் சோகம் தவிர்க்க உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த 'சொக்கத் தங்கம்' சோனியா காந்தியிடம் கலைஞர் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர்.

ஈழத்தமிழரின் பிரச்னை குறித்துப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்று இரவு, பகல் கண்ணுறக்கமின்றிக் கண்ணீர் வடிக்கும் 'தமிழ்க்குடி தாங்கி' மருத்துவர் இராமதாஸ், சிறிலங்கா அரசுக்குத் துணை நிற்கும் இந்திய அரசின் செயலைக் கண்டித்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து மகன் அன்புமணியை விலகச்செய்து, ஈழத் தமிழரின் இன்னலைத் தேர்தல் பிரச்சினையாக்கி மாநிலம் முழுவதும் இனவுணர்வைத் தூண்டுவார் என்று நாளும் நம்பிக்கை வளர்த்தனர். அவர்களுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின.

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் கொழுந்து விட்டெறிந்த ஈழ ஆதரவு நெருப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் தகித்தபோது, பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்து அரசியல் பாரம்பரியம் மறு உயிர்ப்பு அடைந்தது. அதனால் உந்தப்பட்டு தீக்குளிக்கும் அப்பாவித் தியாகிகளின் பட்டியல் நீண்டது. கருகிக் கிடந்த சடலம் தேடி ஓங்கிய குரலில் ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஓடியது. எங்கும் உணர்ச்சி வெள்ளம். கலைஞரின் ஆட்சி அதைக் கண்டு அரண்டது.

ஒருபுறம் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை, மறுபுறம் இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரவை என்று வீதி நாடகங்கள் இனவுணர்வு ஒப்பனைகளுடன் அரங்கேறின.

இரண்டு பக்க நாடகங்களிலும் அரிச்சந்திரன்-சந்திரமதி மயான காண்டப் புலம்பல்கள் நெஞ்சைப் பிளந்தன. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈழ நாடகத்தில் இரண்டு பக்கமும் அவசரம் அவசரமாய்த் திரை விழுந்தது.

கூட்டணி முயற்சிகள் தொடங்கின. 'இனமே அழியினும், ஈழமே கருகினும், சோனியா காந்தியின் கருணையில் ஆட்சி நாற்காலியில் அசையாமல் இருப்பதே அடியேன் லட்சியம்' என்று முடிவெடுத்த முதல்வர் கலைஞர், இராமதாசுக்கும் விஜயகாந்த்துக்கும் திருமாவளவனுக்கும் வெவ்வேறு வலைகளை விரித்து வைத்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சக்திமிக்க மாநிலக் கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் காங்கிரஸ், விஜயகாந்த்தையும் மருத்துவரையும் கட்டியணைத்துக் கூட்டணியமைக்கக் கால்களில் விழுந்து கண்ணீர்விட்டது. பேரம் படியாததால், விஜயகாந்த் லட்சிய வீரரானார். ஆசைப்பட்ட தொகுதிகள் அமையாததால், காங்கிரசை ஈழத் தமிழரின் விரோதியாய் இனம் கண்டுகொண்டார் இராமதாஸ். இதுதான் பின்னணி உண்மை!

கலைஞரின் வலையில் விடுதலைச் சிறுத்தைகள் விரும்பி விழுந்தன. இரண்டு தொகுதிகளுக்காக திருமாவளவனின் புறநானூற்றுப் போர்க்கோலத்தில் புழுதி படிந்தது.

ஈழத்தில் இன்றுவரை இனப்படுகொலை ஓயவில்லை. திசையெங்கும் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து உணவின்றி, மருந்தின்றி நம் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கின்றனர்.

ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை. பண்டாரநாயக்க, சேனநாயக்க, சிறிமாவோ, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விட ராஜபக்ச பெரிய இராஜதந்திரி இல்லை. ஆனால், அவர் ஜெயவர்த்தனவை விட மோசமான இன அழிப்பு அரக்கனாக விசுவரூபம் எடுத்ததற்கு இந்திய அரசின் ஆதரவுதான் அடித்தளமானது.

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது.

மன்மோகன் அரசு சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடப்பது நாடறிந்த உண்மை. காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விழாவில் மன்மோகன் சிங் மனம் நெகிழ்ந்து சோனியா காந்தியை 'மத்திய அரசின் காவல் தெய்வம்' என்று வர்ணித்திருக்கிறார்.

அந்தக் காவல் தெய்வம் இன்றுவரை ஈழத்தமிழர் அவலம் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதனால், அவருடைய தலைமையில் இயங்கும் காங்கிரசுக்கு இனவுணர்வுள்ள எந்தத் தமிழரும் வாக்களித்தால் அது தகுமா? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை மாநிலம் முழுவதும் மேடைபோட்டு, 'முதல்வர் கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்து விட்டார்' என்று முழங்கியது.

முத்துக்குமார் தொடங்கிவைத்த தீக்குளியல் தியாகம் வைகோவையும், இராமதாசையும், தா.பாண்டியனையும், திருமாவளவனையும் ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க 'எந்தத் தியாகத்தையும் செய்யும்' சூளுரைக்குத் தூண்டியது. உண்மையில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்திருப்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஆண்டுக்கணக்கில் 'பொடா' சட்டத்தில் வைகோவை சிறையிலடைத்தார் ஜெயலலிதா.

'பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிக்கவேண்டும்' என்று முதல்வராய் இருந்தபோது சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்தார். 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்' என்று இயேசுவின் இரக்கவுணர்வோடு, புத்தரின் பாதையில் ஜெயலலிதாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கி, பகைமையுணர்வைத் தியாகம் செய்து, ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்காக அன்று போயஸ் தோட்டத்தில் அடைக்கலமானார் புரட்சிப்புயல் வைகோ. நாளையே தொகுதி பேரங்கள் படியாமல் போனால், மறுபடியும் அவர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்வாள் தூக்குவார்!

'ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசு நியமனங்களே கிடையாது. சாலைப் பணியாளர்களை சாவின் விளிம்பில் நிறுத்திய ஜெயலலிதா, ஒரு துளி மையில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய தொழிலாளர் விரோதி' என்று பாட்டாளிகளின் நலனுக்காகப் பாடுபடும் இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்தனர்.

கிரிமினல் குற்றவாளிகளைப் போல அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த ஜெயலலிதாவைக் கோட்டையிலிருந்து வெளியேற்ற கலைஞருடன் கைகோத்தனர். இன்றோ, தலா மூன்று தொகுதிகளைக் கேட்டு வரதராஜனும் பாண்டியனும் போயஸ் தோட்டத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து வாதிட்ட காட்சிகளை நாடு பார்க்கிறது. ஆம், தொகுதி ஆசையில் தங்கள் வர்க்கப் போராட்ட உணர்வையே தியாகம் செய்துவிட்டவர்கள் அவர்கள்.

பெரியார், அம்பேத்கர் இருவரின் வாரிசாக வலம்வர விரும்பும் திருமாவளவனிடம் பெரியாரின் நாற்காலிப் பற்றற்ற பண்பும் இல்லை; அம்பேத்கரின் போர்க் குணமும் இல்லை.

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை அவர் கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் அடங்க மறுத்ததும் இல்லை; அத்துமீறியதும் இல்லை. மாறி மாறி சரணடைவார். 'காங்கிரசை அழித்துவிட்டுத்தான் இனி அடுத்த வேலை' என்று அவர் சூளுரைத்த வார்த்தை நெருப்பில் சாம்பல் பூப்பதற்கு முன்பே தன்மானத்தைத் அவர் தாரை வார்த்திருக்க வேண்டாம்.

டெல்லியிலிருந்து பறந்து வந்த காங்கிரசின் குலாம் நபி ஆசாத்துக்குப் பக்கத்தில் போய் நின்று கனிவுப் புன்னகை பூத்திருக்கவும் வேண்டாம். இப்போதும் கெட்டுவிடவில்லை... 'எனக்குக் கலைஞருடன்தான் கூட்டு. காங்கிரஸ்காரர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று திருமா பகிரங்கமாக வாக்குமூலம் வழங்குவாரா?

கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை இருக்கவிடமாட்டோம் என்று காங்கிரஸ் நண்பர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், கலைஞருக்காக அவர்களை அரவணைக்கத் துடிக்கும் திருமாவளவனின் சுயமரியாதைத் தியாகம் என்னவொரு சிலிர்ப்பைத் தருகிறது... பார்த்தீர்களா தோழர்களே! பொதுவாழ்வில் அடிக்கடி ஏதாவது தியாகம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்தவர் மருத்துவர் இராமதாஸ். சந்தர்ப்பவாத அரசியல் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததை, 'இதுதான் சாணக்கிய முத்திரை' என்று கொண்டாட வைத்த பெருமை அய்யாவுக்கே உண்டு.

ஒரே நேரத்தில் கலைஞரோடும் காங்கிரசோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் சாகசக் கலையை அவரன்றி இந்த அரசியலில் வேறு யாரறிவார்? அவருக்குத் தேவை அதிகத் தொகுதிகள். அவருடைய மகனுக்குத் தேவை மாநிலங்களவை உறுப்பினர் பதவி. அடுத்த தேவை, மத்திய அமைச்சர் பதவி. இதில் ஈழமாவது எள்ளுருண்டையாவது! தேர்தலுக்குத் தேர்தல் மருத்துவர் செய்யும் கொள்கைத் தியாகம் பெரிதினும் பெரிதல்லவா!

திரைப்பட நடிகர்களை, தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவைத்துப் பார்ப்பதில் காங்கிரசுக்கு அளவற்ற ஆசை. எம்.ஜி.ஆர். இருக்கும்வரை அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்த காங்கிரஸ், அவருடைய மறைவுக்குப் பின் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்று கவரி வீசியது. இன்று விஜய்காந்த்துக்குப் பட்டுக்கம்பளம் விரித்து, 'கோடி அர்ச்சனை' நடத்தப் பெட்டியைத் திறந்து வைத்தும் பயனற்றுப் போனது. பேரம் படியவில்லை... விஜயகாந்த் கூட்டணி காணா தனிப்பெரும் வீரராகி விட்டார்.

போகட்டும்... காரணம் எதுவாயினும்... விஜயகாந்த்தின் 'மக்கள் கூட்டணி அமைக்கும் மனோதிடம்' ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கு ஏன் வரவில்லை? இலங்கைத்தமிழர் பாதுகாப்புப் பேரவை அமைத்து இனவுணர்வை வெளிப்படுத்திய இந்தக் கட்சிகள் ஏன் தேர்தல் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தொடர்ந்திருக்கக்கூடாது? தங்கள் கொள்கையின் வெற்றி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா..? அல்லது, மக்கள் தங்களை நம்பவில்லை... அதனால் தோற்றுவிடுவோம் என்ற அச்சமா? தேர்தலில் வென்றால், வைகோ பிரதமரா? தா.பாண்டியன் உள்துறை அமைச்சரா? பா.ம.க. தலைமையில் மத்திய அரசா? தன்மானம் துறந்து தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் வென்றால் நிதி மந்திரியா?

எதற்காக இவ்வளவு சகிக்கவொண்ணாத சமரசங்கள்?

ஈழமக்களுக்கான அரசியல் தீர்வை ராஜபக்ச அரசு விரைவில் வழங்கும் என்று கலைஞருக்கு பிரதமர் கடிதம் வரைந்திருக்கிறார். இது தமிழரின் வாக்குகளைப் பெற காங்கிரசும் கலைஞரும் நடத்தும் தேர்தல் திருவிளையாடல். சிங்களர் - தமிழர் சம உரிமையுடன் வாழ வழிவகுக்கும் கூட்டாட்சி முறை, தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, எல்லா மதங்களையும் பராமரிக்கும் மதச்சார்பற்ற மத்திய அரசு, தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் இணைந்த தமிழ் மாநிலம், இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழருக்கு உரிய இடம் என்ற அரசியல் தீர்வை பௌத்த சிங்களப் பேரினவாத அரசு அங்கீகரிக்க இந்திய அரசு வழிவகுக்குமா? இலங்கை சிங்கள நாடு. ஆட்சிமொழி சிங்களம் மட்டும். அரசு மதம் பௌத்தம். ஆளப் பிறந்தவர் சிங்களர் என்று அடம் பிடித்தால் தமிழீழத்தை அங்கீகரிக்க மத்திய அரசு முன்வருமா?

இரண்டில் ஒன்றையும் செய்யாமல் கடைசித் தமிழனும் செத்து மடிந்து அநாகரிக தர்மபாலன் என்ற சிங்களத் தலைவன் கண்ட கனவின்படி இலங்கை முழுவதும் சிங்களர் நாடாய் மாறுவதற்கு, மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதா?

இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்? நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.

ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபக்கம்; உறவிழந்தவர் மறுபக்கம்; உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம். பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல். கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம். இன்று தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில். மக்கள் நலனில் மருந்துக்கும் நாட்டமில்லாத இவர்கள் அமர்ந்து ஆடும் நாற்காலிகள், சுயநல கீதம் இசைத்தபடி இடையறாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.

'என் நம்பிக்கையின் பாடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. தோல்வியின் பூக்களால் உடைந்த என் இதயத்தில், யாரோ துயருற்ற நண்பன் ஒருவன் அதை வைத்திருக்கிறான்' என்று ஈழத்திலிருந்து ஈனஸ்வரத்தில் வரும் சோக இராகம் இன்று யார் காதிலும் விழவில்லை. நாற்காலி மனிதர்கள் செவிடாகிவிட்டனர்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

1 comments:

said...

நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் சார்ந்துள்ள கடசித் தலைமைகளும் கடைந்தெடுத்த தன்னலப் பேயர்களாகவும் போலித்தனஞ் சான்ற நடிகர்களாகவுமிருந்து ஈழத் தமிழர்களின் படுகொலைகளுக்குக் காரணமாயிருந்துள்ளனர்.

அந் நாற்பதின்மரும் அவர்களின் கட்சித் தலைமைகளும் ஈழத்தமிழரின் இன்னல்களுக்கும் அழிவுக்கும் காரணமாயிருந்ததற்காகவும் -

தமிழகத் தமிழரின் உணர்வுகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமைக்காகவும் -

தமிழகத்தில் பன்னிருவர் தீக் கிரையாக முழுக் காரணகர்களாக இருந்ததற்காகவும் -

தமிழ் மக்களால் தண்டிக்கப் பட்டாக வேண்டியவர்களாவர்.

தமிழ்மக்கள் கட்டாயம் அவர்களைத் தண்டிப்பார்கள்.