Thursday, July 24, 2008

இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது; சிறுபிள்ளைத்தனமானது - பழ. நெடுமாறன்-3

... ...
அன்னிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்பதற்கு இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவ உதவியை இலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் இந்தியாவே முந்திக் கொண்டு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க வேண்டும் என தில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள்.

அதன்படியே செயல்படுகிறார்கள். இதன் மூலம் இலங்கை மேலும் துணிவு பெற்றுவிட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இல்லை என்று கருதுகிறது.

இலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவும் பிற நாடுகளும் ராணுவ ரீதியான உதவிகளையும் நிதி உதவிகளையும் அள்ளி அள்ளித் தருவது என்பது எதற்காக? இந்நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதுதான் இந்நாடுகளின் நோக்கமாகும்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதனால் ஆபத்து வந்து சேரும்''.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த உண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் உணர்ந்திருந்தார். அன்னிய வல்லரசுகள் எதுவும் இலங்கையில் காலூன்ற அவர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள இன வெறி அரசை அனுமதிக்கவும் இல்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரையில் எந்த அன்னிய வல்லரசும் இலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.

ஆனால் ராஜீவ் கையாண்ட தவறான அணுகுமுறையின் விளைவாக இலங்கையில் அன்னிய வல்லரசுகள் தடம் பதித்தன. இதன் விளைவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் துணிவு சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய இந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. அதுவும் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.

இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் பலி கொடுக்கவும் இந்திய அரசு தயங்கவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

தொடரும்...
நன்றி: தினமணி

0 comments: