தகவல் தொழிற்நுட்பமும் இணையதள சேவைகளும் உலகெங்கும் பரவியிருக்கும் இக்காலத்தில் உலகில் உள்ள அனைத்து நிர்வாக அமைப்பு முறைகளும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியும் அதனுடைய செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுதல், சமூதாயக்கூடங்களை பதிவு செய்தல், விண்ணப்பங்களை பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை இணைதளம் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. http://www.chennaicorporation.gov.in/
மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காத்துக்கிடப்பது இதனால் தவிர்க்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை சென்னை மாநகராட்சி செய்துவருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சியை பாராட்டுகிறோம்.
ஆனால், தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனியும் வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழர்களே வாழவில்லையா? என்ற ஐயமும் இதனால் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளுவதற்காக தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியாம் தமிழை புறக்கணிப்பதும் அதுபற்றி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு செயல்படுவதும் வேதனையளிக்கிறது.

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம், தமிழனின் தலைநகரம், தமிழர்கள்தான் அங்கு வாழ்கிறார்கள், தமிழர்கள்தான் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியை புறக்கணிப்பதற்கான காரணம் என்ன?
இன்றைக்கு தகவல் தொழிற்நுட்பத்துறையில் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது என்பதும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் கணினி தொடர்புடைய அனைவரும் அறிந்ததே!
தமிழ்நாடு அரசும் பல துறைகளின் சேவைகளை இணையத்தின் வழியாக தமிழ் மொழியிலேயே வழங்கிவருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் வழியாக வழங்கும் செய்தி, தகவல்கள், மாநகராட்சியின் செயல்பாடுகள், இணையவழிச் சேவைகள், துறை செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், மண்டல விவரங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கும் விவரங்கள், படத்தொகுப்பு, அனுமதி பெற்ற நில அளவீட்டாளர்கள் விவரம், மாநகராட்சி திட்டமிடுதல் போன்ற அனைத்து விவரங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன.
சென்னை மாநகராட்சி என்ற பெயர், ஒரு திருக்குறள், நகர தந்தை (மேயர்) பற்றிய விவரம், நிதிநிலை அறிக்கை, விண்ணப்பங்கள் போன்ற ஒருசில விவரங்கள் மட்டுமே தமிழில் உள்ளன. இவைகளும் நேரடியாக தமிழில் இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட படியிலிருந்து ஒளிபடி (Scanning) எடுத்து இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சென்ன மாநகராட்சியின் இணையதளம் முழுமையாக தமிழல் இல்லாததற்கு யார் காரணம்?
ஆட்சியாளர்களா? அதிகாரிகளா? தொழிற்நுட்ப வல்லுனர்களா?
சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் மாடியில் “தமிழ் வாழ்க” என்று விளம்பரப் பலகை வைத்துவிட்டால் தமிழ் வாழ்ந்துவிடாது.
இதுபோல தமிழ்நாடு அரசின் பல்வேறு இணையதளங்கள் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

நமது அண்டை நாடான சீனா தன்னுடைய அனைத்து நிர்வாக நடைமுறைகளையும் அந்நாட்டின் சீன மொழி மற்றும் நான்கு உள்ளூர் மொழிகளில் செயல்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி சீன நாட்டின் செயல் திட்டங்களையும், செய்திகளையும், சீன மக்களின் கலை பண்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 48 உலக மொழிகளில் இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று.

அதுமட்டுமின்றி தமிழின் வழியாக சீன மொழியை பயிற்றுவிக்கும் திட்டமும் அதில் உள்ளது. சீனா இன்று உலகம் முழுவதும் மிடுக்கோடு நடைபோடுவதற்கு காரணம் என்னவென்று இப்போதாவது நமது இந்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும்.
சீன மக்கள் தன்னையும் தன் மொழியையும் உணர்ந்து செயல்பட்டு உலகுக்கு தான் யார்? என்று நிறுபித்து தன்மானத்தோடு வாழ்கிறார்கள்.
சீன மொழியைப் போன்று மிகத் தொண்மையான மொழியை உடைய தமிழன் தன்மானத்தோடு உலகில் வெற்றிநடைபோட தமிழ்நாடு அரசு தமிழை அரியணை ஏற்றுமா?