Sunday, July 6, 2008

தமிழ்-தமிழர்-உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 06.07.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் “தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே முதன்மை பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும்” என்ற கொள்கையோடு தேர்தலை சந்தித்த திரு.இராம.நாராயணன் அவர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய அணியைச் சேர்ந்தவர்களும் அமோக வெற்றியடைந்துள்ளனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முன்னாள் தலைவர் இராம.நாராயணன் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னேற்ற அணியும் பஞ்சு அருணாசலம் தலைமையில் தமிழ்த் திரைப்பட ஜனநாயக முற்போக்கு அணியும் போட்டியிட்டன.

இராம.நாராயணன் அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பாலயா பிரபாகரன் ஆகியோரும் செயலாளர் பதவிகளுக்கு கே.முரளிதரன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு காசமொய்தீனும் போட்டியிட்டனர். இவர்களுடன் 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

பஞ்சு அருணாசலம் அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஏ.எம்.இரத்தினம், பாபுகணேசு ஆகியோரும் செயலாளர் பதவிகளுக்கு இராதிகா சரத்குமார், கேயார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு இராதாகிருட்டிணனும் போட்டியிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.யசோத்வர்தன், எல்.சந்திரகுமார், வி.பார்த்திபன் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் வாக்களிக்க 601 உறுப்பினர்கள் தகுதி பெற்றிருந்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தல் பணிகள் அனைத்தும் 2 காட்சிப் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 532 வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 4.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 394 வாக்குகள் பெற்று இராம.நாராயணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.ஏ.சந்திரசேகரன் (313 வாக்குகள்), அன்பாலயா பிரபாகரன் (340 வாக்குகள்) ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்தி பாண்டியன் 299 வாக்குகளும் கே.முரளிதரன் 286 வாக்குகளும் பெற்றும் வெற்றியடைந்தனர். காசாமொய்தீன் 345 வாக்குகள் பெற்று பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் தமிழ்-தமிழர் உரிமையை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் முதன்மைப் பொறுப்பிற்கு தமிழர்கள் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத்துறைகளிலும் இந்த வெற்றி கிடைக்க தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம்...

பத்தாண்டுகளுக்கு முன் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்த்திரைப்பட படைப்பாளிகள் சங்கம் தொடங்குவதற்கா இயக்குநர் பாரதிராசா போன்றவர்கள் எடுத்த முயற்சிக்கு ஒருசிலர் முட்டுக்கட்டை ஏற்படுத்தாமல் இதுபோன்று தமிழர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படத்துறையும் இன்றைக்கு தமிழனின் கையில் இருந்திருக்கும்.

அந்த இலக்கு நோக்கி தமிழ்த்திரைப்பட தமிழர்கள் பயனித்து வெற்றியடைய வாழ்த்துவோம்...


படம்: தினமணிக்கு நன்றி

0 comments: