திருச்சியில் மத்தியச் சிறையிலிருக்கும் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவைச் சந்தித்த பிறகு வியாழக்கிழமை மருத்துவர் இராமதாசு அளித்த பேட்டி:
"வன்னியர் சங்கத் தலைவர் குரு கைது செய்யப்பட்டதில் சட்டம் தானாக அதன் கடமையைச் செய்யவில்லை; சட்டம் ஏவப்பட்டிருக்கிறது."
குருவின் மீது புகார் தெரிவித்ததாகக் கூறப்பட்ட குணசேகரன், செல்வி ஆகியோர் அவர்களாகவே முன்வந்து "குருவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை” என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து காவல் துறை வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி 2 நாள் நாடகத்தை அரங்கேற்றி, பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.
குருவை கைது செய்ததில் கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் எல்லாம் முதல்வர்தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
மதுரையில் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு வழக்குகள் போடப்பட்டன. முதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேயர், துணை மேயர் உள்ளிட்ட திமுகவினர் அன்றைய நாளே பிணையில் வெளிவந்துள்ளனர்.
2-ம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட "காட்டுவாசி' முருகன், ஓராண்டாகத் தலைமறைவாக இருந்துவிட்டு திடீரென மதுரை நிதிமன்றத்தில் சரணடைந்து, அன்றைய நாளே பிணையில் வெளிவந்தார்.
ஆனால், நாங்கள் புகார் கொடுக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறிய பிறகும் குருவுக்கு 15 நாள் காவல்- இரவோடு இரவாக கடத்தி 2 நாள் காவல்துறையினரின் காவலில் ரகசிய விசாரணை என்ற நாடகம்.
காட்டுவாசிக்கு ஒரு நீதி; காடுவெட்டிக்கு ஒரு நீதியா? பாமகவினர் துவண்டுவிட மாட்டார்கள். குறிப்பாக குரு துவண்டுவிட மாட்டார். சிறையில் அவர் உற்சாகமாக இருக்கிறார்.
குருவின்மீது மாவட்ட ஆட்சியர் தவறான நடவடிக்கை எடுத்துவிடக் கூடாது. அவ்வாறு எடுக்கப்பட்டால், பாமகவின் மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்திப்பார்கள்.
5 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் திமுகவின் ஆட்சி "பாஸ் மார்க்' பெறப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment