Thursday, July 10, 2008

தேசியம் - பாதுகாப்பு - சட்டம் - கைது?

வன்னியர் சங்கத் தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவருமாகிய “காடுவெட்டி” குரு வியாழக்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரனைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், குரு கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ம.க. முன்னாள் மகளிரணிச் செயலர் செல்வி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கிலும் குரு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் புகார் கொடுத்த இருவரும் எங்கள் புகாரில் குருவின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், காவல்துறையினர் வெள்ளைத்தாளில் எங்களிடம் கையெழுத்து வாங்கி பொய்புகார் பதிவு செய்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குருவுக்கு பிணை வழங்கக்கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் பொதுக் கூட்டங்களில் பேசி வந்தது மற்றும் 7 குற்ற வழக்குகள் உள்ளதாலும் குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தே. கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில், குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இரா. சுடலைக்கண்ணன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

0 comments: