1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. மாறாக அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.
மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். இவரது கட்சியின் ஆதரவு மத்திய ஆட்சி நீடிப்பதற்கு மிக மிக இன்றியமையாததாகும்.
இந்த நிலைமையில் தில்லிக்கு எச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஏமாற்றுவதாகும்.
யாருக்கு எதிராக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராக என்றால் அந்த அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கமாகும். அப்படியானால் தன்னை எதிர்த்து, தானே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.
இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு இந்தியா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான இந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை இந்தியாவுக்கு விடப்பட்ட அறைகூவலாக அல்லது குறைந்தபட்சம் அவமானமாகவோ கூட இந்திய அரசு கருதவில்லை.
ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவருக்குக்கூட இந்திய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னஞ்சிறிய இலங்கைக்கு இந்தத் துணிவு எங்கே இருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? இதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் உள்ளனவா? என்ற கேள்விகள் நமது உள்ளங்களைக் குடைகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இலங்கை இனப் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறை என்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் செல்வாக்குக்கு உள்பட்ட ஒரு நாடாக இலங்கை கருதப்பட்டது.
- இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்னையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.
- இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.
- இலங்கைக்கு எந்த வெளிநாடாவது ராணுவ ரீதியாக உதவி அளிக்க முன் வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.
- திரிகோணமலை மாவட்டத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலோ அன்னிய ராணுவத் தளங்கள் அமைவதை இந்தியா எதிர்க்கும்.
- இலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலை பகுதியின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.
இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக இந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட சிங்கள அரசின் பயங்கரவாதம் செயலிழந்தது.
இந்திய அரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள அரசு ஆளாக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள அரசு முதலில் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.
நன்றி: தினமணி
தொடரும்...
0 comments:
Post a Comment