Thursday, July 31, 2008

இலங்கைத் தூதரகம் செயல்படாமல் தடுக்க வேண்டும்-இந்திய பொதுவுடமை கட்சி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்திய பொதுவுடமை கட்சி சார்பில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டித்தின்போது பேசிய இந்திய பொதுவுடமை கட்சியின் தேசிய செயலர் து.இராசா அவர்கள் பேசியதாவது;

“1974-ம் ஆண்டு கச்சத் தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்பட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

பிறகு நெருக்கடி நிலை காலத்தில் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. கச்சத் தீவில் நமக்கு உரிமைகளை மீண்டும் பெறவேண்டும். இல்லையெனில் கச்சத் தீவு ஒப்பந்தத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கச்சத் தீவுக்கு அருகில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்ளதாக சொல்ல முடியாது என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் தமிழக மீனவர்களுக்கு மன்மோகன்சிங் அரசு துரோகம் இழைத்துவிட்டது. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

சர்வதேச கடல் எல்லையை குசராத், மகாராட்டிர மீனவர்கள் தாண்டும்போது, பாகிஸ்தான் அந்த மீனவர்களை சுட்டுத்தள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் இராசபக்சவிடம் பேச வேண்டும். தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நிரந்தர தீர்வுக்கு சம்மதிக்கவில்லை எனில் கச்சத் தீவு ஒப்பந்தத்தையே இரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இந்திய பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு அவர்கள் பேசும்போது

“தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா என்று கருதவேண்டியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 800 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இலங்கைத் தூதரகம் செயல்படாமல் தடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய பொதுவுடமை கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக து. இராச, இரா. நல்லகண்ணு, பழ.நெடுமாறன், தா. பாண்டியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி: தினமணி

0 comments: