Monday, July 28, 2008

வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒருபோதும் தயங்கவில்லை-பழ. நெடுமாறன்-4

... ... ...
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும்போது இந்தியக் கடற்படை ஒருபோதும் தலையிடாது என்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு உள்ளது. அதற்கேற்றாற்போல இந்திய அரசு நடந்து கொள்கிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையைத் திருப்தி செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். அவர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இலங்கையும் அதைப் பின்னணியில் இருந்து இயக்குகிற அன்னிய நாடுகளும் விரும்புகின்றன.

சிங்களக் கடற்படைக்கும் சிங்கள அரசுக்கும் எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒழிய இந்தியாவின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசைத் திருப்தி செய்ய இந்தியா எவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரி, அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் இந்திய அரசு தயங்கவில்லை. இப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள அரசின் போக்கில் மாற்றம் வரவில்லை.

1962-ஆம் ஆண்டில் இந்தியா சீனா எல்லைப் போர் வெடித்தபோது சீனாவை ஆக்கிரமிப்பாளர் என அறிவிக்க வேண்டுமென இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்தியபோது அதற்கு இணங்குவதற்கு பிரதமர் பண்டாரநாயகா மறுத்துவிட்டார்.

1971-ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இலங்கை வழியாகச் சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச, சிங்கள அரசு அனுமதித்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒருபோதும் தயங்கவில்லை.

இந்தியாவிடமிருந்து ராணுவ, நிதி உதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள அரசு, சிறிதளவு நன்றி கூட இந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள இந்த உண்மைகளை எண்ணிப் பார்க்கத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும்!

முற்றும்
நன்றி: தினமணி

0 comments: